உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழின் தேவைகள்

விக்கிநூல்கள் இலிருந்து

முன்னுரை

[தொகு]

தமிழின் தேவைகள் என்ற நூலைப் படிக்கும் முன்... தமிழ் மொழியைக் காக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்த போது, அதற்காகச் சிந்தித்து, எதையெல்லாம் செய்தால் தமிழ் நீடிக்கும் என்ற வகையில் பல முடிவுகளை எடுத்து ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால், அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்களுக்கு தடையாக பல எதிர்க் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அக்கருத்துக்கள் தவறானவை என்ற நிலையில், உண்மையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் வேறு என்பதை நிலை நாட்டும் விதத்தில், பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத் தகவலை மனதில் வைத்து, இதற்குக் கீழே உள்ள நூலைப் படிக்கவும்.

வையகத்தில் இது வரை வழக்கில் இருந்த மற்றும் தற்காலத்தில் வழக்கில் உள்ள மொழிகள் அனைத்திலும் தமிழ் தான் மூத்த மொழி என்பதும், அதன் வளமும், இலக்கியச் செறிவும், போற்றுதற் குரியவை என்பதும், மனிதனுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் மிக அதிக பங்களிப்பை நல்கிய மொழி தமிழ் மட்டுமே என்பதும் யாவரும் அறிந்ததே! ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும், அச் சிறப்புக்கள், அம் மொழி மக்களால் பேசப்படும் பொழுது மட்டுமே மிளிருகின்றன. சிறப்புக்கள் மிக்க இருந்தும், ஒரு மொழி மக்களால் பேசப்படாத பொழுது, அச்சிறப்புக்களால் என்ன பயன்? இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கூட சிறப்புக்கள் மிக்க மொழிகள் தான்! ஆனால், இன்றைய நாட்களில் அவை புழக்கத்தில் இல்லை.

மொழி குறித்த சரியான விழிப்புணர்வு தொடக்கத்திலேயே இருந்திருக்குமேயானால் மொழிகள் அனைத்தும் காக்கப்பட்டிருக்கும்; தமிழர்களிடையே கூட சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் தமிழ் இது வரை புழக்கத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்வதைவிட தமிழ் ஒரு உன்னத மொழி என்பதாலேயே இன்றும் பயன் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகள் ஆங்கிலத்தில் கலந்து விட்டன; சமஸ்கிருதம் சமய, ஆகமக் கல்விகளில் மட்டும் வழங்கப்படுகிறது. கருனாடகத்தில் உள்ள ஒரு சிற்றூரில் மட்டும் சமஸ்கிருதம் பேசப்படுகிறது. மொழிகள் எவராலும் பேசப்படவில்லை எனும் பொழுது, அவை எப்பொழுதோ மக்களுக்கு பெரிய அளவில் பயன் அளித்தன என்பதற்காகப் போற்றுதலுக்குரியவையே அன்றி, அம் மொழிகளாலும், அவற்றின் சிறப்புக்களாலும் எப் பயனும் இல்லை. ஆனால் தமிழ் போற்றுதலுக்குரியது மட்டுமின்றி, பயன் அளிக்கவல்லதுமாகும் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நாம் சில பணிகளை உடனடியாகப் போர்கால அடிப்படையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மற்றும் கடமையில் உள்ளோம். தமிழை வாழ்விக்க வேண்டியது தமிழின் தேவை அல்ல; அது தமிழனின் தேவை, தமிழனின் கடமையுமாகும் என்பதை இத் தருணத்தில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும்.

உலகில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மொழிகள் தோன்றி மறைந்திருக்கிருன்றன. பெரும்பாலான மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்திருக்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மொழிகளுக்கே மொழியின் அடிப்படை அலகான ஒலியின் வரி வடிவங்களான எழுத்துக்களும் இருந்திருக்கின்றன. எழுத்துக்களே இல்லாத மொழிகளுக்கு இலக்கணமோ, இலக்கியமோ இல்லை என்பதைக்காட்டிலும், பெரும்பாலும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய இலக்கண, இலக்கியச் செறிவுகள் இல்லை எனச்சொல்லலாம்.

தமிழைப் பொருத்தளவில், பிற மொழியைச் சேர்ந்தவர்களும் வியக்கும் வண்ணம் இலக்கண, இலக்கியச் செறிவு மிகுந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. உண்மையில் தமிழின் பெருமைகளைத் தமிழன் உணரும் முன்னரே வேற்று மொழி அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்துணர்ந்து தமிழனுக்கும் உணர்த்தினர் என்பதை இங்கு குறிப்பிடுவது முதன்மையான தேவையாகும்.

மொழியியலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்துள்ளனர். தொல்காப்பியம், நந்நூல் சூத்திரம் போன்ற நூல்களே அதற்கான மிகச் சிறந்த ஆதாரங்களாகும். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் மொழியியல் என்னும் ஒரு துறையே தொடங்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன் மைய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு ஸ்கொட்லாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும் உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.வரலாற்று ரீதியாக, 5ம் நூற்றாண்டில் ஜெர்மானிக் குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும். 14-ம் நூற்றாண்டில் தான் ஆங்கில இலக்கியமே தொடங்குகிறது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளில், ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தின் ஒரு மிகப் பெரிய விளைவாக, மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் நிலையில், உலகளவில் ஆங்கிலம் யாரும் எதிர் பார்க்காத மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பழம்பெரும் மொழிகள் பல அழிந்து விட்டாலும், ஆங்கிலத்தைப் போல் பெருவளர்ச்சி இல்லையெனினும், குறைந்தது பயன்பாட்டிலாவது இருக்கின்ற மிகத்தொன்மையான மொழி தமிழே என்னும் நிலையில், அம் மொழியைத் தாய் மொழியாகப் பெற்றுள்ள நாம் நம் தாய் மொழியின் வள்ர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இயன்ற அளவு பணியாற்ற வேண்டும் என்பது நம் அனைவரது கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட ஆகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? தமிழ் மொழியில் பேச வேண்டும், எழுத வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும், அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும், பள்ளிகளில் குறைந்தது தமிழை ஒரு கட்டாயப் பாடமாக வைத்து இருக்க வேண்டும் எனப் பல சட்டங்கள், அரசாணைகள்! ஆனால், ஆங்கிலத்தைப் பயன்படுத்த பொது மக்களில் யாரையும் யாரும் வற்புறுத்துவது இல்லை.அன்றாட வாழ்வில் பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ இடையிடையே குறைந்த அளவிலாவது அல்லது முழு அளவிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எந்தச் சட்டமும், அல்லது ஆணையுமின்றியும் அனேகமாக அனைவரும் இயன்ற அளவில் தாமாக முன் வந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர்; அதைப் பெருமையாகவும் நினைக்கின்றனர். இதில், "English-னா எனக்கு ரொம்ப ஈஸி, ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டம்", என்றோ அல்லது தமிழில் பேச, அல்லது படிக்க முடியாதவர்களைப் போல் காண்பித்துக் கொண்டோ வெட்டிப் பெருமை அடித்துக் கொள்ளும் மடமையும் அடங்கும். எனவே, வெளிப்படையாகப் பேசினால், தமிழுக்கு இன்றளவில் உள்ள ஒரே பிரச்சினை ஆங்கிலம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் உண்மையில் முழுமையாகவும், சரியாகவும் தமிழில் பேச அல்லது எழுதத் தெரியாத பல கோடிக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் இக்காலத்தில் வழ்கின்றனர் என்று சொன்னால், அதை நம்புவோர் உண்டா? ஆங்கிலத்தில் பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ ஒரு மிக நுண்ணிய தவறு வந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் கூடத் தமிழில் ஒரு பெரிய தவறு இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலையே இன்னும் நீடிக்கிறது.

இன்றைய வாழ்வில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகம் சுருங்கிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே! உலகின் எந்த மூலைக்கும் சென்று வருவது மிகப் பெரும்பாலானவற்கு மிக எளிதான தேவையாகி விட்டது. உலகின் பல இடங்களுக்கும் அடிக்கடி சென்று வருவது அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு மிக முதன்மையான தேவை என்பதால், உலகில் உள்ள அனைத்துச் சொற்களையும் கையாள்வது, குறைந்தது மனிதர்களின், இடங்களின், அல்லது பொருள்களின் பெயர்களைச் சொல்வதற்காகவாவது, ஒரு கட்டாயத் தேவை என்ற நிலையில், அனேகமாக அனைவரும், தமிழில் ஏற்கனவே இருக்கும் ஒலிகளை அல்லது அவற்றின் வரி வடிவங்களை வைத்துக் கொண்டு பல சொற்களைச் சொல்ல முடியாததால்(எ-கா. பிரான்சு, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா மற்றும் பல கோடிக்கணக்கான சொற்கள்), எளிதாக ஆங்கிலத்தின் துணை கொண்டு இச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு யாரைக் குறை சொல்வது?

இப்படிப்பட்ட ஒரு நிலையில் அயற்சொற்களான ஆங்கிலச் சொற்களும், எழுத்துக்களும் தமிழர் வாழ்வில் அதிக அளவில் புகுந்து விட்டன என்ற கசப்பான உண்மையை மறைக்கவா முடியும்? அயற்சொற்கள் ஒரு மொழியில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றாலே அம் மொழி அழிவுப்பாதையில் செல்கின்றது என்பதுதானே உண்மை?

