திருக்கோத்தும்பி/உரை 17-20

விக்கிநூல்கள் இலிருந்து

அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! அவர் தேவர் - அவரே கடவுள், அத்தேவர் தேவர் - அவரே அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவர், என்று - என்று, இங்ஙன் - இவ்வாறு, பொய்த்தேவு பேசி - கடவுளர் அல்லாதவர்களைப் புகழ்ந்து, புலம்புகின்ற - பிதற்றுகின்ற, பூதலத்தே - பூலோகத்தில், பத்து ஏதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி, என் பற்று அற - என்னுடைய பற்றுகள் அறும்படி, நான் பற்றி நின்ற - நான் பற்றிக்கொண்டிருக்கிற, மெய்த்தேவர் தேவர்க்கே - உண்மையாகிய தேவர் பிரானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

சிவன் ஒருவனைத் தவிர ஏனையோரைப் பரம்பொருள் என்றல், உபசாரமேயன்றி உண்மையன்று என்பார், ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார். உலகப் பற்றை விடுதற்கு இறைவனது பற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், ‘பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற மெய்த் தேவர்’ என்றார், ‘பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற நாயனார் வாக்கையும் ஒப்பு நோக்குக.

இதனால், இறைவனது பற்றே சிறந்தது என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_17-20&oldid=2354" இலிருந்து மீள்விக்கப்பட்டது