நிரலாக்குநர் அல்லாதவருக்கான பைத்தன் 2.7 பயிற்சி/முதற்செய்நிரல்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டியவை[தொகு]

 • ஐடில் போன்ற ஓர் உரைதொகுப்பியைப் பயன்படுத்தி ஒரு செய்நிரலைத் தொகுப்பது தொடர்பான அறிவு.
 • செய்நிரல்களைச் சேமிப்பது தொடர்பான அறிவு.
 • சேமித்த செய்நிரல்களை இயக்குவது தொடர்பான அறிவு.
 • ஐடிலில் தமிழ் உள்ளடங்கலான ஒருங்குறி வரியுருக்களை உள்ளிடுவது தொடர்பான அறிவு.

பதித்தல்[தொகு]

Hello, World! என்ற உரையைப் பதிக்கும் சிறிய செய்நிரலை உருவாக்குவதே பெரும்பாலான நிரலாக்கப் பயிற்சிநூல்களின் தொடக்கச் செய்நிரலாக இருக்கும். அம்மரபின்படியே, அறிமுகத்தில் ஏற்கனவே இச்செய்நிரல் பற்றிப் பார்த்திருந்தாலும், மறுபடியும் ஒருமுறை பார்ப்போம் (குறிப்பு: பைத்தன் 3இல் இத்தொடரியலைப் பயன்படுத்தமுடியாது.).

print "Hello, World!"

செய்நிரல் இயங்கியதும், பின்வரும் உரை பதிக்கப்படும்.

Hello, World!

இப்போது இதனைவிடச் சற்றுச் சிக்கலான ஒரு செய்நிரலைப் பார்ப்போம்.

print "மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன்வெற்பில்"
print "பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி"
print "அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்"
print "நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே."

இச்செய்நிரலை இயக்கினீர்களேயானால்,

மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன்வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே.

என்ற வெளியீடு கிடைக்கும்.

கணினியானது இச்செய்நிரலை இயக்கும்போது, முதலில்,

print "மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன்வெற்பில்"

என்ற வரியை வாசிக்கும். எனவே, கணினியானது

மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன்வெற்பில்

என்ற உரையைத் திரையில் பதிக்கின்றது. கணினியானது இனி அடுத்த வரியை வாசிக்கும்.

print "பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி"

எனவே, கணினியானது

பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி

என்ற உரையைத் திரையில் பதிக்கின்றது.

இவ்வாறே, கணினியானது ஒவ்வொரு வரியாக வாசித்து, அந்தக் கட்டளையைச் செயற்படுத்தியபின், அடுத்த வரிக்கு நகரும். செய்நிரலின் இறுதிவரை இச்செயன்முறை தொடரும். எனவே, ஏதாவது ஒரு வரியில் பிழை இருப்பினும், அதற்கு முந்திய வரிகளால் தெரிவிக்கப்படும் கட்டளைகள் செயற்படுத்தப்படும்.

இவ்வாறே, ஒவ்வொரு வரியைப் பதிப்பதற்கும் print கூற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவேண்டுமா? தேவையில்லை. பின்வரும் செய்நிரலை இயக்கிப் பாருங்கள்.

print "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉம் மழை."

வெளியீடு:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

\n என்று தட்டச்சிட்டால், புதிய வரி (New line) தோற்றுவிக்கப்படும் என இப்போது அறிந்துள்ளீர்கள்.

இரட்டை மேற்கோட்குறிகளை ஒற்றை மேற்கோட்குறிகளால் பதிலிட்டுப் பாருங்கள். வெளியீட்டில் மாற்றமில்லை. எனவே, இரட்டை மேற்கோட்குறிகளுக்குப் பதிலாக ஒற்றை மேற்கோட்குறிகளையும் பயன்படுத்தலாம் எனத் தெளிவாகின்றது.

பின்வரும் செய்நிரல்களை ஒவ்வொன்றாக இயக்கி, வெளியீடுகளைக் கவனியுங்கள்.

print "Computer என்பதைத் தமிழில் "கணினி" என்று அழைக்கலாம்."
print 'Computer என்பதைத் தமிழில் 'கணினி' என்று அழைக்கலாம்.'
print 'Computer என்பதைத் தமிழில் "கணினி" என்று அழைக்கலாம்.'
print "Computer என்பதைத் தமிழில் 'கணினி' என்று அழைக்கலாம்."