ஒருமுறை கோவையில் என்னுடன் உரையாற்றிக்கொண்டிருந்த அயல் நாட்டு மாணவி ஒருவர் தன்னுடைய பெயரை 'Truitia' (ட்ருய்ஷியா) என்று சொல்லி, அதைத் தமிழில் எழுதிக் காட்டச் சொன்னார். நான் டுருசியா, இட்ருசியா என்று என்னென்னவோ எழுதியும் அவர் அந்த உச்சரிப்புக்களைக் கேட்டு மன நிறைவடையவில்லை. பின்பு அந்த மாணவி சொன்னார், "It is not possible to write atleast a name in your language; Then how can it be claimed to ba a classical language?". அதற்கு நான், என்னுடைய மொழி, இன்றைய நிலையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மிகத் தொன்மையானது, பாரம்பரியம் மிக்கது, இலக்கண, இலக்கியச் செறிவு மிக்கது என்று எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன என்று சொன்னேன். அதற்கு அவர், எத்தனை பெருமைகள் இருந்தாலும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயன் தரவில்லை என்றால், மற்ற அனைத்தும் இருந்தென்ன பயன் என்று கேட்டார். அவருடைய கேள்வியிலும் ஒரு பொருள் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இது மட்டுமல்ல, அந் நேரத்தில் இந் நிலை, நான் பேசும் ஒரு மொழிக்கு நேர்ந்த ஒரு மிகப் பெரிய அவல நிலை என்றே எனக்குத் தோன்றியது. ஏனென்றால் ஒரு பெயரைச் சொல்லவே இப்படி என்றால், உலகில் உள்ள இன்னும் கோடிக்கணக்கான பெயர்களை என்னால் என் மொழியில் எழுதவோ, சொல்லவோ முடியாதோ என்ற கவலை என்னுள் ஏற்பட்டது. த்மிழில் மேலும் பல புதிய ஒலிகளையும் அவற்றிற்கான தனித்தனி வரி வடிவங்களையும் கொண்டு வந்தால் இப் பெரும் குறையைச் சரி செய்து விடலாமே! அதைச் செய்வது மிகவும் எளிதான ஒரு செயலே என்றாலும், அதை நிறைவேற்றும் நிலையில் நான் இல்லையே என்னும் ஒரு இயலாமையே என் முன் நின்றது. ஆனால், பின்னொரு நாளில் 'தமிழில் குயில் பாட வேண்டும்' என்று ஒரு தமிழ்க் கவிஞன் பாடினான். அதைக் கேட்ட எனக்கு மீண்டும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது. இனி தமிழில் அனைத்து ஒலிகளுக்கும் வரி வடிவங்கள் வரும் நேரம் மிக அருகில் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து இன்றுவரை எதுவும் நடக்கவில்லை! இதைப்போன்ற இன்னும் சில காரணங்களாலேயே ஆங்கிலம் எளிமையாக நம் மக்களை ஆட்கொண்டு விட்டதோ? அதாவது பல சொற்களைக் கையாள வேண்டிய தேவை இருந்தும், அதை நிறைவேற்றும் வழிகள் இல்லாததால் தான் தமிழ் இளைஞர்கள் ஆங்கிலத்தின் துணையை நாடுகின்றனரோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றிவிட்டது.

என்னைப் பொறுத்த அளவில், நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது எனது தமிழாசிரியர் கம்பராமாயணம் வடமொழியின் தழுவல் என்று சொன்னதைக் கேட்ட நாள் முதல் தமிழ் குறித்த கவலை என்னுள் புகுந்து விட்டது என்பதே உண்மை. இக்கட்டுரையை நான எழுதுவதன் நோக்கமே, மொழி என்பது அறிஞர்களும், கற்றறிந்தோரும் மட்டுமே பயன்படுத்தும் ஒரு தொடர்புக்கருவி அல்ல; என்னைப் போன்ற ஒரு சராசரி மனிதனும் பயன்படுத்தும் ஒன்று என்பதால், அதிலும், என் மொழி கடன் கொடுக்கலாமே ஒழிய பிற மொழிகளில் இருந்து எதையும் கடனாகப் பெறக்கூடாது என்ற மிகச்சரியான எண்ணத்தில் நான் இருப்பதால், என் போன்ற சராசரித் தமிழர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை அறவே களைந்து, தமிழ் ஒரு தனித்தமிழ் என்பதை வையகத்திற்கு உணர்த்தி, அதைப் பெரு வளர்ச்சி அடையச்செய்திட வேண்டும்; தமிழகத்தில் உள்ள எவரும் முழுக்க முழுக்க தமிழிலேயே சிந்திக்க, சிந்தித்த சிந்தனைகளை வெளிப்படுத்த ஒரு வழியைக் கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.

தமிழைத் தலை நிமிர்ந்து நின்று பயன்படுத்தும் விதமாக, அனைவரையும் முழுக்க முழுக்க தமிழிலேயே சிந்திக்க, பேச, எழுத வைக்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியும் என்பதே உண்மை. இதையெல்லாம் சொல்வது எளிது நடைமுறைப்படுத்த முடியாது என்று வாதிடுபவர்களுக்கு நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: முடியாது என்ற சொல்லைப் பயன்படுத்தும் உரிமை ஆயிரம் முறை முயன்று தோற்றவனுக்குக் கூட இல்லை; எந்த நடவடிக்கையுமின்றி, எந்த முயற்சியுமின்றி இருக்கும் பொழுது முடியாது என்று கூட சொல்வது தான் எளிது, முயற்சி இருக்கும் இடத்தில் முடியாது என்று சொல்வது தான் கடினம்! எனவே பல முறை முயன்றும் முடியவில்லை என்னும் நிலை வந்தால் கூட முடியாது என்பதைத் தவிர்த்து முடியும் என்ற ஒரு சிறிய நிலையாவது நம் எண்ணத்தில் இருக்க வேண்டும்.

எனவே தமிழை, பெரு வளர்ச்சியுடன் கூடிய தனித் தமிழாக மாற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டும். வளர்ச்சி என்பதை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:1. அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேசுவது, 2. இலக்கணத்தைப் புதிய இலக்குகளை நோக்கி கூர்மைப்படுத்துவதன் மூலம் இலக்கண, இலக்கிய வளத்தை அதிகரித்தல். ஒரு மொழிக்கு இவை இரண்டில் எது கிடைத்தாலும் அது அம்மொழியின் வளர்ச்சியைக் குறிக்கும். ஆங்கிலம் தனது சொல் வளத்தை (இலக்கண வளம்) அதிகரிக்க அனேகமாக முழுக்க முழுக்க பிற மொழிகளைச் சார்ந்தே இருந்திருக்கிறது. எனவே அதன் வளர்ச்சியை உன்னதமான வளர்ச்சி என்று சொல்ல முடியாது. ஆனால் தமிழ் அப்படிப்பட்ட மொழி அல்ல. மாறாக எந்தத்தேவைக்கும், பிற எந்த மொழியையும் சார்ந்திராத, தனியாகவே நின்று எந்தத் தொடர்புத்தேவையையும் நிறைவேற்றக்கூடிய உன்னதமான ஒரு மொழியாகும். எனவே தமிழைப் பாரினில் உயர்ந்த மொழியாக மாற்றுவது மிகவும் எளிதான செயலே ஆகும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்காக நாம் ஒன்றும் மிகப் பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டியதோ, சிறையில் வாடுவதோ, ஆண்டுக்கணக்கில் உணவின்றித் தவிப்பதோ தேவையில்லை. தமிழ் மொழிக்குள் எளிமையான சில மாற்றங்களைச் செய்தால் போதும். தமிழ் மொழியில் மாற்றங்கள் செய்வது சரியானதா என்ற கேள்வி எழுமானால், அதற்கு மறுமொழியாக ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். எந்த ஒரு மொழியும் ஒரே மனிதனால் ஒரே நாளில் உருவாக்கப் பட்டிருக்க முடியாது. எத்தனையோ மனிதர்கள் பல ஆண்டுகளில் எடுத்த கூட்டு முயற்சியே ஒரு மொழியாகும். அந்தக் கூட்டு முயற்சி அன்றே முடிந்து விட்டது என்ற நிலை இல்லையே! மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாலும், தேவைகள் என்றோ நிறைவடைந்து விட்டது என்ற நிலைமை எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை என்பதாலும், அத் தேவைகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நல்ல மொழியானது எப்பொழுதும் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐய்யமேதுமில்லை. தமிழை உருவாக்கியவர்கள், இன்றுடன் தமிழின் வளர்ச்சி நிறைவடைந்து விட்டது; இனி மேல் தமிழை யாரும் வளர்த்தல் கூடாது; உள்ளது உள்ளபடியே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டா சென்று விட்டார்கள்? நாமும் தமிழில் தேவையான மாற்றங்களைக்கொண்டு வர முடியும். அந்த மாற்றங்கள் முழுக்க முழுக்க நம்முடையதாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய முழு முதல் தேவையாகும். ஏனென்றால் இப்போது, தமிழில் ஆயிரக்கணக்கான அயற்சொற்கள் புழக்கத்தில் இருந்தாலும், அச்சொற்கள் இன்னும் அயற்சொற்களாகவே நீடிக்கின்றன; தமிழ்ச் சொற்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால், தமிழ் இப்பொழுதும் தனித் தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் தமிழுடைய, தமிழனுடைய பெருமையும் கூட! அந்தத் தனித்தமிழுக்கு எந்தப் பங்கமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நம்முடைய முதன்மைத் தேவை என்ற நிலையில் இத் தனித் தமிழ் என்றும் நிலைத்திருக்கும் வண்ணம், தமிழின் தன்மைகள் கெட்டுப் போகாத வண்ணம், வேற்று மொழிகளின் தன்மைகளைக் கடன் வாங்காமல், தமிழுக்கே உரிய முறையில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். எனவே தமிழில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற தேவைக்குள் நுழைவோம். எழுத்துக்களே ஒரு மொழியின் அடிப்படை அலகுகளாதலால் முதலில் எழுத்துக்களைப் பற்றிப் பார்ப்போம்!

