திருக்கோத்தும்பி/உரை 5-8
நானார்என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்
வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் :
கோத்தும்பீ - அரச வண்டே! வானோர் பிரான் - தேவர் பெருமான், மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி, என்னை ஆண்டிலனேல் - என்னை ஆண்டருளாவிடின், நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவனாயிருப்பேன், என் உள்ளம் ஆர் - என் உள்ளம் என்ன தன்மையுடையதாயிருக்கும். ஞானங்கள் ஆர் - என் அறிவு எத்தன்மைய தாயிருக்கும், என்னை யார் அறிவார் - என்னைப்பற்றி யார் தெரிந்து கொள்ளப் போகிறார்கள், ஆதலின், ஊன் ஆர் உடைதலையில் மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் - உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது, தேன் ஆர் கமலமே - தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
விளக்கம் :
இறைவன் ஆட்கொண்டமையால் தமக்கு ஏற்பட்ட மாறுதலை எண்ணி வியந்து கூறுவார். ‘நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்’ என்றார். பசுகரணம் பதிகரணமாயின என்பதாம். ‘மதிமயங்கி’ என்றதற்குப் பிரமன் என்ற பொருள் கொள்ளுவாருமுளர். ‘ஊனார் உடைதலையில் உண்பலி தேர் அம்பலவன்’ என்றது, பிரமனது செருக்கையும் தாருகாவனத்து முனிவர்களது செருக்கையும் அடக்கிய வரலாறுகளை நினைவூட்டுகிறது. கமலம் ஆகுபெயராய்த் திருவடியைக் குறித்தது.
இதனால், கட்டுற்ற உயிர்களது சிறுமை கூறப்பட்டது.