திருப்பொற் சுண்ணம்/உரை 9-16

விக்கிநூல்கள் இலிருந்து

பூவியல் வார்சடை எம்பிராற்குப்

பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்

மாவின் வடுவகி ரன்னகண்ணீர்

வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்

கூவுமின் தொண்டர் புறம்நிலாமே

குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்

தேவியும் தானும்வந் தெம்மையாளச்

செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

பூ இயல் வார்சடை - அழகு பொருந்திய நீண்ட சடையையுடைய, எம் பிராற்கு - எம் பெருமானுக்கு, திருப்பொன் சுண்ணம் இடிக்க வேண்டும், அழகிய பொற் சுண்ணத்தை இடிக்க வேண்டும், மாவின் வடு வகிர் அன்ன - மாம்பிஞ்சின் பிறவை ஒத்த, கண்ணீர் - கண்களையுடைய பெண்களே, வம்மின்கள் - வாருங்கள், வந்து உடன் பாடுமின்கள் - வந்து விரைவிற்பாடுங்கள், தொண்டர் புறம் நிலாமே - அடியார்கள் வெளியே நில்லாதபடி, கூவுமின் - அவர்களை அழையுங்கள், குனிமின் - ஆடுங்கள், தொழுமின் - வணங்குங்கள், எங்கோன் - எமது இறைவனாகிய, எம் கூத்தன் - எம் கூத்தப்பிரான், தேவியும் தானும் வந்து - இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து, எம்மை ஆள - எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமை கொள்ளும்பொருட்டு, செம்பொன் செய் சுண்ணம் - செம்பொன்போல ஒளி விடும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

இறைவன் பூசுதற்குரிய பொடியை இடித்தற்கு எல்லோரையும் அழைத்து உடன் பாட வேண்டுவாள், ‘வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்’ என்றாள். அதற்குரிய பயன் இறைவன் அருளேயாதலால், ‘தேவியும் தானும் வந்தெம்மையாள’ என்றாள்.

இதனால், இறைவனுக்குரிய வழிபாடு கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_9-16&oldid=2320" இலிருந்து மீள்விக்கப்பட்டது