எழுத்து என்று வரும்பொழுது, வையகத்தில் உள்ள அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துக்களை(ஒலியின் வரி வடிவங்களை) உருவாக்குவதற்கு நடைமுறையில் வாய்ப்புக்கள் இல்லை; பெரும்பாலும் மனிதர்கள் எழுப்பும் ஒலிகளுக்கு, அதுவும் ஓரளவுக்குத் தான், துல்லியமான எழுத்துக்கள் உள்ளன. அவையின்றி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளில் அனேகமாக எதற்கும் வரி வடிவம் இல்லை என்றே சொல்லலாம். (பசு 'அம்மா' என்றும், பூனை 'மியாவ்' என்றும் கத்துகிறது என்ற விதி விலக்குகளும் உண்டு). மேலும், இசைக் கருவிகளில் உருவாகும் இசைத் துளிகளைக் குறிக்க பல குறியீடுகள் உள்ளன. முயன்றால் நம்மால் மிகப் பெரும்பான்மையான ஒலிகளுக்குத் தமிழில் எழுத்துக்களை உருவாக்க முடியும்; உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் முடியும். அண்மைக்காலங்களில் வையகத்தில் உள்ள எந்த மொழியிலும் எழுத்துக்களைப் பெருக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அண்மைக்கால உலகிலேயே முதன் முதலாகத் தமிழில் இம்முயற்சியைத் தொடங்கி, மொழிகளிலேயே தமிழில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஒலிகளுக்கான வரி வடிவங்களை உருவாக்க முதல் முயற்சிகள் தொடங்கப்பட்டன என்ற பெருமையையும் நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மொழியின் தேவைகள் முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய மொழிகளில் அல்லது ஆங்கிலம் உள்ளிட்ட பல முதன்மையான அயல் நாட்டு மொழிகளில் புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ள இந்த நூற்றாண்டில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கிலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, மிக அதிகம். அந்த எழுத்துக்கள் குறிக்கும் ஒலிகளும் அதிகமே! சில ஒலிகள் வேண்டுமானால் இல்லை என்று சொல்லலாம். ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்கள் இருந்தும் பல நேரங்களில் அவற்றால் முழுப் பயன் இல்லை என்பதே உண்மை. எழுத்துக்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் தான் அவை முழுப் பயனையும் அளிக்கும். எடுத்துக்காட்டாகச் சில ஒலிப்பயன்பாடுகளைப் பார்ப்போம். பட்டம் என்ற சொல்லில் வரும் ட என்ற எழுத்து ta என்ற ஒலியிலும், அண்டம் என்ற சொல்லில் வரும் ட என்ற எழுத்து da என்ற ஒலியிலும், தந்தம் என்ற சொல்லில் முதலில் வரும் த என்ற எழுத்து ஆங்கிலத்தில் பயன்படும் tha என்ற கூட்டெழுத்துக்கள் தரும் ஒலியையும், இரண்டாவது வரும் த, dha-வின் ஒலியையும் தருகின்றன. பம்பரம் என்ற சொல்லில் முதலில் வரும் ப, pa என்ற ஒலியையும், இரண்டாவது வரும் ப, ba என்ற ஒலியையும் தருகின்றன. காகம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், முதலில் வரும் கா என்ற எழுத்து, kaa என்ற ஒலியையும், இரண்டாவது வரும் க என்ற எழுதுது ha என்ற ஒலியையும் தருகின்றன. சுமை என்ற சொல்லில் உள்ள சு, su என்ற ஒலியில் வருகிறது; அச்சு என்பதில் உள்ள சு, chu (சொ-so-ன்னான், வரச்சொ-cho-ன்னான்) என்ற ஒலியில் வருகிறது. அஞ்சுகம் என்ற சொல்லில் சு என்ற எழுத்து ju என்ற ஒலியில் வருகிறது. க என்ற எழுத்து ங்- உடன் சேர்ந்து வரும் பொழுது(இங்கணம்) ga என்ற ஒலியில் வருகிறது. ப(pa) என்ற எழுத்து ம்- குப் பின்னால் வரும் பொழுது ba என்றும், த(tha) என்ற எழுத்து ந்-ற்குப் பின்னால் வரும்பொழுது dha என்றும், ச(sa) என்ற எழுத்து ச்-ற்குப் பின்னால் வரும் பொழுது cha என்றும் அதே ச என்ற எழுத்து, ஞ்-ற்குப் பின்னால் வரும் பொழுது ja என்றும் ஒலிப்பதன் மூலம் இவ்வொலிகளை நாம் பயன்படுத்துவது தெளிவாக விளங்குகிறது. ஆனால் இந்த ஒலிகளுக்குத் தனிதனியாக எழுத்துக்கள் இருந்திருந்தால், நாம் வேறு இடங்களிலும் பயன்படுத்தியிருக்க முடியுமே! ல-விற்கும், ள- விற்கும், ழ-விற்கும்(மற்றும் ர-ற, ந-ன-ண விற்கும்) இடையில் உள்ள மிக நுண்ணிய வேறுபாட்டைக்கூட உணர்ந்து அதற்கெனத் தனித் தனி எழுத்துக்களைப் பயன்படுத்த முடிந்த தமிழனால், pa-விற்கும், ba-விற்கும் அல்லது sa(ஸ)-விற்கும், sha (ஷ)- விற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து தனித்தனி எழுத்துக்களை ஏன் படைத்திருக்க முடியாது? கண்டிப்பாக முடிந்திருக்கும். அன்று அதற்கான தேவை இருந்திருக்காது; அத் தேவையை மையமாகக் கொண்ட சொற்கள் இருந்திருக்காது என்பதே உணமை. இன்று அவ் வெழுத்துக்களை நாம் உருவாக்க வேண்டியது நம் கட்டாயத்தேவையாகும். அப்பொழுது தான் மொழியைக் காக்க முடியும், எளிமையாகப் பயன்படுத்த முடியும். இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு தமிழன் தயாராகவில்லை என்றால், தமிழனே தமிழை அழிக்கும் குற்றத்தைச் செய்கிறான் என்ற நிலையே ஏற்படும். இதில், cha என்ற ஒலியை எப்பொழுதும் முதல் சொல்லில் முதல் எழுத்தாகப் பயன்படுத்த முடியாது என்பது இன்னொரு குறை. கோவையில் இப்பொழுது உள்ள அரசு போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் போக்குவரத்துக் கழகம் என்றழைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதை ஆங்கிலத்தில் Cheran Transport Corporation என்று எழுதினர். இங்கு சே என்ற எழுத்து, Se(Seran) என்றில்லாமல் Che (Cheran)என்று வழங்கப்பட்டது. முதல்ச் சொல்லின் முதல் எழுத்தாக ச என்ற எழுத்து வரும் பொழுதும் cha என்ற ஒலியைத்தரும் வண்ணம் தமிழிலும் இருந்திருந்தால், Cheran என்பதைக்கூடத் தமிழில் எழுதியிருக்க முடியுமே. Chennai (Sennai), Chemmozhi (Semmozhi) ஆகிய சொற்களிலும் இதே குறை இருப்பதைக் காணமுடிகிறது. தமிழில் பேசும் பொழுது Semmozhi என்றும், ஆங்கிலத்தில் பேசும் பொழுது Chemmozhi என்றும் உச்சரிப்பது தேவைதானா? தமிழகத்தில் கிழக்கு மாவட்டங்களில் ச(sa) என்பதை, முதல் சொல்லின் முதல் எழுத்தாக வரும் பொழுதும் cha என்றுதான் உச்சரிக்கின்றனர்; அவர்கள் அவ் வெழுத்தை எண்ணுவதும், எழுதுவதும் cha என்றுதான்; அது அவர்களுடைய வட்டார மொழி வழக்கு; அதை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை; எனவே, அதாவது அவர்கள் அப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதாலேயே sa எனபதை cha என்றும் உச்சரிக்கலாம்; ச என்பது ஒரு fricative எழுத்தா அல்லது ஒரு affricative எழுத்தா என்று முடிவு செய்வது இயலாத செயல்; எனவே தமிழில் ஏற்கனவே sa-வும் இருக்கிறது, cha-வும் இருக்கிறது; புதிதாக cha என்ற எழுத்து தேவையற்றது என்ற ஒரு வாதமும் உள்ளது. இந்த வாதத்திற்கு எதிராக எனது கருத்தை ஆழமாகவும், ஆணித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் சில முதன்மையான எடுத்துக்காட்டுகளுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மொழியியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆறு கிலோ மீட்டருக்கும் ஒரு மிகச் சிறிய மாற்றத்தையாவது ஒரு மொழி சந்திக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்கள் நன்றாக உணரப்படும் அளவிற்கு அதிகரிக்கும் பொழுது அந்த இடத்தில் பேசப்படும் மொழி சிறிது மாறுபடுகிறது. இந்த மாறுபாடுதான் வட்டார வழக்கின் அடிப்படையாகும். இப்படித் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே செல்லும் பொழுது ஒரு புதிய மொழியே பிறக்கிறது. இப்படித்தான் தமிழ் மொழியிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்திருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் பேச்சு வழக்கிற்கு மட்டுமே பொருந்துமே ஒழிய, எழுத்து வழக்கிற்கு அல்ல. இன்றைய நிலையில் தமிழகத்தில், பேச்சுத்தமிழைப் பொறுத்தளவில் வட்டார வழக்குகள் பல இருந்தாலும், பள்ளிப் பாட நூல்களால் அறிமுகப்படுத்தப்படும் தமிழ் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அறிமுகப்படுத்தப்படும் தமிழால், வட்டார வழக்குகள் கூட மிக மிக மெதுவாக குறைந்து வருகின்றன என்பதைச் சில வேளைகளில் நாம் உணர முடிகிறது. முன்பெல்லாம் முப்பது என்ற சொல்லைக்கூட, கிழக்கு மாவட்ட மக்களில் சிலர் நுப்பது என்றே உச்சரித்து வந்தனர் என்பதும், இப்போது அது கூடப் பெரும்பாலும் மாறி விட்டது என்பதும், மிக நுணுக்கமாகக் கவனித்தவர்களுக்கு நன்றாக நினைவிருக்கும். உயிர் என்ற சொல்லைக்கூட உசிர், உசிரு, அல்லது உசுரு என்று முன்பு உச்சரித்து வந்ததும் தற்பொழுது அது உயிர் என்று பெரும்பாலும் மாறிவிட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது. கோவையில் முன்பு பேசப்பட்ட கொங்குத்தமிழ் தற்பொழுது பெரும்பாலும் மாறிவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. இனிமேல் படிப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே தமிழ் பேசப்படும் ஒரு நிலையும் வரலாம்; அப்போது வட்டார வழக்குகள் கூட மறைந்து விடலாம்.