முதலிரு செய்நிரல்களையும் இயக்கும்போது invalid syntax என்ற பிழைச்செய்தி காட்டப்படுவதைக் கவனிக்கலாம். இறுதியிரு செய்நிரல்களும் சரிவர இயங்கியிருக்கும். இரட்டை மேற்கோட்குறிகளைப் பதிக்கவேண்டியிருப்பின், print கூற்றுக்கு ஒற்றை மேற்கோட்குறிகளையும், ஒற்றை மேற்கோட்குறிகளைப் பதிக்கவேண்டியிருப்பின், print கூற்றுக்கு இரட்டை மேற்கோட்குறிகளையும் பயன்படுத்தவேண்டும். இரண்டு வகையான மேற்கோட்குறிகளையும் பதிப்பதற்கு? சரி, பின்வரும் செய்நிரல்களையும் ஒவ்வொன்றாக இயக்கிப்பாருங்கள்.

print "'Computer' என்பதைத் தமிழில் "கணினி" என்று அழைக்கலாம்."
print ''Computer' என்பதைத் தமிழில் "கணினி" என்று அழைக்கலாம்.'

மீண்டும் அதே பிழைச்செய்தி. என்ன செய்யலாம்?

print "\'Computer\' என்பதைத் தமிழில் \"கணினி\" என்று அழைக்கலாம்."

வெளியீடு:

'Computer' என்பதைத் தமிழில் "கணினி" என்று அழைக்கலாம்.

இரட்டை, ஒற்றை மேற்கோட்குறிகளைப் பதிப்பதற்கு, முறையே, \", \' ஆகியவற்றைப் பயன்படுத்தமுடியும் என இப்போது கற்றுள்ளீர்கள். இதேபோல், இடஞ்சாய்கோடு, தத்தல் ஆகியவற்றைப் பதிப்பதற்கு, முறையே, \\, \t ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

print "வலைத்தளம்:\tவிக்கிநூல்கள்"
print "\\n என்று தட்டச்சிட்டால், புதிய வரி தோற்றுவிக்கப்படும்."

வெளியீடு:

வலைத்தளம்:	விக்கிநூல்கள்
\n என்று தட்டச்சிட்டால், புதிய வரி தோற்றுவிக்கப்படும்.

சொல்லாட்சி[தொகு]

நிரலாக்கச் சொல்லாட்சி பற்றி இனிப் பார்ப்போம்.

மேலே நாம் print என்ற கட்டளையைப் பயன்படுத்துகின்றோம். இக்கட்டளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளபுருக்களை வழங்கமுடியும்.

print "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்."

இங்கே "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்." என்ற ஓர் அளபுரு print கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அளபுருவானது மேற்கோட்குறிகளினுள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கோட்குறிகளினுள் வழங்கப்படுபவற்றைச் சரம் (String) என்றழைப்பர். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉம் மழை." என்பதைச் சரத்திற்கான இன்னோர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கட்டளையையும் அளபுருக்களையும் சேர்த்துக் கூற்று என்றழைப்பர்.

print "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்."

என்பது கூற்றுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

தற்போதைக்கு இவ்வளவும் போதும். பிற சொல்லாட்சிகளை, அவற்றைப் பற்றிக் கற்கும்போது அறிந்துகொள்வோம்.

கோவைகள்[தொகு]

இதோ இன்னொரு செய்நிரல்.

print "2 + 2 =", 2 + 2
print "3 * 4 =", 3 * 4
print "100 - 1 =", 100 - 1
print "(33+2)/5 + 11.5 =", (33+2)/5 + 11.5

வெளியீடு:

2 + 2 = 4
3 * 4 = 12
100 - 1 = 99
(33+2)/5 + 11.5 = 18.5

இப்போது பைத்தனை ஒரு கணிப்பானாகப் பயன்படுத்தியுள்ளோம். இந்த எடுத்துக்காட்டில், print கட்டளைக்கு இரண்டு அளபுருக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் காற்புள்ளியால் வேறுபடுத்தப்பட்டுள்ளன. செய்நிரலின் முதலாவது வரியை எடுத்துக்கொள்வோம்.

