திருக்கோத்தும்பி/உரை 45-48

விக்கிநூல்கள் இலிருந்து

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்

பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்

சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! நாயேனை - நாய் போன்ற என்னை, தன் அடிகள் பாடுவித்த - தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த, நாயகனை - இறைவனும், பேயேனது - பேய்த்தன்மை யுடையேனது, உள்ளப் பிழை பொறுக்கும் - மனக்குற்றங்கள் மன்னிக்கும், பெருமையனை - பெருமையுடையவனும், சீ ஏதும் இல்லாது - இகழ்தல் சிறிதும் இல்லாமல், என் செய் பணிகள் கொண்டருளும் - யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற, தாயான ஈசற்கே - தாயானவனுமாகிய இறைவனிடமே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

இறைவன் பாட வல்ல அடியார்களைத் தன்னைப் பாடும் பணியிலே நிற்கச்செய்து அருள் புரிகின்றான் என்பது ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்’ என்பதனால் விளங்குகிறது. ‘மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயால்’ என்ற தடுத்தாட் கொண்ட புராணத்தையும் நோக்குக. அடிகள் பாடிய வாசகத்தை இறைவனே எழுதிக் கொண்டான் என்றதற்கு இஃது அகச்சான்று. பேய்த்தன்மையாவது, அலையுந்தன்மையாம். தாயானவள் சேயினது குற்றத்தைப் பொறுத்துப் பரிவும் காட்டுவாளாதலின், இறைவனை ‘தாயான ஈசன்’ என்றார்.

இதனால், பாடும் பணி இறைவனுக்கு மிகவும் உவகையைத் தருவது என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_45-48&oldid=2361" இலிருந்து மீள்விக்கப்பட்டது