தனிநபர் நிதி/முதலீடு
வேல்யூ இன்வெஸ்டிங்
[தொகு]
பகுதி - 1
[தொகு]
பங்குச் சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்வது எப்படி? முதலீட்டாளர்கள் அத்தனை பேரும் விடை தேடும் கேள்வி இதுதான்.
இந்தக் கேள்விக்கு விடை தேடிய பலரும் பல்வேறு விதமான வழிகளில் விடையைக் கண்டுபிடித்துச் சந்தையை வென்றதாகச் சொல்கின்றார்கள்.
'ஷேர்மார்க்கெட்டுக்கு எல்லாமே முன்னாடியே தெரியுங்க! அதனாலதான் நாளைக்கு வரப்போற நல்ல செய்தியும், கெட்ட செய்தியும் இன்னைக்கு விலையிலேயே ரிப்ளெக்ட் ஆயிட்டிருக்கு’ என்பவர் விலையே ஷேரின் மதிப்பு என்று நினைப்பவர். ஏனென்றால், விலை சந்தையில் இருக்கின்ற, தெரிந்த மற்றும் தெரியாத செய்திகளை முழுவதுமாக பிரதிபலிக்கின்ற ஒரு விஷயம் என்று தீவிரமாக இவர் நம்புபவர்.
இந்த நம்பிக்கையின் காரணமாக இவருக்கு ரிஸ்க் என்பது விலை இறங்குவதுதானே தவிர வேறொன்றுமில்லை. இவரைப் பொறுத்தவரை, விலை இறக்கத்திலிருந்து இவரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிதான் மிக மிக முக்கியம். அதைத் தேடியலைந்து ஒரு தாத்பரியத்தைக் கண்டுபிடித்தார்.
இவருடைய பிரச்னைதான் என்ன? ஒரு ஷேரை வாங்கி வைத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவில் அதன் விலை ஏறவில்லையென்றால் லாபக்குறைவு வரும். மாறாக வாங்கிய விலையை விட இறங்கினால் நஷ்டம். எதிர்பார்த்த லாபமும் குறையாமல் அல்லது நஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இவருடைய கவலை.
அந்த கவலைக்கு மருந்து, கையிலிருக்கும் ஷேர் இறங்கும்போது எந்த ஷேர் ஏறுகின்றது என்பதைப் பார்த்து ஒன்றுக்கொன்று எதிர்மறையாகச் செயல்படும் ஷேர்களை சரியான விகிதத்தில் வாங்கிப் போடுவதுதானே! இந்த செயலை பல்வேறு கணக்குகளைப் போட்டுச் செய்யும் முதலீட்டாளரின் பெயர் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்டர்.
மற்றொரு வகை இன்வெஸ்டரின் சிந்தனை வேறு மாதிரி. ஒன்றையன்று ஒப்பிடும் வழக்கமெல்லாம் நம்மிடம் இல்லை. ரொம்பவும் லாங் டேர்ம் எல்லாம் நமக்குச் சரிப்படாதுங்க. விலைதாங்க நமக்கு எல்லாம். ஒரு பாயின்ட்ல வாங்கி விலை ஏறினவுடன் மற்றொரு பாயின்ட்ல விக்கிறது நம்ம வேலைங்க. அதேமாதிரி ஒரு பாயின்ட்ல வித்து விலை இறங்கினவுடன் மத்த பாயின்ட்ல வாங்கவும் செய்வேங்க. எந்த பாயின்ட்ல வாங்கணும், எந்த பாயின்ட்ல விக்கணும் அப்படீங்கிறதைக் கண்டுபிடிக்கிறதுக்கு எங்கிட்ட ஒரு வித்தை இருக்குங்க.
மார்க்கெட்ல எதிர்பார்ப்புகள் மாறிக்கிட்டே இருக்குங்க. இப்போதைக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்போட மார்க்கெட் இருக்குது, நாளைக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு வரப்போகுதுன்னெல்லாம் என்னால கண்டுபிடிக்க முடியும் என்னோட டெக்னிக்கை வச்சுகிட்டு. அதன் பேருதான் டெக்னிக்கல் அனாலிசிஸுங்க!" என்பவர் மற்றொரு ரகம். இவரை டெக்னிக்கல் இன்வெஸ்டர் எனலாம்.
மூன்றாவது வகை இன்வெஸ்டரின் சிந்தனையைப் பார்ப்போம். நம்ம ஸ்டைலே வேறங்க. வேகமா லாபம் அதிகரித்து, கம்பெனியோட மதிப்பை வேகமா ஏற்றக்கூடிய ஷேர்கள் எது எதுன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சு வாங்கிப் போடறதுதாங்க நம்ம ஸ்டைல். உதாரணமா, 1990-கள் ஆரம்பத்துல இன்ஃபோசிஸ், விப்ரோ, 2000 ஆரம்பத்துல ஏசியன் பெயின்ட்ஸ்,டிவிஸ் லேப்புன்னு வேகமா வளர்ற பங்குகளை கண்டுபிடிச்சு வாங்கிப் போட்டேங்க. அதெல்லாம் சூப்பரா வளர்ந்துடுச்சுல்ல என்று சொல்லும் இவர்கள் வளர்ச்சிப் பங்குளை கண்டுபிடித்து வாங்கிப் போடும் குரோத் இன்வெஸ்டர்.
