உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பொற் சுண்ணம்/உரை 57-64

விக்கிநூல்கள் இலிருந்து

வாட்டடங் கண்மட மங்கை நல்லீர்

வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்

தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்

சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி

நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி

நாயிற் கடைப்பட்ட நம்மைஇம்மை

ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி

ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

வாள் - வாள் போன்ற, தடங்கண் - பெரிய கண்களையும், மடம் - இளமையுமுடைய, மங்கை நல்லீர் - மங்கைப் பருவப் பெண்களே, வரிவளை ஆர்ப்ப - வரிகளையுடைய வளையல்கள் ஒலிக்கவும், வண் கொங்கை பொங்க - வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோள் திருமுண்டம் துதைந்து இலங்க - தோளிலும் நெற்றியிலும் திருநீறு பிரகாசிக்கவும், எம்பிரான் - எம்பெருமானே, சோத்து என்று - வணக்கம் என்று, சொல்லிச் சொல்லி - பலகாற்கூறி, நாள் கொண்ட - அப்பொழுது பறித்த, நாள் மலர் - அன்றலர்ந்த மலர்கள் சூட்டப்பெற்ற, பாதம் காட்டி - திருவடியைக் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை - நாயினும் கீழ்ப்பட்ட நம்மை, இம்மை - இப்பிறவியிலே, ஆட்கொண்ட வண்ணங்கள் - ஆண்டு கொண்ட முறைகளை, பாடிப்பாடி - பலகாற்பாடி, ஆட - இறைவன் திருமுழுக்கிற்கு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

மடம் பெண்மைக்குணம் நான்கனுள் ஒன்று. பெண்மைக் குணம் நான்காவன - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன. மங்கைப் பருவம் - பெண்கள் பருவம் ஏழனுள் ஒன்று. பெண்கள் பருவம் ஏழாவன - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பன. இவற்றுள் மங்கைப் பருவம் பன்னிரண்டு வயதுள்ள பருவம். ‘இலங்க’ என்ற குறிப்பால் ‘திருநீறு’ என்பது வருவிக்கப்பட்டது. இறைவன் உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பப் பல விதமாக ஆட்கொள்வானாதலின், ‘ஆட்கொண்ட வண்ணங்கள்’ எனப் பன்மையால் கூறினார்.

இதனால், இறைவனது கருணையை நினைந்து பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_57-64&oldid=2326" இலிருந்து மீள்விக்கப்பட்டது