திருப்பொற் சுண்ணம்/உரை 41-48

விக்கிநூல்கள் இலிருந்து

உலக்கை பலஓச்சு வார்பெரியர்

உலகமெ லாமஉரல் போதாதென்றே

கலக்க அடியார் வந்துநின்றார்

காண உலகங்கள் போதாதென்றே

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு

நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த

மலைக்கு மருகனைப் பாடிப்பாடி

மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

உலகமெல்லாம் - இவ்வுலகம் முழுவதும், உரல் போதாது என்று - உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி, பெரியர் - பெரியவர் பலர், உலக்கை பல ஓச்சுவார் - பல உலக்கைகளைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள், உலகங்கள் போதாது என்று - உலகங்கள் பலவும் இடம் போத மாட்டா என்னும்படி, அடியார் - அடியவர், கலக்க - ஒன்று கூடி, காணவந்து நின்றார் - பார்ப்பதற்கு வந்து நின்றனர், நலக்க - நாம் நன்மையடைய, அடியோமை ஆண்டுகொண்டு - அடியார்களாகிய நம்மை ஆட்கொண்டருளி, நாள் மலர் - அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற, பாதங்கள் - திருவடிகளை, சூடத்தந்த - நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த, மலைக்கு மருகனை - மலையரசனுக்கு மருகனாகிய இறைவனை, பாடிப்பாடி - பலகாற்பாடி, மகிழ்ந்து - களித்து, பொற்சுண்ணம் - பொன்போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

பொற்சுண்ணம் இடித்தலில் அடியார்க்குரிய ஆர்வத்தைக் காட்டுவார், ‘உலக்கை பல ஓச்சுவார் பெரியர்’ என்றும், ‘நலக்க அடியவர் வந்து நின்றார்’ என்றும் கூறினார். ‘நலக்க’ என்பது ‘நலம்’ என்பது வினைச்சொல்லாக வந்ததாம்.

இதனால், பொற்சுண்ணம் இடித்தலில் அடியார்க்குள்ள ஆர்வம் கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_41-48&oldid=2324" இலிருந்து மீள்விக்கப்பட்டது