உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோத்தும்பி/உரை 65-68

விக்கிநூல்கள் இலிருந்து

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்

மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட

ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்றன்

செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! பொய்யாய செல்வத்தே - நிலையில்லாப் பொருளின்கண், புக்கு அழுந்தி - போய் அழுந்தி, நாள்தோறும் - தினந்தோறும், மெய்யாக் கருதிக் கிடந்தேனை - உண்மைப் பொருளென்று எண்ணிக் கிடந்த என்னை, ஆட்கொண்ட - அடிமை கொண்ட, ஐயா - தலைவனே, என் ஆர் உயிரே - எனது அருமையான உயிரே, அம்பலவா - அம்பலவாணா, என்ற - என்று என்னால் புகழப் பெற்ற, அவன்தன் - அப்பெருமானது, செய் ஆர் - செம்மை பொருந்திய, மலர் அடிக்கே - தாமரை மலர் போலும் திருவடியினிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

பொய்யாய செல்வமாவன மண், பொன் முதலியன. இச்செல்வத்தை உண்மையென எண்ணியவர் மேல்நிலைக்கு வரமாட்டா ராதலின், ‘புக்கு அழுந்தி’ என்றார். இதையே ‘பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மருள்’ என்றார் நாயனார்.

இதனால், இறைவனது திருவடியே நிலையான செல்வம் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_65-68&oldid=2366" இலிருந்து மீள்விக்கப்பட்டது