இந் நிலையில் சில பொது வழக்குகளைப்பார்த்தால், அதாவது வானொலி, தொலைக்காட்சி, மேடைப்பேச்சு, திரைப்பட வசனங்கள், பாடல்கள் என்று எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படும் முதல்ச் சொல்லின் முதல் எழுத்தாக ச என்ற எழுத்து வரும் பொழுது, மிகப் பெரும்பாலும் sa என்றே வருகிறது. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு என்ற பாடலில் சங்காரம், சங்கே ஆகிய சொற்களில் வரும் ச என்ற எழுத்து sa என்றே உச்சரிக்கப்படுகிறது. வானொலியில் செய்திகள் என்பது எப்பொழுதும் seithiகள் என்றே உச்சரிக்கப்படுகிறது. சங்கீதம் பாட என்ற பாடலில் சங்கீதம் என்பதில் உள்ள ச, sa என்றே உச்சரிக்கப்படுகிறது. தாய் மீது சத்தியம் என்ற படத்தின் பெயரில் வரும் ச, sa என்றே உச்சரிக்கப்படுகிறது. Madrass என்பது Chennai என்று மாற்றப்படுவதற்கு முன்னால், Chennai என்பது Sennai என்றே முழுக்க முழுக்க உச்சரிக்கப்பட்டது நினைவிருக்கலாம். சீனாவை ஆங்கிலத்தில் China என்று உச்சரித்தாலும், தமிழ்ப் பொது வழக்கில், Cheenam என்று யாரும் சொல்வதில்லை. மாறாக Seenam(சீனம். எ-கா. சீனத்துப் பட்டு மேனி) என்று தான் இதுவரை அனைவரும் உச்சரித்து வந்துள்ளனர். முதன்மையான திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் கூட இப்படி வரும் ச-வை sa என்றே எப்பொழுதும் உச்சரிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பகுதி இரண்டில் ஆங்கில மொழி கற்றுத்தரப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆங்கிலத்தில் sa என்பது வேறு, cha என்பது வேறு. salute என்பதை chalute என்று உச்சரித்தாலோ, sin என்பதை chin என்று உச்சரித்தாலோ, chance என்பதை sance என்று உச்சரித்தாலோ, children என்பதை sildren என்று உச்சரித்தாலோ, அல்லது saving என்பதை chaving என்று உச்சரித்தாலோ கண்டிப்பாக ஆங்கில ஆசிரியர் மதிப்பெண் வழங்க மாட்டார். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் உள்ள cha மற்றும் sa ஆகிய உச்சரிப்புக்களை நன்றாகப் புரிந்து கொண்டு அதைப் பழகிக் கொண்ட தமிழ் மக்களால், அவர்களது தாய் மொழியில் உள்ள ஒரு பொது வழக்கினை ஏற்றுக்கொண்டு அதைப் புரிந்து கொள்ளவா முடியாது? கண்டிப்பாகக் காலப்போக்கில் முதல்ச் சொல்லின் முதல் எழுத்து ச-வாக இருந்தால், அது sa என்றுதான் உச்சரிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கும் மேல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், சிங்கப்பூர் வானொலி, சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, (இ)லண்டன் BBC-யின் தமிழ் ஒலிபரப்பு போன்ற அனைத்து ஊடகங்களும் ச-வை sa என்றுதான் முழுக்க முழுக்க உச்ச்ரித்தன. புது டி(தி)ல்லியிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்ட, ஆஹாச வாணியின் பிரபல தமிழ்ச் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயண் சுவாமி கூட ச என்பதை எப்பொழுதும் cha என்று உச்சரித்தது கிடையாது. சென்னை Cheம்பரம்பாக்கம் ஏரி, திருநெல்வேலியின் அருகே உள்ள Cheரன்மாதேவி போன்ற அரிய மிகச்சில விதி விலக்குக்ளும் இங்கு என்னால் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக, சின்னச்சாமி என்பதில் உள்ள சி என்பது Chi என்றே உச்சரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றும் தூத்துக்குடியில் உள்ள சின்னச்சாமி நகர் என்பது Sinnasamy Nagar என்றே எழுதப்படுவதைக் காணலாம். தூத்துக்குடி அருகே உள்ள சிப்காட் தொழில் வளாகததைக் கூட அங்கிருக்கும் மக்களே Sipகாட் என்றுதான் உச்சரிக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சாயல்குடி, சாயர்புரம், சங்கரன் கோவில், சங்கரப்பேரி, சவேரியர்புரம் ஆகிய இடங்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களும் ச (sa) என்றே உச்சரிக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் உள்ள சாந்தி நகர் மற்றும் சாத்தூர் கூட, sa என்ற உச்சரிப்பில் தான் இன்றும் வழங்கப்படுவதை காணலாம். இது போல் இன்னும் ஆயிரக்கணக்கில் எடுத்துக்காட்ட முடியும்.

எனவே, ஏற்கனவே தமிழில் ச(sa)-வும் இருக்கிறது, ச(cha)-வும் இருக்கிறது என்ற வாதத்தை விட்டு விட்டு ச்ச-cha என்ற ஒலிக்கு புதிய எழுத்து(வரி வடிவம்) ஒன்று வேண்டும் என்ற நிலைக்கு அனைவரும் வர வேண்டும்.

மேலும், பாரதியார், சிதம்பரம் ஆகிய சொற்களை ஆங்கிலத்தில் Bharathiaar, Chidambaram என்றும், தமிழில் Parathiar, Sithambaram என்றும்தானே எழுத முடிகிறது? தமிழகத்தில் வட மொழிச் சொற்களும், எழுத்துக்களும் தாராளமாகப் புழக்கத்தில் இருந்த பொழுது, சுவிட்சர்லாந்து என்பதை ஸ்விட்ஸர்லாண்ட் என்று எழுதினர்; அது ஓரளவிற்குச் சரியான உச்சரிப்பையும் தந்தது. ஆனால் இப்பொழுது சுவிட்சர்லாந்து என்று எழுதுகின்றனர். இப்படிச் சொற்களின் உச்சரிப்பு சிதையும் பொழுது, பல நேரங்களில் அவற்றின் பொருள் விளங்காது. ல, ர ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன் இ என்ற எழுத்தையும், லோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் உ என்ற எழுத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதும், சில எழுத்துக்களைக் கொண்டு சொற்களைத் தொடங்கக் கூடாது என்ற விதியும் தேவைய்ற்றது என்றே கொள்ளவேண்டும். னகரம் என்று ஒரு சொல் ஏற்கன்வே இருக்கிறது. ஆனால் ன-வைக் கொண்டு எந்தச் சொல்லையும் தொடங்கக்கூடாது என்று சொல்வது ஏனோ? தமிழின் விதிகளே தமிழ் வளர்ச்சிக்கு எதிராக இருக்குமேயானால் அவற்றை மாற்றுவதில் தவறேதுமில்லை. பிற மொழிச்சொற்களை ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு, இது எவ்வளவோ மேல். மேலும் ஏ என்ற ஒரே எழுத்தை வைத்துக் கொண்டே ஏணி என்ற சொல்லையும், ஆங்கிலத்தில் எறும்பைக் குறிக்கும் சொல்லான ஏன்ட் என்ற சொல்லையும் எழுத வேண்டியிருக்கிறது, இரண்டு வகையான ஒலிகளுக்கான எழுத்துக்களையும் தமிழிலும் உருவாக்க முடியுமே! எனவே, எழுத்துக்களில் da, dha, ga, gha, ja, cha, sa, sha, ha, போன்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை தமிழில் உடனடியாக உருவாக்க வேண்டும். அதே போல் ஆங்கிலத்தில் உள்ள F, Z ஆகிய எழுத்துக்களுக்கு இணையான ஒலிகளைத் தரக்கூடிய இரு எழுத்துக்களையும் நாம் உருவாக்க வேண்டும். தமிழில் உள்ள ஆயுத எழுத்தின் பயன்பாடு பரவலாக்கப்படவேண்டும். புதிதாக உருவாக்கப்படும் எழுத்துக்களும் கணினி உள்ளிட்ட இன்றைய அறிவியல் தேவைகளுக்கு ஏற்றாற்போல் சிறிய கோட்டுத்துண்டுகளை இணைப்பதன் மூலம் எழுதும் வகையில் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. வளைவுகள் மற்றும் நெளிவுகளைக் கொண்டதாக இருத்தல் ஆகாது. முயன்றால், இது மிக, மிக எளிதான செயல் தான் என்பதையும் நாம் உணரவேண்டும்.