print "2 + 2 =", 2 + 2

இங்கு முதலாவது அளபுரு "2 + 2 =" என்ற சரம் ஆகும். இரண்டாவது அளபுரு 2 + 2 என்ற கணிதக்கோவை ஆகும். இதனைப் பொதுவாகக் கோவை என்றே அழைப்பர். சரமானது எப்படியிருக்கின்றதோ அப்படியே பதிக்கப்படும் (\n போன்ற விதிவிலக்குகள் உள்ளன. மேற்கோட்குறிகளினுள் உள்ள பகுதியே சரம் ஆகும். எனவே, மேற்கோட்குறிகள் இன்றியே சரம் பதிக்கப்படும்.). ஆனால், ஒரு கோவையானது அதன் உண்மையான பெறுமானத்திற்கு மதிப்பிடப்படும் (Evaluate).

பைத்தன் 2.7இல் எண்களுக்கான ஆறு அடிப்படைச்செய்கைகள் காணப்படுகின்றன.

செய்கை குறியீடு எடுத்துக்காட்டு
வலு (அடுக்கேற்றம்) ** 5 ** 2 == 25
பெருக்கல் * 2 * 3 == 6
வகுத்தல் / 14 / 3 == 4
மீதி % 14 % 3 == 2
கூட்டல் + 1 + 2 == 3
கழித்தல் - 4 - 3 == 1

இங்கே வகுத்தலானது பின்வரும் நெறியைப் பின்பற்றுகின்றது என்பதைக் கவனத்திற்கொள்ளுங்கள். வழங்கப்படும் கணிதக்கோவையில் பதின்மங்கள் இல்லையென்றால், முழுவெண் வகுத்தலே இடம்பெறும். பின்வரும் செய்நிரலை இயக்கிப்பாருங்கள்.

print "14 / 3 =", 14 / 3
print "14 % 3 =", 14 % 3
print
print "14.0 / 3.0 =", 14.0 / 3.0
print "14.0 % 3.0 =", 14.0 % 3.0
print
print "14.0 / 3 =", 14.0 / 3
print "14.0 % 3 =", 14.0 % 3
print
print "14 / 3.0 =", 14 / 3.0
print "14 % 3.0 =", 14 % 3.0
print

வெளியீடு:

14 / 3 = 4
14 % 3 = 2

14.0 / 3.0 = 4.66666666667
14.0 % 3.0 = 2.0

14.0 / 3 = 4.66666666667
14.0 % 3 = 2.0

14 / 3.0 = 4.66666666667
14 % 3.0 = 2.0

பதின்மப் பெறுமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா இல்லையா என்பதற்கேற்ப விடைகள் வேறுபடுவதைக் கவனத்திலிருத்திக்கொள்ளுங்கள்.

கணிதத்தில் பின்பற்றப்படும் செய்கைகளின் ஒழுங்கே பைத்தனிலும் பின்பற்றப்படுகின்றது.

 • பிறை அடைப்புக்குறிகள் ()
 • அடுக்குகள் **
 • பெருக்கல் *, வகுத்தல் /, மீதி %
 • கூட்டல் +, கழித்தல் -

தேவையான இடங்களில் பிறை அடைப்புக்குறிகளைப் பயன்படுத்தி, வாய்பாடுகளைக் கட்டமைத்துக்கொள்ளலாம்.

மனிதர்களுடன் பேசுதல்[தொகு]

நீங்கள் ஒரு சிக்கல் நிறைந்த நிரலை எழுதுகின்றீர்கள். சிறிது காலம் கழித்துப்பார்க்கும்போது, எதற்காக இந்த வரியை எழுதினேன் என்று உங்களுக்கே கூடப் புரியாமற்போகலாம். இதனைத் தவிர்ப்பதற்காக, நிரலில், தேவையான இடங்களில் கருத்துரைப்பது நன்று. என்ன நடக்கின்றது என்பதை உங்களுக்கும் பிற நிரலாக்குநர்களுக்கும் உணர்த்துவதற்காகவே, இக்கருத்துகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

# பைக்குப் பதிலாக இது பயன்படுத்தப்படுகின்றது.
print 22.0 / 7.0  # 355/113 என்பது இன்னும் கிட்டிய அண்ணளவாக்கமாக இருக்கும்.

