உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பொற் சுண்ணம்/உரை 153-160

விக்கிநூல்கள் இலிருந்து

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்

சோதியு மாம்இருள் ஆயினார்க்குத்

துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப்

பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்

பந்தமு மாய்வீடும் ஆயினாருக்

காதியும் அந்தமும் ஆயினாருக்

காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு - வேத நூலும் அவற்றுள் கூறப்படும் யாகங்களும் ஆனவரும், மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு - மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் ஆனவரும், சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு - ஒளியுமாகி இருளும் ஆனவரும், துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு - துன்பமுமாகி இன்பம் ஆனவரும், பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு - பாதியுமாகி முழுதுமானவரும், பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு - உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு - உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, ஆட - நீர் ஆடும் பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

இறைவன் எல்லாப் பொருளுமாய் இருக்கின்ற நிலையை வேதம், வேள்வி, மெய்ப்பொருள், பொய்ப்பொருள், ஒளி, இருள், துன்பம், இன்பம், பாதி, முற்றும், பந்தம், வீடு, ஆதி, அந்தம் ஆகியிருக்கின்றான் எனக் கூறி விளக்கினார்.

மெய்ப்பொருளாவது, நிலைபேறுடைய பொருளான கடவுள், பொய்ப்பொருளாவது, நிலையில்லாதது; மாயா காரியங்களாகிய உலகம். ஒளியாவது, அறிவு. இருளாவது, அறியாமை. பாதியாவது, கட்டு நீங்காத உயிர்கள் தம் முனைப்பினால் செய்யும் செயல். முற்றுமாவது, கட்டு நீங்கிய உயிர்கள் திருவருள்வழி நின்று செய்யும் செயல். பந்தமாவது, பிறப்பு நிலை. வீடாவது, பிறப்பு நீங்கிப் பேரின்பம் உற்ற நிலை. ஆதியாவது, உலகத் தோற்றம். அந்தமாவது, அதன் முடிவு.

இதனால், இறைவனது பரிபூரண வியாபகம் கூறப்பட்டது.