உள்ளடக்கத்துக்குச் செல்

நீத்தார் பெருமை

விக்கிநூல்கள் இலிருந்து

« முன் பக்கம்: வான் சிறப்பு | திருக்குறள் » பாயிரவியல் » நீத்தார் பெருமை | அடுத்த பக்கம்: அறன் வலியுறுத்தல் »


21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
  • ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.
22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
  • உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அது போலத்தான் உண்மையாகவே பற்றுக்களைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
  • நன்மை ஏது, தீமை ஏது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
24. உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
  • உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
  • புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
  • பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரியச் செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.
27. சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான்கட்டே உலகு.
  • ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
  • சானறோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
  • குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.
30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
  • அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.


« முன் பக்கம்: வான் சிறப்பு | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: அறன் வலியுறுத்தல் »

"https://ta.wikibooks.org/w/index.php?title=நீத்தார்_பெருமை&oldid=2907" இலிருந்து மீள்விக்கப்பட்டது