திருவாசகம்/சிவபுராணம் உரை 1-5

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

அஃதாவது, சிவபிரான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு அளவில்லாத காலமாகச் செய்து வருகின்ற திருவருட்செயலின் முறைமை என்பதாம்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க


பதப்பொருள்:

நமச்சிவாய வாழ்க - திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; நாதன் தாள் வாழ்க - திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க - திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.

விளக்கம் :

திருவைந்தெழுத்து என்பது தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என முத்திறப்படும். ‘ந’கரத்தை முதலாக உடையது (நமசிவாய) தூலம். ‘சி’கரத்தை முதலாக உடையது (சிவாயநம) சூக்குமம். அதிசூக்குமம் ‘ந’கர ‘ம’கரங்களின்றிச் சிகரத்தை முதலாகவுடையது (சிவாய). இங்குத் தூலவைந் தெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, உயிர்களுக்கு உலக இன்பத்தைக் கொடுத்துப் பக்குவப்படுத்துவது. இனி, இறைவனது திருமேனியே திருவைந்தெழுத்தாகும். நகரம் திருவடியாகவும், மகரம் உடலாகவும், சிகரம் தோளாகவும், வகரம் முகமாகவும், யகரம் முடியாகவும் சாத்திரம் கூறும்.

"ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே

நாடுந் திருவடியி லேநகரம் - கூடும்

மகரம் உதரம் வளர்தோள் சிகரம்

பகருமுகம் வாமுடியப் பார்" (உண்மை விளக்கம்)

இத்துணைப் பெருமையுடையது திருவைந்தெழுத்து ஆகையால், அதனை முதற்கண் வாழ்த்தி, பின்னர் அத்திருவைந்தெழுத்தின் வடிவமாயுள்ள முதல்வனை வாழ்த்தினார்.

"நெஞ்சில் நீங்காதான்" என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மையையும், "கோகழியாண்ட குருமணி" என்றமையால், இறைவன் புறத்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின பெருமையையும் குறிப்பிட்டார்.

வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், "ஆகமமாகி நின்றண்ணிப்பான்" என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.

இனி, "ஏகன் அநேகன்" என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.

இவற்றால் வாழ்த்துக் கூறப்பட்டது.