திருக்கோத்தும்பி/உரை 25-28

விக்கிநூல்கள் இலிருந்து

சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்

கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை

ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்

சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பெருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! சங்கரனை - சிவபெருமானை, சட்டோ நினைக்க - செம்மையாக நினைக்க, மனத்து அமுது ஆம் - உள்ளத்தில் அமுதம் ஊறும், கேடு படாத் திருவடியை - அழியாத அவனது திருவடியை, கெட்டேன் - அந்தோ, மறப்பேனோ - நான் மறந்துவிடுவேனோ, ஒட்டாத - ஒன்றுபடாத, பாவித் தொழும்பரை - பாவம் செய்த அடிமைகளை, நாம் உரு அறியோம் - நாம் ஒரு பொருளாக அறிய மாட்டோம், சிட்டாய சிட்டற்கே - மேலான இறைவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

இறைவனைச் செம்மையாக நினைத்தால் இன்பம் உண்டாம் என்பார், ‘சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரன்’ என்றார். ‘’மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்றென்னுள் எழுபரஞ் சோதி’’ என்று இறையனுபவம் இன்பம் தர வல்லது என்பதை அடிகள் பின்னர்க் கோயிற்றிருப்பதிகத்தில் கூறுவார். ஆனால், ஒட்டாத பாவிகளை எண்ணினால் துன்பம் உண்டாம் என்பார், ‘ஒட்டாத பாவித்தொழும்பரை நாம் உருவறியோம்’ என்று ஒதுக்கித் தள்ளினார்.

இதனால், இறை அனுபவம் இன்பந்தர வல்லது என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_25-28&oldid=2356" இலிருந்து மீள்விக்கப்பட்டது