உள்ளடக்கத்துக்குச் செல்

நாராயணகுரு

விக்கிநூல்கள் இலிருந்து

கேரள சமூகத்தை சாதிய வெறுப்பிலிருந்து அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கும்பொருட்டு போராடியவர். தத்துவப் பேரறிஞர். ஆன்மீக ஞானி.


நாராயணன் என்பது இயற்பெயர். 1854ல் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்ஞி என்ற கிராமத்தில் ஈழவ சாதியில் பிறந்தார். ஈழவ சாதி அன்று தீண்டத்தகாத சாதியாகக் கருதபப்ட்டது. அவர்கள் பனையும் தென்னையும் ஏறி கள் இறக்கும் தொழில் செய்துவந்தனர். தந்தை மாடன் ஆசான், தாய் குட்டியம்மா. மிக சிறு வயதிலேயே வறுமையில் வாடினாலும் அவருக்கு கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரம் சாலைத் தெருவில் வாழ்ந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழரின் தொடர்பு கிடைத்தது .அவர் ஒரு அடிமுறை ஆசான், யோக ஆசிரியர் மற்றும் வேதாந்தி. பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூபரிண்டண்டாக வேலைபார்த்தார். அவருக்கு சாலைதெருவில் ஒரு கடை இருந்தது. அங்கு அமர்ந்து தமிழை ஆழ்ந்து கற்கவும் திருமந்திரம் போன்ற நூல்களை அவரிடம் பாடம்கேட்கவும் குருவால் முடிந்தது .


தன் இருபத்துமூன்றாவது வயதில் துறவறம் பூண்ட குரு பிறகு முப்பது வயதுவரை எங்கிருந்தார் என்பது தெரியவிலை. குமரிமாவட்டத்தில் மருத்துவாழ் மலையில் அவர் சிலகாலம் வாழ்ந்தது தெரியவந்துள்ளது . அவரை ஒரு வாலிபயோகியாக பார்த்த சிலரது பதிவுகள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன. தீண்டப்படாத சாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் குரு வேதங்களையும் உபநிடதங்களையும் தரிசனங்களையும் ஆழ்ந்து கற்றது வியப்புக்குரிய செய்தியே.


1888 ல் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்த நாராயணகுரு அங்கே ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்தார். ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமைஉண்டா என்றவினாவுக்கு "நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல" என்று பதில் சொன்னார் [பாரதி உட்பட பலர் பதிவு செய்தது போல 'நான் நிறுவியது ஈழவ சிவன்' என்றல்ல . ] அந்த கோயில் வாசலில் 'சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது' என்று எழுதி வைத்தார்.


அன்றைய கேரளக் கலாச்சார உலகில் பெரும்புரட்சியாக அது கருதப்பட்டது . அவ்விபரத்தைக் கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலைபார்த்துவந்த டாக்டர் பல்பு குருவை காணவந்தார். அவரது உண்மைப்பெயர் பத்மநாபன்.ஆனால் தீண்டப்படாத மக்கள் கடவுள்பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கேற்ப அப்பெயர் 'ஜன்மி ' யால் [நில உடைமையாளர்] மாற்றப்பட்டது .அவர் பி ஏ படிப்பை ஒரு பாதிரியாரின் உதவியுடன் முடித்தபோது கேரள மன்னர் அரசு அவருக்கு வேலை அளிக்க மறுத்தது .மைசூருக்கு சென்று அவர் மருத்துவப்பயிற்சி பெற்று உயர்பதவிக்கு வந்தார் .கேரளத்தில் புழுக்களைவிட தாழ்ந்தவர்களாக வாழ்ந்த மக்களுக்கு ஏதாவது செய்யவிரும்பினார். அவ்வாறாக கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ். என் .டி . பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903 ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது .1928 ல் குரு தனக்கு பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார்.தர்ம சங்கம் என்ற அவ்வமைப்பு வற்கலை என்ற ஊரில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.


நாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது . எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. எண்பது வயது வரை வாழ்ந்த அவர், மிகக் கொந்தளிப்பான பல சூழல்களை சந்தித்த அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை . எவரையுமே கண்டித்ததில்லை . நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகிறார்கள் என்று குமுறிய ஈழவ இளைஞர்களிடம் அதை தடுக்க ஒரே வழி புலையர்களை நாம் அணைத்து சேர்த்துக் கொள்வதே என்று அவர் உபதேசித்தார். இது குருவின் போக்கு என்ன என்பதை காட்டும் உதாரண சம்பவமாகும்.அவர் பொதுவாக உபதேசம் செய்வதில்லை .பேருரைகள் ஆற்றும் வழக்கமே இல்லை . தனிப்பட்டமுறையில் பேசும்போது நகைச்சுவை மிக்க சில வரிகள் மட்டுமே சொல்வார். முக்கியமான சமயங்களில் அவர் சொல்ல சில வரிகளைபிறர் எழுதியெடுத்து அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள்.


தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை தனித்துவம் கொண்டது. அதை 'தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல் , ஆதிக்க சக்திகளை விட கல்வி , செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ' - என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ் என் டி பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரூ தளங்களில் தீவிரம் கொண்டன. ஈழவர்களின் அன்றைய பிற்பட்ட வாழ்க்கைச்சூழல்களை மாற்றியமைத்தல் முதலாவது . அவர்கள் குல வழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள் . கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை . நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்த சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார் .அவ்வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும் கடவுள்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி , பெரிங்கோட்டுகரை , வடக்கே தலைச்சேரி கண்ணனூர் , கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவியமுக்கியமான கோவில்கள் உள்ளன.


நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத அன்றையச் சமூகச்சூழலில் குரு அந்த பிரதிஷ்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு , அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல . அவ்வாலயங்களில் பூஜைகளையும் தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார் .அவற்றில் தெய்வ தசகம், சுப்ரமண்ய சதகம் , காளீநாடகம் , சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை . அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின .


நாராயணகுருவின் மிகமுக்கியமான பணி கல்வித்துறையில்தான் என்று சொல்லலாம். தற்காலத்தில் கூட கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது நாராயணகுரு துவக்கிய பேரியக்கமே. பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அவ்வியக்கத்தின் ஆரம்பகால பணிகளில் முக்கியமானதாக இருந்தது .ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது . பொதுவாக கேரளத்தின் கல்விநிலை புரட்சிகரமாக மாறியது . தற்காலத்தில் நமது தேசத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாக அது உள்ளதற்கு காரணமும் நாராயணகுருவின் அறிவியக்கமே .மலையாளிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்வதும் , அவர்கள் செல்வத்துக்கு முதலீட்டாக உள்ளதும் அவர்களுடைய கல்வியே. ஆங்கிலக்கல்வியை குரு பெரிதும் வலியுறுத்தினார். பல்வேறுவகை தொழில்களை துவக்குவது குறித்தும் குரு மிக்க அக்கறை எடுத்துக்கொண்டார் .கேரளத்தின் கயிறு ஓடு தொழில்கள் உருவாக அவரே காரணம் .


நாராயணகுருவின் கோயில்களில் முதலில் சிவலிங்கத்தையும் பிறகு சுப்ரமணியர், ஜகன்னாதர் போன்ற கடவுள்களையும் பிரதிஷ்டை செய்த குரு அடுத்த கட்டத்தில் விளக்கையும் பிறகு சத்யம் தர்மம் தயை என்ற சொற்களையும் கருவறைதெய்வமாக பிரதிஷ்டை செய்தார் .இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் நிலைக்கண்ணாடியை நிறுவியபிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் பள்ளிகள் போதும் என்று சொல்லிவிட்டார். அவர் அருவிக்கரையில் கோயிலை நிறுவியபோதே சொன்ன கருத்துதான் இது . ஆனால் அதன் பிறகு பல படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி மீண்டும் அரை நூற்றாண்டுக்கு பிறகு துவங்கிய தளத்துக்கே வந்து சேர்ந்தார். மக்களை அங்கு கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கம் என்று ஊகிக்கலாம் .1921 ல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட 'ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு' என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்படுகிறது . அம்மாநாடே கேரளத்தில் மனித சமத்துவத்துக்கான செய்தியை மக்கள் மத்தியில் ஆழப்பதித்தது . மாப்பிளாகலவரங்கள் என்றபேரில் பெரும் மதக்கலவரங்கள் கேரளத்தில் எழுந்தகாலகட்டம் இது என்பதை நாம் நினைவு கூரவேண்டும்.


ஆனால் நிகழ்காலத்தில் நின்று பார்க்கும்போது கேரள அறிவுத்துறையில் குரு உருவாக்கிய மாற்றமே மிக முக்கியமான பங்களிப்பு . கேரள கம்யூனிச அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என கேரள அரசியலறிஞரான ஈ. எம். எஸ் நம்பூதிரிப்பாடு எழுதினார். மூன்றுதலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவானபடியேயிருந்தார்கள். நாராயணகுருவின் நேரடி சீடர்கள் என மூவரை முக்கியமாக சொல்லலாம். மகா கவி குமாரன் ஆசான் நாராயணகுருவின் முதல் சீடர்.மிகச் சிறு வயதிலேயே எஸ் என் டி பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றியவர். பாரதி தமிழுக்கு யாரோ அந்த அந்த நிலைதான் அவருக்கு மலையாளத்தில் .நவீன கவிதை இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை . நாராயணகுருவின் அணுக்கத்தொண்டரும் அடிப்படைக் கருத்துக்களில் அவரை நிராகரித்தவருமான சகோதரன் அய்யப்பன் அடுத்த முக்கியச் சீடர் . கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி அவரே. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர் அய்யப்பன். அக்காரணத்தாலேயே 'புலையன்' அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மூன்றாமவர் நடராஜ குரு.


