திருப்பொற் சுண்ணம்/உரை 73-80

விக்கிநூல்கள் இலிருந்து

முத்தணி கொங்கைகள் ஆடஆட

மொய்குழல் வண்டினம் ஆடஆடச்

சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்

செங்கயற் கண்பனி ஆடஆடப்

பித்தெம் பிரானொடும் ஆடஆடப்

பிறவி பிறரொடும் ஆடஆட

அத்தன் கருணையொ டாடஆட

ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

முத்து அணி கொங்கைகள் - முத்து வடமணிந்த தனங்கள், ஆட ஆட - அசைந்து ஆடவும், மொய்குழல் வண்டு இனம் - நெருங்கிய கூந்தலிலுள்ள வண்டுக் கூட்டங்கள், ஆட ஆட - எழுந்து ஆடவும், சித்தம் சிவனொடும் - மனமானது சிவபெருமானிடத்தில், ஆட ஆட - நீங்காதிருக்கவும், செங்கயல் கண் - செங்கயல் மீன் போன்ற கண்கள், பனி ஆட ஆட - நீர்த்துளிகளை இடைவிடாது சிந்த, பித்து - அன்பு, எம்பிரானொடும் - எம்பெருமானிடத்தில், ஆட ஆட - மேன்மேற் பெருகவும், பிறவி பிறரொடும் - பிறவியானது உலகப் பற்றுள்ள பிறரோடும், ஆட ஆட - சூழ்ந்து செல்லவும், அத்தன் - எம் தந்தையாகிய சிவபெருமான், கருணையொடு - அருளொடு, ஆட ஆட - நம்முன் விளங்கித் தோன்றவும், ஆட - அவன் திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

தனங்கள் அசைந்து ஆடுதலும், வண்டுகள் எழுந்து ஆடுதலும் பொற்சுண்ணம் இடித்தலால் உண்டாவன. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தலால் கண்ணீர் அரும்பலும், இறைவனிடத்தில் அன்பு வைத்தலால் அவன் விளங்கித் தோன்றுதலும் உண்டாம் என்கின்ற காரணகாரிய முறையாய் அமைந்துள்ள இந்நயம் அறிந்து இன்புறத் தக்கது. இறைவனைப் பற்றாதார் பிறவியைப் பற்றுவார் என்பது, ‘பிறவி பிறரொடும் ஆட ஆட’ என்பதனாற்புலனாகிறது.

இதனால், இறைவழிபாட்டின் அனுபவம் கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_73-80&oldid=2328" இலிருந்து மீள்விக்கப்பட்டது