இவையின்றி, கணிதம், இயற்பியல், மின்னியல், மின் அணுவியல் என பல பாடப்பிரிவுகளில் பயன்படுத்தப்படும் ட்ரிக்னாமாட்ரியில் வரும் ஸைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா, ஸிக்மா, பை போன்றவற்றிற்கு தமிழில் எந்த எழுத்தையோ அல்லது சொல்லையோ பயன்படுத்தவும் வழி இல்லை. எண்களையே தமிழில் எழுதாத போது இவற்றை எப்படி எழுத முடியும்?

எனவே பொறியியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படும் அனைத்து அயர்சொற்களையும் தனியாகப் பிரித்து எடுத்து, அவற்றிற்கிணையான புதிய தமிழ் சொற்கள், எழுத்துக்கள், தேவைப்பட்டால் குறியீடுகளையும் உருவாக்க உடனடி போற்கால நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். இதுவும் மிக மிக எளிதான ஒன்றே!

இனி, சொற்கள் குறித்த சில தேவைகளைப் பார்ப்போம். சொற்கள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் பயன்படுத்தப்படும் சொற்கள் அனைத்தும் கண்டிப்பாகத் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்க வேண்டும் என்பது மிகச் சரியான இலக்குதான் என்பதை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் தன் தனிக்கால்களால் நின்று தன் முழுத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்- தமிழ் எப்பொழுதும் எதற்காகவும் பிற எந்த மொழியையும் சார்ந்திருக்க வேண்டிய ஒரு தேவையே இல்லாத உன்னதமான ஒரு மொழி என்ற உண்மையை நிலை நாட்ட முடியும். தனித்தமிழாக இருப்பது தமிழின் தனித்தன்மையும் கூட!

ஆனால், இன்றைய தொடர்புத் தேவைகளை நிறைவேற்ற, பல நேரங்களில் அயற்சொற்களின் துணையை நாட வேண்டிய மிகக் கசப்பான நிலையில் நாம் உள்ளோம் என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இந் நிலையை மாற்றமுடியும் என்பதில் துளியும் மாற்றம் இல்லை. அயற்சொற்கள் என்று சொன்னால், பெரும்பாலும் அனைவரும் நினைப்பது ஆங்கிலச் சொற்களைத்தான் என்றாலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, இனி மாற்ற முடியாது என்ற நிலையில் வடமொழிச் சொற்களும் மிகுதியாகத் தமிழில் கலந்துள்ளன. உண்மையில் வடமொழிச் சொற்களுக்கெதிரான மிகப்பெரிய இயக்கங்கள் ஏற்கனவே இருந்திருக்கின்றன. ஆனால், கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவற்றின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க முடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும். அண்மையில் மிகச்சில ஆண்டுகளில் இந் நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன என்பது வரவேற்கத்தக்கது. உலகிலேயே மொழிக்காக அதிகம் உழைப்பவர்கள் தமிழர்கள் தான் என்ற இன்றைய நிலையில், தமிழில் அயற்சொற்கள் என்பது தமிழர்களின் தமிழுக்கான உழைப்பை வீணடிப்பதாகும்.

தமிழில் கலந்து, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, இனி மாற்ற முடியாது என்ற நிலையில் உள்ள சொற்களை (எ-கா. இந்தியா, இலங்கை, மத்தியப் ப்ரதேஷ், மற்றும் இது போன்ற பெயர்ச்சொற்களை மட்டும்) அப்படியே விட்டுவிட்டால் கூட , இனியாவது புதிய தமிழ்ச் சொற்களைக் கண்டிப்பாக உருவாக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால், தமிழும் மற்ற சராசரி மொழிகளைப் போல் எந்த மொழியிலிருந்தும் எதை வேண்டுமானாலும் கடன் வாங்கித் தன் தொடர்புத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சாதாரண மொழி என்றாகிவிடுவது மட்டுமல்ல, தமிழ் செம்மொழி என்பதற்கான தகுதிகளில் ஒன்றை இழந்து விடும் என்பதும் மிகக் கொடிய உண்மையாகும். இதுவரை தமிழ் அப்படிப்பட்ட ஒரு சாதாரண மொழி என்பது உண்மையில்லாத போது, நம்முடைய முயற்சிகள் சரியான வழியில் இல்லாவிட்டால் இனிமேல் அது உண்மையாகிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வழக்கமாக நம் மக்கள் பயன்படுத்தும் பஸ்(Bus), நியூஸ்(News) அல்லது இது போன்ற எண்ணற்ற ஆங்கிலச்சொற்களைப் பொருத்தமட்டில் இவை ஆங்கிலச் சொற்கள் தான் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், வடமொழிச் சொற்களைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. பல நேரங்களில் நன்றாகக் கற்றறிந்த தமிழ் அறிஞர்களுக்கு மட்டும் தான் இவை பற்றி தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற முடிவுடன் என்னைப் போன்ற ஒரு சராசரித் தமிழன் முயற்சி எடுத்தால், பல சொற்கள் தமிழ்ச் சொற்களா அல்லது அயற்சொற்களா என்பதைக் கண்டறிவதில் குழப்பமே மிஞ்சுகிறது. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம். தேசிய கீதம், கவிதை, கிராமம், சாதாரண, சாமான்யன், தியாகம், வாகனம், சத்தம், சுத்தம், பிரதமர், நியாய விலைக்கடை, உச்ச நீதி மன்றம், கன்னி, சேவை, பிச்சை, பூ(புஷ்பம்), அவசியம், விசேஷம், சராசரி, சங்கம், சங்கமம், குமார், குமரன், கேசம், அபிமானம், மாநகர், நகர், போன்ற சொற்கள் வடமொழிச் சொற்கள் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும்(இதுவும் சரியா அல்லது தவறா என்பது தெரியவில்லை), பல சொற்கள் மிகப்பெரிய குழப்ப நிலையையே ஏற்படுத்துகின்றன. இதற்குக் காரணம் என்னவென்றால், வடமொழியிலும் அதே போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது தான். வேதாரண்யம் என்ற சொல்லை திருமறைக்காடு எனவும், ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர் எனவும் மாற்றிய பின்பு, இவற்றைப் போன்ற சொற்களைப் பார்த்தாலே அவை வடமொழிச்சொற்களாக இருக்குமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. நடுவண் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், லேகா அதிகாரி என்று இந்தியிலும், Accounts Officer என்று ஆங்கிலத்திலும், கணக்கு அலுவலர் என்று தமிழிலும் எழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது, அதிகாரி என்பது தமிழ்ச் சொல்லா அல்லது இந்திச் சொல்லா என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. ஏனென்றால் திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்குப் பத்து குறள்கள் என்று நாம் சொல்லுகிறோம். எனவே, இந்த இரு அதிகாரங்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. அதே போல் ஹிருதயா என்ற ஒரு சொல்லை எப்பொழுதோ நான் கேள்விப்பட்டிருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இந்த ஹிருதயா, இருதயம் என்றும் பின்பு இதயம் என்றும் மாறிவிட்டதா? அப்படி என்றால் இதயம் என்பது வட மொழிச் சொல்லின் தழுவலா? மனு, மானுஷ்ய, அமானுஷ்ய என்ற சொற்களைக் கேட்கும் பொழுது இந்த மானுஷ்ய என்ற சொல்லில் இருந்து தான் மனுசன் என்ற சொல்லும், பின்பு மனிதன் என்ற சொல்லும் வந்திருக்குமோ என்ற குழப்பமே மிஞ்சுகிறது. 'மா' என்றால் பெரிய என்று பொருள் என்றாலும், இந்த 'மா', மஹா (மஹானாடு-மானாடு) என்ற சொல்லிலிருந்து வந்திருக்குமோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆதீஷ்வர், ஆதிபராஷக்தி, ஸ்வர்க்க லோகம் போன்ற வடமொழி(ஹிந்தி?)ச் சொற்களைக் கேள்விப்படும் பொழுது, திருவள்ளுவரின் முதல் குறளில் உள்ள ஆதி, பகவன், உலகு(லோகம்) மற்றும் பூமி(பூலோகம், பூமாதேவி), பிரசவம், இலட்சம், கோடி, பிரச்சினைகள், நிச்சயமாக, அரசு, சந்தேகம், சுகாதாரம், அதிசயம், ஆபரணம், தங்கம் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கணக்கான சொற்கள் தமிழ்ச் சொற்களா அல்லது வேற்று மொழிச் சொற்களா என்றே தெரியவில்லை. கங்கைக் கரையில் உள்ள சுந்தர வனக்காடுகளைப் பற்றிகேள்விப்படும் பொழுது, வனம், வனவர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்றே தோன்றுகிறது. கன்னியாகும்ரி என்பது ஒரு அழகான தமிழ்ச்சொல் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், 'தில்லல்லாரா' என்ற சேர்ந்திசைப்பாடலில் அதை 'கன்யாகுமாரி' என்று உச்சரிக்கக் கேட்டது முதல் அது தமிழ்ச்சொல் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. வாரம் என்ற சொல்லும், புதன் கிழமை(புத்வார்) என்ற சொல்லும் தமிழ்ச்சொற்களா என்று தெரியவில்லை. அரசுத்துறைகளிலும், பொது மக்களிடையேயும் அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் வட்டாட்சியர் என்ற சொல்லிற்கு, Circle Administrator(CA) என்றோ, Circle Administration Officer(CAO) என்றோ ஏன் பெயர் வைக்கக் கூடாது? 'தாசில்தார்' மற்றும் 'தாலூக்' என்ற அயற்சொற்கள் எதற்கு?