அட, இந்த பிரச்னையெல்லாம் நமக்கெதுக்குங்க! நிஃப்டியையோ சென்செக்ஸையோ லாங் டேர்மில பாருங்க. ஏறிக்கிட்டேதானே இருக்குது. அதனாலே அந்த இண்டெக்ஸில இருக்கிற பங்குகளை மட்டுமே வாங்கிப் போட்டுட்டு கண்ணை மூடிட்டு இருந்தா இண்டெக்ஸ் போற போக்கில நமக்கும் நாலு காசு லாபம் கிடைச்சுட்டு போகுது. இல்லீங்களா? இப்படி யோசிப்பவர்கள் நான்காவது வகை இன்வெஸ்டர்களான இண்டெக்ஸ் இன்வெஸ்டர்.
1990-ல நான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். மார்க்கெட்டுக்கு 2005-ல வந்தேன். அப்பவே, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், டிவிஸ் லேப்பெல்லாம் கைக்கெட்டாத உயரத்துல இருந்ததுங்க. நான் என்ன ஷேரை வாங்குறதுன்னு யோசிச்சேன். அப்பத்தான் என் நண்பர் ஒருத்தரு இந்த டெக்னிக்கை சொல்லிக் கொடுத்தாருங்க.
ஒவ்வொரு ஷேருக்கும் இரண்டு விஷயம் இருக்குது. ஒன்று மதிப்பு, மற்றொன்று விலை. விலையும் மதிப்பும் ஒண்ணா இருக்கறதுங்கறது ரொம்ப கஷ்டமான காரியம். சில சமயம் விலையைவிட மதிப்பு மிக அதிகமா இருக்கும்; சில சமயம் விலையைவிட மதிப்பு மிகக் குறைவா இருக்கும். மதிப்பைவிட விலை அதிகமா இருக்கற காலத்தைப் பத்தி நாம கவலைப்பட வேண்டியதில்லீங்க. மதிப்பைவிட விலை ரொம்பவும் குறைவா இருக்கறப்ப நாம உஷாரா ஆயிடணும். எதனால மதிப்பை விட விலை குறைவா இருக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணனும்.
ஒரு நல்ல கம்பெனி. நல்ல திறமையான மேனேஜ்மென்ட். ஏதோ ஒரு அசாதாரண சூழ்நிலையில விலை மதிப்பைவிட குறைவாயிருக்கு. இந்த அசாதாரண சூழ்நிலை மாறிடும். இன்னைக்கு இருக்கிற கஷ்டமான சூழ்நிலை தீர்ந்துடும். அதை தீர்த்துக்கிற திறமையும் கம்பெனியின் மேனேஜ்மென்டிற்கு இருக்குங்கிறதைத் தெரிஞ்சுகிட்டு அந்த ஷேரில முதலீடு பண்ணனும்.
இந்த டெக்னிக்கை உபயோகிக்க பொறுமையும் நாலெட்ஜும்தாங்க வேணும். எல்லா காலகட்டத்திலேயும் ஏதாவது ஒரு ஷேர் இந்த கேட்டகிரில வந்து விழுந்துகிட்டேதான் இருக்கும். கரெக்டா ஸ்டடி பண்ணி புடிச்சுப் போட்டுடணுங்க. நல்ல லாபம் பார்த்தேணுங்க என்று சொல்லும் இந்த ஐந்தாவது வகை இன்வெஸ்டர் ஒரு வேல்யூ இன்வெஸ்டர். இந்த வேல்யூ இன்வெஸ்டிங் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்த புதிய தொடர்.
எல்லா மெத்தடுலேயும் விலையும் மதிப்பும் ஏதாவது ஒரு ரூபத்துல வந்து போய்க்கிட்டேதானே இருக்குது. வேல்யூ இன்வெஸ்டிங்கில மட்டும் என்ன அப்படி ஸ்பெஷல் என்கிறீர்களா?வேல்யூ இன்வெஸ்டிங்கின் அடிப்படைத் தத்துவம் இதுதான். விலை, மதிப்பைவிட குறைந்திருக்கும்போது வாங்கணும். விலை, மதிப்பைவிட அதிகமா போகும்போது விற்கணும் அவ்வளவேதான்!
அட, என்ன சார் இது. ஒரு கம்பெனியைப் பத்தி கெட்ட செய்தி ஒண்ணு வருது. விலை, மதிப்பைவிட வேகமா இறங்கினா ஏமாந்து போய்டுவோமே என்பீர்கள்.
இதுக்கெல்லாம் விடை வேல்யூ இன்வெஸ்டிங்கில் இருக்குதுங்க. விடை மட்டுமில்ல, ஃபார்முலா இருக்கு. ரூல்ஸ்கூட இருக்கு. அதை எல்லாம் எப்படி கத்துக்கறதுன்னு விளக்கமாச் சொல்றேன். தொடர்ந்து படியுங்க..!