உள்ளடக்கத்துக்குச் செல்

மழலையர் சிறுகதைகள்/நெல்லின் கதை

விக்கிநூல்கள் இலிருந்து
யாழினி இன்று பள்ளிக்கு செல்ல வில்லை. அவளுக்கு உடம்பு சரியில்லை. யாழினியின் அம்மா அவளுக்காக அரிசி கஞ்சி தயாரிப்பதாகச் சொன்னார்கள். யாழினிக்கு அரிசிக் கஞ்சி என்றால் பிடிக்கவே பிடிக்காது.


அரிசியை எடுத்து அம்மா சுத்தம் செய்த போது, அதில் இருந்த ஒரு நெல்மணி யாழினியை அழைத்தது. என்ன நெல்லா பேசியது? யாழினிக்கோ தாங்க முடியாத வியப்பு!


என்ன யாழினி. ஆச்சரியமாக உள்ளதா? 'நான் தான் பேசுகிறேன்' என்று சொன்னது நெல். நான் வளமான வண்டல் மண்ணில் விளைவேன், அதிக மழை, மிதமான வெப்பம், ஈரப்பதம் ஆகியவை எனக்குத் தேவை. மழை குறைவாகப் பெய்யும் இடங்களில் நீர்ப்பாசனம் மூலமாக என்னை சாகுபடி செய்கிறார்கள் என்றது நெல்.


நெல்லின் பேச்சை கேட்ட யாழினிக்கு அதனைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 'உன்னை எவ்வாறு விளைவிக்கிறார்கள்?' என்று கேட்டாள்.


உழவு செய்து பன்படுத்திய நிலத்தில் என் விதைகளை விதைப்பார்கள். வளர்ந்ததும் எனக்கு "நாற்று" என்று பெயர். வளர்ந்த நாற்றுகளைப் பறித்து நீர் குறைந்த பன்படுத்தப் பட்ட நிலத்தில் என்னை வரிசையாக நடுவார்கள்.


'அப்படியா! மேலே சொல் எனக்கு ஆர்வமாக உள்ளது' என்றாள் யாழினி. நான் வளரும் பொழுது நீர் பாய்ச்சி, உரமிடுவார்கள். நான் வளரும்பொழுதே என்னுடன் "களை" என்று சொல்லக்க் கூடிய தேவையற்ற செடிகளும் முளைக்கும். அவற்றை நீக்கி என்னை நன்றாகப் பராமரிப்பார்கள். கதிர் நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்வார்கள். கதிர்களை நன்றாக அடித்து என்னைத் (நெல்மணிகளை) தனியாக எடுப்பார்கள்.


'உன் கதை கேட்பதற்கு மிக நன்றாக உள்ளது. என் வீட்டிற்கு நீ எவ்வாறு வந்து சேர்ந்தாய்?'

எனக் கேட்டாள் யாழினி.


'நெல்மனிகளைப் பிரித்ததும் அரவை ஆலையில் அரிசியாக மாற்றுவர். பின்னர் சந்தைக்கு எடுத்துச் செல்வர். அங்கிருந்து உங்கள் வீடுகளை வந்தடைவேன். உங்களுக்குப் பிடித்தமான உணவாக மாறுவேன். நீங்கள் என்னை விதவிதமாய் சமைத்து உண்ணலாம் ' என்றது நெல்.


உடனே யாழினி, ' ஆம். ஆம். நெல்லில் புரதம் மற்றும் மாவுச் சத்துகள் உள்ளதாக என் ஆசிரியர் கூறினார்' என்றாள். 'உண்மைதான்' என்றது நெல். அதற்குள் அம்மா அரிசி கஞ்சி தயார் செய்து கொண்டு வந்தார்கள். நெல் சொன்ன கதையைக் கேட்ட யாழினி அதை மகிழ்ச்சியோடு வாங்கிப் பருகினாள்.


அரிசியில் தயாராகும் உணவு வகைகள்

 1. சோறு
 2. இட்டலி
 3. தோசை
 4. வெண்பொங்கல்
 5. சர்க்கரைப்பொங்கல்
 6. பிரியாணி
 7. கொழுக்கட்டை
 8. அரிசி உப்புமா
 9. அரிசிக் கஞ்சி
 10. அரிசிக் கூழ்
 11. அரிசிப் பாயசம்