திருப்பொற் சுண்ணம்/உரை 17-24

விக்கிநூல்கள் இலிருந்து

சுந்தர நீறணிந் தும்மெழுகித்

தூயபொன் சிந்தி நிதிபரப்பி

இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்

எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்

அந்தரர் கோனயன் றன்பெருமான்

ஆழியான் நாதன்நல் வேலன்தாதை

எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்

கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும்நாமே.

பதப்பொருள் :

சுந்தர நீறு அணிந்து - அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு, மெழுகி - தரையை மெழுகுதல் செய்து, தூய பொன் சிந்தி - மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நிதி பரப்பி - நவமணிகளைப் பரப்பி, இந்திரன் கற்பகம் நாட்டி - இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு, எங்கும் - எவ்விடத்தும், எழில் சுடர் வைத்து - அழகிய தீபங்கள் வைத்து, கொடி எடுமின் - கொடிகளை ஏற்றுங்கள், அந்தரர் கோன் - விண்ணவர்க்குத் தலைவனும், அயன்தன் பெருமான் - பிரமனுக்கு முதல்வனும், ஆழியான் நாதன் - சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும், நல்வேலன் தாதை - அழகிய முருகனுக்குத் தந்தையும், எந்தரம் ஆள் - எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற, உமையாள் கொழுநற்கு - உமாதேவியின் கணவனுமாகிய இறைவனுக்கு, ஏய்ந்த - பொருந்திய, பொற் சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

அழகைத் தருவது நீறு ஆதலால், ‘சுந்தர நீறு’ என்றார். ‘சுந்தரமாவது நீறு’ என்ற ஞானசம்பந்தர் தேவாரத்தையும் காண்க. மெழுகுதல் முதலியன இடத்தைத் தூய்மை செய்து அலங்கரிக்கும் செயல்களாம்.

பல் வகையான தேவர்களிடத்திலும் நின்று பல்வகையான செயலைச் செய்விப்பதும், பிரமனிடத்தில் நின்று படைத்தலைச் செய்விப்பதும், திருமாலிடத்தில் நின்று காத்தலைச் செய்விப்பதும் சிவபெருமானது சத்தியேயாதலின், அப்பெருமானை, ‘அந்தரர் கோன்’ என்றும், ‘அயனறன் பெருமான்’ என்றும், ‘ஆழியான் நாதன்’ என்றும் கூறினார்.

இதனால், இறைவனது பெருமை கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_17-24&oldid=2321" இலிருந்து மீள்விக்கப்பட்டது