என்பதற்கு,

3.14285714286

என்ற வெளியீடு கிடைக்கும். கருத்துகள் சதுரக்குறியுடன் (#) தொடங்கப்படவேண்டும். ஒரு கருத்தினுள் எந்தவோர் உரையையும் உள்ளிடமுடியும். செய்நிரலை இயக்கும்போது, # குறியீட்டிலிருந்து அவ்வரியின் இறுதிவரையான உரைப்பகுதியானது கணினியால் புறக்கணிக்கப்படும். ஒரு புதிய வரியின் தொடக்கத்தில் தான் # அமைந்திருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லையென்பதையும் மேலேயுள்ள எடுத்துக்காட்டின்மூலம் அறிந்துகொள்ளலாம்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

இந்நூலின் ஒவ்வோர் இயலிலும், அவ்வவ்வியலில் அறிமுகப்படுத்தப்பட்ட நிரலாக்கவசதிகளுக்கான எடுத்துக்காட்டுகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் குறைந்தது இவற்றைப் பார்த்துப் புரிந்துகொள்ள முயலவாவது வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்ளமுடியாவிடின், இச்செய்நிரல்களை இயக்கிப்பாருங்கள், மாற்றங்களைச் செய்துபாருங்கள்.

kaniyan_poongundranaar.py

print "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
print "        -- கணியன் பூங்குன்றார்"

வெளியீடு:

யாதும் ஊரே யாவரும் கேளிர்
        -- கணியன் பூங்குன்றார்

school.py

print "முதலாம் ஆண்டு"
print "1 + 1 =", 1 + 1
print "2 + 4 =", 2 + 4
print "5 - 2 =", 5 - 2
print
print "இரண்டாம் ஆண்டு"
print "243 - 23 =", 243 - 23
print "12 * 4 =", 12 * 4
print "12 / 3 =", 12 / 3
print "13 / 3 = ஈவு", 13 / 3, "மீதி", 13 % 3
print
print "ஐந்தாம் ஆண்டு"
print "123.56 - 62.12 =", 123.56 - 62.12
print "(4 + 3) * 2 =", (4 + 3) * 2
print "4 + 3 * 2 =", 4 + 3 * 2
print "3 ** 2 =", 3 ** 2

வெளியீடு:

முதலாம் ஆண்டு
1 + 1 = 2
2 + 4 = 6
5 - 2 = 3

இரண்டாம் ஆண்டு
243 - 23 = 220
12 * 4 = 48
12 / 3 = 4
13 / 3 = ஈவு 4 மீதி 1

ஐந்தாம் ஆண்டு
123.56 - 62.12 = 61.44
(4 + 3) * 2 = 14
4 + 3 * 2 = 10
3 ** 2 = 9

பயிற்சிகள்[தொகு]

 1. உங்கள் முழுப்பெயரையும் பிறந்த நாளையும் தனித்தனிச் சரங்களாகப் பதிக்கும் ஒரு செய்நிரலை எழுதுக.
 2. எண்களுக்கான ஆறு அடிப்படைச்செய்கைகளின் பயன்பாட்டைக் காட்டும்வகையிலமைந்த ஒரு செய்நிரலை எழுதுக.

இவை மாதிரி விடைகளே. ஒரு கேள்விக்கு வெவ்வேறு முறைகளில் செய்நிரல்களை அமைக்கலாம்.

விடைகள்

1. உங்கள் முழுப்பெயரையும் பிறந்த நாளையும் தனித்தனிச் சரங்களாகப் பதிக்கும் ஒரு செய்நிரலை எழுதுக.

print "சிவகுமார் சரவணன்", "1975.07.23"

2. எண்களுக்கான ஆறு அடிப்படைச்செய்கைகளின் பயன்பாட்டைக் காட்டும்வகையிலமைந்த ஒரு செய்நிரலை எழுதுக.

#கூட்டல்
print "2 + 5 =", 2 + 5

#கழித்தல்
print "9 - 3 =", 9 - 3

#பெருக்கல்
print "3 * 3 =", 3 * 3

#வகுத்தல்
print "90 / 5 =", 90 / 5

#அடுக்கேற்றம்
print "ஏழின் இரண்டாம் வலு =", 7 ** 2

#மீதி
print "பத்தை மூன்றால் வகுக்கும்போது மீதி =", 10 % 3