இருப்பினும் தெளிவான, மூன்றிலிருந்து ஐந்து எழுத்துக்கள் மட்டும் வருமாறு பல்லாயிரக்கணக்கான் புதிய இனிமையான, எளிமையான தமிழ்ச் சொற்களை உருவாக்கினால் கண்டிப்பாக அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்ப்டும் என்பதில் சந்தேகமில்லை. இனிமை என்ற சொல் ஏற்கனவே இருக்கிறது; ஆனால் இணிமை என்ற சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி ஒரு சொல் இல்லாமலிருந்தால் ஏன் இச்சொல்லை புதிதாக அறிமுகப்படுத்தக் கூடாது? இனிமை என்ற சொல் தரும் பொருளுக்கு முற்றிலும் வேறுபட்டதாக வேறொரு பொருளை ஏன் அதற்குத் தரக்கூடாது? அனைத்து என்ற பெயர் உரிச்சொல்லையும், அணைத்து என்ற வினையெச்சத்தையும் ஒருவரும், ஒரு நாளும் குழப்பிக்கொள்ளவில்லையே! தேனீர் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், தேனீ(ர்) என்பது தேனைச் சேகரிக்கும் ஈயைக் குறிக்கும். (தே)னீர் என்பது நீரைக்குறிக்கும் என்றே வைத்துக் கொள்வோம்! தேனீயும், நீரும் எப்படி Tea-யை நினைவூட்டுகின்றன்? தேனீ கொண்டுவரும் தேனைப்போன்ற இனிமையான ஒரு நீரைக் குறிக்கும் சொல் என்றே வைத்துக் கொண்டு, இது ஒரு இடுகுறிப் பெயர் என்றோ அல்லது காரணப் பெயர் என்றோ வைத்துக்கொண்டாலும் கூட, "ஒரு 'ச்சாயா' கொடுப்பா" என்ற தமிழனைக்கூட நான் பார்த்திருக்கிறேனே ஒழிய- அல்லது "ஒரு Tea கொடுங்க" என்ற தமிழனைப் பார்த்திருக்கிறேனே ஒழிய "ஒரு தேனீர் கொடுங்க" என்ற தமிழனை இதுவரை எங்கும் நான் பார்த்ததில்லை! Tea என்ற சொல்லோ, அல்லது 'ச்சாயா' என்ற சொல்லோ எந்த வேர்ச்சொல்லை மையமாக வைத்து வந்தது என்பது எவருக்கும் தெரியாவிட்டாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் எளிமையை உணர்வோர் அதிகம் என்பதே உண்மை.

தொலைக்காட்சி புதிதாக வந்த பொழுது அப்பெயரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தமிழர்கள், அதனுடன் வந்த Antenna என்ற சொல்லை அதுவரைக் கேள்விப்பட்டே இருக்காவிடினும், அது எந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்தது என்றே தெரியாவிடினும் இன்று வரை அந்தச் சொல்லை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதற்கு இணையான தமிழ்ச் சொல் எது என்று (ஈர்ப்பானாக இருக்குமோ?) எவருக்கும் தெரியாது. இவற்றுடன் வந்த Booster, Dish Antenna, Co-axical Cable போன்ற எத்தனையோ சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. Boost என்ற சொல்லை ஒரு வேர்ச்சொல் என்ற நிலையில் பார்த்தால், அது உடலுக்கு ஆற்றல் தரும் ஒரு பானம் என்பதைக்காட்டிலும், ஏழைகள் வீட்டில் காலையில் எழுந்தவுடன் பால் கூட இல்லாமல் குடிக்கும் (black) காஃபி அல்லது (black) தேனீர் போலவே செல்வந்தர்கள் வீட்டில் பருகப்படும் ஒரு பானம் என்ற நிலையில் தான் அனைவரும் அச்சொல்லை அறிந்து வைத்திருந்தனர் என்பதே உண்மை. இருப்பினும் ஒரு மின் அணுச்சாதனத்திற்கு(Booster) அப்பெயர் இருப்பதைப் பார்த்த பின்பும் இதுவரை எந்தக் குழப்பத்தையும் யாரும் எதிர்கொள்ளவில்லை. கருமை, காரிருள், கருப்பு, கார்மேகம் போன்ற சொற்களைப் பயன்படுத்திய பின்னரும், கரு, கருவி, கருது(கிறான்) ஆகிய சொற்களை அனைவரும் எந்தக் குழப்பமும் இன்றிக் கையாளுகின்றனர். 'மா' என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே முக்கனிகளில் ஒன்றான மாங்கனிதான் நினைவுக்கு வருகிறது என்றாலும், 'மாபெரும்' என்ற சொல்லைக் கேட்கும் பொழுது மாம்பழம் நினைவுக்கு வருவதில்லை. எனவே புதிதாக உருவாக்கப்படும் சொற்கள் வேர்ச்சொல்லை ஒட்டிய சொற்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. இருப்பினும், வேர்ச்சொற்கள் என்பது ஓரளவுக்குத் துணை நிற்கும் சொற்களே ஆகும். Scribe என்ற ஆங்கில வேர்ச்சொல், Transcribe, Describe, Prescribe, Supersribe, Subscribe, போன்ற சொற்களையும், Cide என்ற ஆங்கில வேர்ச்சொல் Pesticide, Fratricide, Matricide, Suicide, Fungicide, Micro Bi-cidal, Germicide போன்ற சொற்களையும், itis என்ற suffix, Hepatitis, Artheritis, Orchitis போன்ற சொற்களையும் கையாளத் துணை நிற்பதால், தமிழில் உருவாக்கப்படும் பல்லாயிரக்கணக்கான புதிய சொற்களே வேர்ச்சொற்களாகச் செயல்பட்டு, அவை புதிய இலட்சக் கணக்கான சொற்களின் தோன்றலுக்கு வழி வகுக்கும் என்பதையும் இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எண்களை எண்ணுவதற்குக் கூட ஒரு நிலைக்கு மேல் நமக்குப் போதிய சொற்கள் இல்லை. ஒரு காலத்தில் பத்தாயிரம் என்பதே மிகப் பெரிய எண்ணாகத் தெரியும். ஆனால் இன்று பல இலட்சம் கோடிகள் கூட மிகச் சாதாரணமாகிவிட்டது. எண்களை எண்ணும் பொழுது, ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்று பல நிலைகள் இருக்கும் பொழுது, தமிழில் கோடிக்கு அடுத்த நிலை இல்லாததும் ஒரு குறைதான். குறைந்தது நூறு கோடி, ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, இலட்சம் மற்றும் பத்து இலட்சம் கோடியைக் குறிப்பதற்காவது புதிய சொற்கள் தேவை (இலட்சம், கோடி-யெல்லாம் தமிழ்ச்சொற்களா?). Air என்பதற்குத் தமிழில் காற்று என்ற ஒரு சொல் உள்ளது. இதே Air என்ற சொல்லைக்குறிக்கும் வடமொழிச்சொல் வாயு ஆகும். நாம் என்ன செய்கிறோம் என்றால், இந்த Air என்ற சொல்லைக் குறிப்பதற்குத் தமிழில் உள்ள காற்று என்ற சொல்லையும், காற்றில் அடங்கியுள்ள Gas-ஐக் குறிக்கத் தனியாக ஒரு தமிழ்ச்சொல் தெரியாததால் அல்லது இல்லாததால், காற்று என்ற பொருளையே தரும் வட மொழிச்சொல்லான வாயு என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். சமையல் கியாஸ் என்று செய்தி இதழ்களில் வருவதைத் தமிழில் சொல்கிறோம் என்ற பெயரில், எரிவாயு என்று சொன்னால் அது தமிழாகி விடுமா? Gas-ற்கு இணையான ஒரு சொல்லே தமிழில் இல்லாத போது, ஆக்ஸிஜன்(ப்ராண வாயு -(ப்ராணன்-உயிர்...? or- உயிர் வளி- அப்படியே இருந்தாலும் அது எத்தனை பேருக்குத் தெரியும்? )-), ஓசோன், கார்பன்டைஆக்ஸைட், கார்பன்மோனாக்ஸைட் அல்லது இது போன்ற இன்னும் பல சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நாம் எப்போது உருவாக்குவது? இவையின்றி அளவுகளைக் குறிக்கும் மில்லி லிட்டர், டெசி லிட்டர், மில்லி மீட்டர், மைல், கிலோ மீட்டர், கிலோ கிராம், இன்ச், ஏர், ஏக்கர், ஹெக்டேர் போன்ற அனைத்துச் சொற்களுக்கும் தமிழ்ச்சொற்களை நாம் எப்போது உருவாக்கப்போகிறோம்?

