உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாசகம்/சிவபுராணம் உரை 26-32

விக்கிநூல்கள் இலிருந்து

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

30. செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


பதப்பொருள் :

புல் ஆகி - புல்லாகியும், பூடு ஆய் - பூண்டாகியும், புழு ஆய் - புழுவாகியும், மரம் ஆகி - மரமாகியும், பல்விருகமாகி - பல மிருகங்களாகியும், பறவை ஆய் - பறவையாகியும், பாம்பு ஆகி - பாம்பாகியும், கல் ஆய் - கல்லாகியும், மனிதர் ஆய் - மனிதராகியும், பேய் ஆய் - பேயாகியும், கணங்கள் ஆய் - பூத கணங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும், முனிவர் ஆய் - முனிவராகியும், தேவர் ஆய் - தேவராகியும், சொல்லாநின்ற - இயங்குகின்ற, இ - இந்த, தாவர சங்கமத்துள் - அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே, எல்லாப் பிறப்பும் பிறந்து - எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, இளைத்தேன் - யான் மெலிவடைந்தேன், எம்பெருமான் - எம்பெருமானே, இன்று - இப்பொழுது, மெய்யே - உண்மையாகவே, உன் பொன் அடிகள் கண்டு - உன் அழகிய திருவடிகளைக் கண்டு, வீடு உற்றேன் - வீடு பெற்றேன்.

விளக்கம் :

எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது.

இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம். இவற்றை,

"தோற்றியிடு மண்டசங்கள் சிவேதசங்கள் பாரிற் றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கின் ஊற்றமிகு தாவரங்கள் பத்தொன்ப தென்றும் ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா

மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி மன்னியிடும் பப்பத்து மானுடரோன் பதுமா ஏற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே."

(சிவப்பிரகாசம்)

என்பதனால் அறிக. உயிர்கள் இத்தனை வகைப் பிறப்புகளை எடுத்து உழல்கின்றன என்பதை விளக்க, "பிறந்து இளைத்தேன்," என்றார்.

இவற்றால் உயிர்களின் பிறப்பு வகைகள் கூறப்பட்டன.