திருக்கோத்தும்பி/உரை 1-4
தில்லையில் அருளிச் செய்தது
கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது இப்பகுதி.
சிவனோடைக்கியம்
சிவனோடு ஒன்றாதல், சிவனோடு ஐக்கியமாம்.
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் :
கோத்தும்பீ - அரச வண்டே! பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் -இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா -தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
விளக்கம் :
திருமால் முதலியோர் மாயைக்கு உட்பட்டவர்களாதலின், மாயைக்கு அப்பாற்பட்ட இறைவனைக் காண முடியாது என்க. ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை மட்டும் புரியும் உருத்திரன் வேறு; ஐந்தொழிலுக்கும் உரிய பரம்பொருளாகிய பரமசிவன் வேறு ஆதலின், ‘மாவேறு சோதியும் தாமறியா’ என்றார். வேதங்களும் சுத்த மாயையிலிருந்து தோன்றுபவை யாதலால் இறைவனை அறிய முடியாதவையாயின.
சேவடிக்கே என்றதிலுள்ள நான்காம் வேற்றுமை உருபை ஏழாம் வேற்றுமை உருபாக மாற்றிக்கொள்க. வண்டு சென்று ஊதுமிடம் மலராதலால், மலர் போன்ற பாதங்களில் சென்று ஊதுவாய் என்பார், ‘சேவடிக்கே சென்றூதாய்’ என்றார்.
இதனால், இறைவன் திருவடியின் பெருமை கூறப்பட்டது.