கேரளத்தின் முக்கியமான மூன்று நாளிதழ்களின் ஸ்தாபகரும் ,வரலாற்றாசிரியருமான சி வி குஞ்ஞிராமன் நாராயணகுருவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் அவரது மகன்தான் மார்க்சிய தத்துவ வரலாற்றாசிரியரான கெ. தாமோதரன். கேரள சுதந்திரப்போராட்டத்தின் முதல்கட்டதலைவர்களில் ஒருவரான டி கெ மாதவன் நாராயணகுருவின் நேரடி சீடர்தான். அவரால் நடத்தப்பட்டது தான் வைக்கம் போராட்டம் . அப்போராட்டத்தில் ஈ வே ராவின் பங்க்ர்ர்ற்றார்.தமிழக வழக்கப்படி அது மிகைப்படுத்தப்பட்டு அவர் 'வைக்கம் வீரராக' ஆக்கப்பட்டதெல்லாம் மிகவும் பிற்பாடுதான்.] குறிப்பிட்ட பட்டியலில் கேரளத்தின் ஆன்மீக கலசார அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் பேரை சேர்த்துச் சொல்லிவிட முடியும்.


காந்தி 1925 ல் நாராயண குருவை வந்து சந்தித்திருக்கிறார். சாமியார்கள் மீது நம்பிக்கை இல்லாதவரும் பொதுவாக எவரையுமே சந்திக்காதவருமான காந்தி நாராயண குருவை ஒரு அவதார புருஷர் என்றே குறிப்பிட்டிருக்கிறார் . அச்சந்திப்புக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி [காஞ்சிபெரியவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்] காந்தியை கேரளத்தில் பாலக்காடில் வைத்து சந்தித்து தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஆலயப்பிரவேச போராட்டம் ஆகியவற்றிலிருந்து பின்வாங்குமாறு காந்தியிடம் கோரிக்கை வைத்தார். ஹிந்து சாஸ்திரங்கள் அவற்றை அனுமதிகாது என்றும் அச்செயல்கள் ஹிந்துதர்மத்தை படிப்படியாக அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார் . காந்திக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது . குறிப்பாக ஹிந்து உயர்சாதி மக்களின் ஆதரவு தன் போராட்டங்களுக்கு கிடைக்காமலாகிவிட வாய்ப்புண்டு என்றும் அவர் உணர்ந்திருக்கலாம்.


நாராயணகுருவை அவர் அரைமனதாகவே சந்திக்க வந்தார் .ஆனால் அச்சந்திப்பு அவரை நாராயணகுருவின் முன் பணிந்து கற்க வைத்தது .அவர்களுடைய பேச்சு விபரம் அதிகார பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வெகுநாட்களாக தன் மனத்தில் இருந்த ஐயங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி அன்று திருவனந்தபுரத்தில் நடந்த பிரார்த்தனை வகுப்பில் குறிப்பிட்டார் . அச்சமயம் கூடவேயிருந்தவர்களில் ஒருவரான மூர்க்கோத்து குமாரன் என்பவரும் ஆசானும் சொன்ன குறிப்புகளின் படி காந்தி வர்ணாசிரம தர்மத்துக்கு சஸ்திர ஆதாரம் உண்டா என்று கேட்டதாகவும் ஹிந்து சாஸ்திரங்களில் மாறக்கூடிய நீதி சாஸ்திரங்கள் மட்டுமே அதை போதிக்கின்றன என்றும் அடிப்படை அறங்களை போதிக்கும் நூல்கள் எதிலுமே சாதிக்கு இடமில்லை என்று உறுதியாக கூறமுடியுமென்றும் நாராயணகுரு சொன்னதாக தெரிகிறது. காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று எண்ணம் இருந்தது .நாராயணகுரு அதை மறுத்தார். காந்தி அதை பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டார் .1923ல் கன்யாகுமரி வந்த தகூரும் நாராயணகுருவை சந்த்தித்து அவர் பாரத தேசத்தில் தோன்றிய மாகரிஷிக்களில் ஒருவர் , ஒரு பரமஹம்சர் என்றுகருத்து தெரிவித்தார்.


நாராயணகுரு மலையாளம் , சம்ஸ்கிருதம் , தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள்பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. குருவுக்கு வெண்பா மிகவும் கைவருகிறது . திருக்குறளை குரு மொழிபெயர்த்திருக்கிறார் .


நாராயணகுரு தன் 74 வது வயதில் 1928ல் கேரளத்தில் வற்கலை என்ற ஊரில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது .


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikibooks.org/w/index.php?title=நாராயணகுரு&oldid=13383" இலிருந்து மீள்விக்கப்பட்டது