எந்த மொழியிலும் தீய சொற்கள் என்று பல சொற்கள் இருப்பதைக் காண முடிகிறது. இச் சொற்கள் ஏதோ மனித குலத்திற்குத் தீங்கு செய்வதற்காக எங்கோ இருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அல்ல. மாறாக, நம் உடலில் இருக்கும் சில உறுப்புக்களைக் குறிக்கும் சொற்களும் அவற்றில் அடக்கம். நம் உடல் உறுப்புக்களை, குறிப்பாக உடல் கழிவுகளை வெளியேற்றப் பயன்படும் உறுப்புக்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் தேவையை நம்மால் இன்று வரை முழுமையாக உணர்ந்து அதைக் கடைபிடிக்க முடியவில்லை. நடுவண் அரசின் சுகாதாரத் துறை இன்றும் கூட பல நிலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் இவ்வுறுப்புக்களை, நமக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் கெட்ட, அருவருக்கத்தக்க உறுப்புக்களாக எண்ணி, அவற்றின் பெயரைச் சொல்வது கூட தவறானது என்ற வகையில் பழக்கப்படுத்தி விட்டதால் நாமும் அவ்வாறே பழகிவிட்டோம் என்பதே உண்மை.

ஆனால் இன்றைய கல்வி, பொதுத்தூய்மை, உடல் நலம், செய்தி போன்ற பல தேவைகளுக்காக நம் உடற் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புக்களின் பெயர்களை அடிக்கடி நாம் பயன்படுத்த வேண்டிய நிலையில், சில உறுப்புக்களின் பெயரைச் சொல்வது, எழுதுவது அல்லது நினைப்பது கூட அருவறுக்கத்தக்கது என்ற மோசமான நிலையில் உள்ளோம். அவற்றின் பெயர்களுக்கு மாற்றாக, அந்தரங்க உறுப்பு, பிறப்புறுப்பு, மர்ம உறுப்பு, மர்மஸ்தானம், இனப்பெருக்க உறுப்பு, ஆண் உறுப்பு, பெண் உறுப்பு என்று எத்தனையோ பெயர்களைப் பயன்படுத்தினாலும் அவை நம் தேவைகளில் கால் பங்கைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. குழந்தைகள்-பெற்றோருக்கிடையே, கணவன்-மனைவிக்கிடையே, ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே, மருத்துவர்-நோயாளிகளுக்கிடையே அல்லது இது போன்ற இன்னும் பல்வேறு நிலைகளில் இந்த உறுப்புக்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வுறுப்புக்களைக் குறிக்கத் தமிழில் வழக்கமான சொற்கள் இல்லையே!

இவற்றிற்கு மாற்றாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாகப் பயன்படுத்தும் வகையில், அருவருப்போ அல்லது ஆபாசமோ இல்லாத 'நாகரிகமான' புதிய சொற்கள் தேவை. மேலும், கைதி என்பதற்கு மாற்றுச்சொல்லாக சிறைவாசி என்ற சொல்லும், அலி, அரவாணி என்பதற்குப் பதிலாக திருநங்கை என்ற சொல்லும், ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக மாற்றுத் திறனாளிகள் என்ற சொல்லும், குருடர் என்ற சொல்லுக்கு மாற்றாக பார்வையற்றோர் என்ற சொல்லும், செவிடர் என்ற சொல்லுக்கு மாற்றாக காது கேளாதோர் என்ற சொல்லும், பைத்தியம் என்ற சொல்லுக்கு மாற்றாக மன நலமின்மை என்ற சொல்லும் அறிமுகப்படுத்தப்பட்டது போல், எருமை, எருமைமாடு, கழுதை, குரங்கு, பன்றி, நாய், பேய், பிசாசு போன்ற சொற்களும் வழக்கொழிக்கப்பட்டு, புதிய, நாகரிகமான, எளிமையான, இனிமையான சொற்களை அறிமுகப்படுத்த வேண்டும். இச்சொற்களை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படும் கேவலமான சொற்கள் என்றே அனைவர் மனதிலும் பதிந்து விட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது போன்ற எண்ணற்ற பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு தமிழால் எப்படி வளர முடியும்? இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் முழுவதுமாகக் களைந்தாலும், அனைவரையும் தனித் தமிழில் பேச, எழுத, சிந்திக்க வைக்க குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.

இப்படிப் பல நிலைகளில் தமிழில் பல்லாயிரக்கணக்கான புதிய (வேர்ச்)சொற்களை உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். புதிய சொற்களை உருவாக்கும் பொழுது,

1. கண்டிப்பாக மொழிபெயர்ப்பு என்ற நிலை இருக்கக் கூடாது. ஏனென்றால் தமிழாக்கம் என்ற பெயரில் பல ஆங்கிலப் பயன்பாடுகள் தமிழில் வந்து ஒட்டிக் கொண்டுள்ளன. ஆங்கிலத்தில் உள்ள Water Management என்பதைத் தமிழில் நீர் மேலாண்மை என்று மொழி பெயர்த்துள்ளனர். ஏற்கனவே தமிழில் நீராளுமை, நீராண்மை என்ற சொற்கள் இருக்கும் பொழுது, நீர் மேலாண்மை என்ற சொல் தேவையில்லை என்பதே உண்மை. Sorround என்பதை ஒலிச்சூழல் என்றோ, Pleasure Car என்பதை மகிழ்வுந்து என்றோ தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லையே. மேலும் இது போன்ற மொழிபெயர்ப்புக்கள் தமிழுக்கு தீமை விளைவிக்குமேயன்றி, நன்மைய நல்காது. தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற சொற்கள் நிலைத்து நின்றாலும் அவற்றின் பயன்பாடு அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. காஃபி என்பதற்கு, தேனீர் என்ற சொல்லைப் போல் ஒரு சிறிய சொல்லை வைத்தால் அது பயன்படுத்துவத்ற்கு எளிமையாக இருக்கும். இதே போல் on, against போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுவதைப் பார்த்துச் சிலர் இப்பயன்பாடுகளைத் தமிழிலும் அறிமுகம் செய்துள்ளனர். இதுவும் தேவையற்றது.

2. கண்டிப்பாகக் கூட்டுச் சொற்கள் கூடாது. மிக இனிமையான, சிறிய தனிச்சொற்களை அல்லது கலவைச்சொற்களை உருவக்க வேண்டும். இனிமை என்று ஏற்கனவே ஒரு சொல் உள்ளது. இணிமை, இணிலை, இனிலை, இணிவை. இனிவை, இனிதை என்று பல சொற்களைப் புதிதாக அறிமுகம் செய்து அவற்றை பள்ளிப் பாடத்தில் சேர்த்தால் புதிதாக வரும் குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்துவார்களே! சிறிய சொற்களின் தேவையைக் காட்ட, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட Demonstration என்ற சொல் தற்பொழுது Demo என்று சுருங்கிவிட்டதை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இங்கே குறிப்பிடலாம். அதிக எழுத்துக்களைக் கொண்ட மிக நீளமான சொற்களைப் பயன்படுத்துவதை விட, சிறிய சொற்களைப் பயன்படுத்துவது மிக எளிது. Wire Free- wifi, Telecommunication- telecom, Cellular phone- cellphone, Electronic Mail- e-mail, Electronin Commerce- e-comm போன்ற சொற்களும் அவ்வாறே! செயலாளர் என்ற சொல்லைக் காட்டிலும் செயலர் என்ற சொல் சிறியதே என்றாலும், இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பொறியாளர் என்பதை விட பொறிஞர் என்ற சொல் சிறியதே அனாலும் பொறிஞர் என்ற சொல்லை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால் பொறியாளர் என்ற சொல்லே உச்சரிப்பதற்கும், கேட்பதற்கும் இதமாக இருக்கிறது. எனவே சிறிய சொல் என்பதற்காக ஏதோ ஒரு சொல்லை உருவாக்கக் கூடாது. 'தியனா' என்று எப்பொழுதோ உச்சரிக்கப்பட்ட சொல், படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, 'டயானா' என்று மாறிய பின்பு அது எவ்வளவு புகழ் பெற்ற சொல்லாக மாறியது என்பது அனைவருக்கும் தெரியும். தியனாவும், டயானாவும் சிறிய சொற்களே என்றாலும், டயானா இனிமையான சொல் என்பதே உண்மை.

3. கண்டிப்பாகக் காரணப்பெயர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நிலை கூடாது. ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் உள்ள நிலைத்து நிற்கும் அனைத்துச் சொற்களும் காரணப்பெயர்கள் தான் என்பது உண்மையல்ல.

