உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பொற் சுண்ணம்/உரை 97-104

விக்கிநூல்கள் இலிருந்து

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்

வெண்ணகைப் பண்அமர் மென்மொழியீர்

என்னுடை ஆரமு தெங்களப்பன்

எம்பெரு மான்இம வான்மகட்குத்

தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்

தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப்

பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்

பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

மின் இடை - மின்னல் கொடி போன்ற இடையினையும், செந்துவர் வாய் - செம்பவளம் போன்ற இதழினையும், கருங்கண் - கருமையான கண்களையும், வெள்நகை - வெண்மையான பற்களையும், பண் அமர் - இசை பொருந்திய, மெல் மொழியீர் - மென்மையான மொழியினையும் உடையவர்களே, பொன்னுடைப் பூண்முலை - பொன்னாபரணம் அணிந்த தனங்களையுடைய, மங்கை நல்லீர் - மங்கைப் பருவப் பெண்களே, என்னுடை ஆர் அமுது - என்னையுடைய அமுதம் போன்றவனும், எங்கள் அப்பன் - எங்கள் அப்பனும், எம் பெருமான் - எம் பெருமானும், இமவான் மகட்கு - மலையரசன் மகளாகிய பார்வதிக்கு, தன்னுடைக் கேள்வன் - அவளை உடைய நாயகனும், மகன் - மகனும், தகப்பன் - தந்தையும், தமையன் - முன் பிறந்தானுமாகிய, எம் ஐயன் - எங்கள் கடவுளது, தாள்கள் பாடி - திருவடிகளைப் பாடி, பொன் திருச்சுண்ணம் - பொன் போலும் அழகிய வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறானாதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அன்று.

இதனால், இறைவனது தன்மை கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_97-104&oldid=2331" இலிருந்து மீள்விக்கப்பட்டது