இந்த மூன்றையும் அடிப்படையாக வைத்து எண்ணிலடங்காப் புதிய சொற்களைத் தமிழிலும் கொண்டுவர வேண்டிய உடனடித் தேவையிலேயே நாம் உள்ளோம். சொற்களைப் பொருத்த வரை, ஒரு சிலர் பழகிப்போன சொற்களை, அவை ஆங்கிலமானாலும், அல்லது வேறு எந்த மொழியானாலும் அப்படியே விட்டுவிடலாம் என்றும், அதனால் தமிழுக்கு ஒன்றுமாகி விடாது என்றும் வாதிடுகின்றனர். இது மழைக்கு முளைத்த காளான் போல் உள்ள சராசரி மொழிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும்; மொழிகளுக்கெல்லாம் முன்னோடியான, உன்னதத் தமிழுக்குத் தன் தனித் தன்மையை இழந்து விடும் அளவிற்கு இது நிலைமையை மாற்றி விடும் எனபதை உணர வேண்டும். எண்ணுவதையெல்லாம் எல்லா மொழிகளிலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. ஆனால் நம்முடைய எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த அதிக வய்ப்புக்கள் தமிழில் மட்டுமே உள்ள நிலையில் தமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் நன்றாக உணர வேண்டும். முன்பே சொன்னது போல், ஒரு நல்ல மொழி எப்பொழுதும் வளர்ந்து கொண்டுதானிருக்கும் என்ற உண்மையுடன், ஒரு நல்ல மொழி மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் அது எப்பொழுதும் அழியாமல், 'பயன் அளிக்கும் வகையில்' நீடித்து நிற்கும் என்பதையும் இத் தருணத்தில் நினைவூட்டுவது ஒரு கட்டாயத் தேவையாகும். Bus, Aeroplane, Car போன்ற அயற்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் சென்றால் கண்டிப்பாக செம்மொழிக்குரிய தகுதிகளில் ஒன்றை இழந்து விடுவோம். மாறாக தமிழில் நம்முடைய மாற்றங்களாகச் சில மாற்றங்களை மட்டும் கொண்டு வருவதன் வாயிலாக(ப் புதிய சொற்கள் மற்றும் எழுத்துக்களை உருவாக்கித்) தமிழைக்காப்பது மட்டுமின்றி வளர்க்கவும் முடியுமென்றால் அதைச் செய்யலாமே! நம்முடைய தகுதியை இழப்பதைவிட இது ஒன்றும் தாழ்ந்த நிலை அல்ல. உண்மையில் இம்மாற்றங்களைக் கொண்டு வருவதில் கடுகளவும் தவறேதும் இல்லை; கடினமான பணியும் அல்ல- ஆனால், அம் மாற்றங்கள் கண்டிப்பாக முழுக்க முழுக்க தமிழ் மொழியின் தன்மைகளை ஒத்ததாக, தமிழனால் உருவாக்கப்பட்ட மாற்றங்களாக இருக்க வேண்டுமே ஒழிய பிற மொழிகளுக்குச் சொந்தமானவையாக இருக்கக் கூடாது ஏனென்றால் தமிழ் எப்பொழுதும் தனித்து இயங்கக் கூடியது; எந்த மொழியையும், எந்தத் தேவைக்காகவும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாதது. எனவே பிற மொழிகளுக்குச் சொந்தமான மாற்றங்கள் நமக்குத் தேவையில்லை என்பதே உண்மை. எனவே புதிய இனிமையான, சிறிய சொற்கள் நமக்குக் கட்டாயத் தேவையாகும்; அவை கண்டிப்பாக நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்! இதில் துளியும் ஐய்யமில்லை. இதுவும் முயன்றால் முடியாதது அல்ல.

அரசமைப்புச்சட்டத்தைக் கூட இயற்றுவது மிகக் கடினமான பணியே என்றாலும், அந்த மிகப்பெரிய சட்டத் தொகுப்பை ஒரே நாளில் ஏற்றுக் கொண்டு விட்டோம். அது அன்றைய நிலை. ஆனால் அதில் ஒரு மிகச்சிறிய மாற்றத்தைக் கொண்டுவருவதென்றாலும் இன்றைய நிலையில் குறைந்தது ஒரு ஆண்டு அமளிதுமளிகள், போராட்டங்கள், கருத்துக் கணைகள் என்று எத்தனையோ பிரச்சினைகள் எழும். நதி நீர் இணைப்பு கூட அரசமைப்புச்சட்டத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தால் அது எப்பொழுதோ நிறைவேறி இருக்கும். ஆனால் இன்று அது வெறும் கனவாகவே இருக்கிறது. அதே போல் தமிழிலும் மாற்றங்கள் கொண்டுவருவது இன்றைய நிலையில் மிகவும் எளிது. அதுவே இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் என்றால் அது மிகப்பெரிய பணியாகிவிடும்.

இன்றைய நிலையில் புதிய மாற்றங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்(என்னால் முடியும்!), அடுத்த தலைமுறைக்காவது தனித்தமிழ் பயன் அளிக்குமே! தனித்தமிழ்த் தலைவர் உயிர் இனியன் அவர்கள் தனித்தமிழில் உரையாற்றியதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தலைவர், நாட்டின் நலன் கருதி, மக்களின் நலன் கருதி, தமிழில் உரையாற்றுவதை விட்டு விட வேண்டும்; ஏனென்றால் அந்த உரையைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலையில் அவ்வுரையின் நல்ல கருத்துக்கள் மக்களைச் சென்று சேராது என்று அறிவுரை கூறினாராம்! அவர், இந்த அறிவுரையோடு இன்னொரு அறிவுரையை வைக்கத் தவறிவிட்டார் அல்லது அது நமக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. அதாவது, முதலில் தாய் மொழியை நன்றாகப் புரிந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்து, அதனுடன் கூட்டு நடவடிக்கையாக நல்ல கருத்துக்களையும் தாய் மொழியில் வெளிப்படுத்தினால், அது மிகவும் நன்றாக இருக்குமே என்றல்லவா அவர் அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். அப்படியே இருப்பினும், அது தமிழே தெரியாமல், வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய நிலையில் வேண்டுமானால் பொருத்தமான ஒரு அறிவுரையாக இருந்திருக்கும். தமிழையும், அதன் அருமையையும் நன்றாக் அறிந்தும், புரிந்தும் வைத்துள்ள இன்றைய நிலையில் தனித்தமிழில் உரையாற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கதே ஆகும். எண்ணங்களை வெளிப்படுத்த, கண்டிப்பாக ஒரு மொழி தேவை. அதற்காக ஏதோ ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு அது ஆங்கிலம் போன்ற கடினமான மொழியே ஆனாலும், அதைப் பயன்படுத்தும் அளவிற்கு தெரிந்த நமக்கு, உலகிலேயே மூத்த மொழியான, அதுவும் நம்முடைய தாய் மொழியான தமிழை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாதா? தமிழில் புதிய சொற்களை உருவாக்கி, அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதா?

சொற்களின் தேவை அனைவருக்கும் இருக்கும் பொழுது, அச்சொற்கள் ஏன் தமிழ்ச் சொற்களாக இருக்கக் கூடாது? தமிழில் புதிதாகப் பிறக்கும் சொற்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையே இருப்பினும், குறைந்தது இனிமேல் வரும் குழந்தைகளுக்காவது அவற்றை அறிமுகம் செய்தால் அவர்களாவது அவற்றைக் கற்றுக்கொள்ள வழி பிறக்குமே!

எனவே நாம் உடனடியாக, வேகமாகச் செயல் பட்டால் நிச்சயமாக இதற்கு நல்ல் ஒரு தீர்வை எட்ட முடியும். உடனடியாக எழுத்து மற்றும் சொல் வளத்தை உருவாக்க வேண்டியதுதான் நம்முடைய முதல் வேலையாக இருக்க வேண்டும். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக, அரசு தனது அனைத்துத் துறைத் தலைமை அலுவலகங்கள் முதல் கடைக்கோடியில் உள்ள அலுவலகங்கள் வரை முழுமையாக ஆய்வு செய்து அங்கு பயன்படுத்தப்படும் அயற்சொற்கள் அனைத்தையும் மற்றும் அயற்சொற்களாகச் சந்தேகிக்கப்படும் அனைத்துச் சொற்களையும் தனியே பிரித்து எடுத்து அவற்றைச் சரிப்படுத்த முயற்சி எடுத்தாலே தமிழில் மிகப்பெரிய மாற்றத்தை மிகக் குறைந்த காலத்தில் செய்துவிடலாம். ஏனென்றால் அரசு அலுவலகங்களிலும் மிக அதிக அளவில் அயற்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.


இப்படிப் பல புதிய முயற்சிகளின் அல்லது புதிய நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே தமிழைத் தலை நிமிரச் செய்ய முடியும். எனவே அரசு தன் முயற்சிகளை, பணிகளை சரியான வழியில் செலுத்துவது தான் உடனடித் தேவை! வாழ்க தமிழ், வெல்க தமிழின் புகழ்! மொழிகள் பல கற்போம், பாரினில் தமிழே உயிரென்போம்!!

"https://ta.wikibooks.org/w/index.php?title=தமிழின்_தேவைகள்&oldid=17261" இலிருந்து மீள்விக்கப்பட்டது