முகாமைத்துவம்/நேர முகாமைத்துவம்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

நேரமுகாமைத்துவம் இன்று எதற்கெடுத்தாலும் தனக்கு நேரமில்லை அல்லது நேரம் போதாது என்கிறான் மனிதன். பணிகள் நேரத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளன என இதற்கு ஒரு வகையில் நியாயம் சொல்லப்பட்ட போதிலும் இந்நியாயம் எல்லோருக்கும் பொருந்துமா, எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்துமா, எல்லா விடயங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. நேரத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்து இயங்காததன் விளைவே இது என மற்றொரு புறத்தில் குரலொன்று ஓங்கி ஒலிக்கின்றது.

நேரம் உண்மையில் பெறுமதிமிக்கது, விலைமதிக்கமுடியாதது. பத்தரை மாற்று பசும் பொன்கூட மனிதனின் ஆயுளில் ஒரு வினாடிக்கு ஈடாகாது. காலம், நேரம் அவ்வளவு பெறுமதிவாய்ந்தவை, உச்ச பயன் அடையும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியவை, வீணடிக்கத்தகாதவை என்பதையெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலம், இரவு, பகல் விடியற்காலை, காலை, முற்பகல் என்பவற்றின் மீது அல்லாஹ் தஆலா சத்தியமிடுகிறான்.

“காலத்தின் மீது சத்தியமாக” (103:01) “இரவின் மீது சத்தியமாக அது மூடிக்கொள்ளும் போது. பகலின் மீது சத்தியமாக அது வெளியாகிய போது”. (92: 01- 02), “விடியற்காலையின் மீது சத்தியமாக” (89: 01), “காலையின் மீது சத்தியமாக அது தெளிவாகிய போது” (81:18), “முற்பகல் மீது சத்தியமாக” (93:01) என புனித அல்குர்ஆனில் ஆங்காங்கே காணலாம்.

காலத்தை சரிவர முகாமைத்துவம் செய்வது தனிமனிதப் பொறுப்பாகும். அது பற்றிய மறுமையில் விசாரணை உண்டு. இது லேசுமாசான இலகுவில் பதில் சொல்லி தப்பிக்க முடியுமான விடயமன்று. ஆயுட்காலத்தை கழித்த முறை பற்றி அல்லாஹ்விடம் சரியாக கணக்குக் காட்ட வேண்டும். பின்வரும் நாயக வாக்கியம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.

“நான்கு விடயங்கள் பற்றி அவன் விசாரிக்கப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் ஆசைய மாட்டா. அவனின் வாழ் நாள் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் வாலிபம் பற்றி அதனை அவன் எதில கழித்தான், அவனின் செல்வம் பற்றி அதனை அவன் எங்கிருந்து சம்பாதித்தான் மேலும் அதனை அவன் எதில் செலவழித்தான், அவனின் அறிவு பற்றி அதிலே அவன் என்ன செய்தான்” (அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்: அல்- முஃஜம் அல்-கபீர்)

மனித ஆயுள் மிக மிக குறைவானது. இக்குறுகிய வாழ்நாளுக்குள்தான் மனிதன் மறுமைக்காக சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் இடையில் இவ்வுலகத் தேவைகளையும் நிறைவேற்றுக் கொள்ள வேண்டும். தான் மட்டுமா? பெற்றார், மனைவி, மக்கள், உற்றத்தார், சுற்றத்தார் என பலரும் உளர். இவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கவனித்தாக வேண்டும். தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில், பொருளாதார வாழ்வில், தொழில் வாழ்வில் பலதும் பத்தும்.

எனவேதான் நேரத்தை நாம் சரியாகத் திட்டமிட்டு நம்மை நாம் இயக்க வேண்டியுள்ளது. காலமும் நேரமும் எம்மனிதருக்காகவும் காத்திருப்பதில்லை’ என்பது ஆங்கில முதுமொழியொன்றின் பொருளாகும். நாம் நேரத்தைப் பயன்படுத்தினோமோ, இல்லையோ கழிகின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதும் நிச்சயமாக திரும்பி வரப் போவதில்லை, அதனை எவ்விலை கொடுத்தும் பிரதியீடு செய்து கொள்ள முடியாது. ஓர் அரேபிய கவிதையின் தமிழாக்கம் இது:

உமது ஆயுள் எண்ணப்படக்கூடிய சில மூச்சுகள். உம்மிலிருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்து விட்டது”

விடியற்காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நமது வேலைகளை திட்டமிட்டுக் கொண்டு தொழிற்பட வேண்டும். நேரத்துக்கு ஒரு வேலை, வேலைக்கு ஒரு நேரம் என்ற வகையில் நம்மை நாம் பயிற்றுவிக்க வேண்டும். நாளையை இன்றே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

அவசியமானது எது, அதி அவசியமானது எது, அவசரமானது எது, அதி அவசரமானது எது, முக்கியமானது எது, அதி முக்கியமானது எது, குடும்பம் சார்ந்தது எது, தொழில் சார்ந்தது எது, சமூகம் சார்ந்தது எது என்றெல்லாம் வகைப்படுத்தி அது அதற்குத் தேவையான அளவு நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.

பின்னர் அதற்கேற்ப காரியமாற்ற வேண்டும் இதுவே உண்மையான நேர முகாமைத்துவம்.

நேர முகாமைத்துவத்தில் இஸ்லாம் வெகு கண்டிப்பாக உள்ளது. நேர முகாமையத்துவத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விட வேறொருவர் எமக்கு முன்மாதிரியாகத் தேவையில்லை எனத் துணிந்து கூறும் அளவுக்கு அவர்கள் சொல்லாலும் செயலாலும் நேர முகாமைத்துவம் செய்து காட்டியுள்ளார்கள்.

அன்னாரின் இரவு, பகல் இரண்டுமே திட்டமிடப்பட்ட வகையில் கழிந்தன.

வெட்டி வேலைகள், விடயங்களுக்கு காலத்தை, நேரத்தை ஒதுக்கலாகாது. இவ்வகை விடயங்கள், வேலைகள், ஒன்றுகூடல்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் சமகாலத்தில் ஏராளமாக, தாராளமாக உள்ளன. தெரிந்தவர்கள், நண்பர்கள், சகபாடிகள், உறவினர்கள் அழைக்கின்றனர் என நியாயம் சொல்லிக் கொண்டு வீணர்களுடன் சேர்ந்து தானும் தனது பொன்னான நேரத்தை மண்ணாக்கலாகாது.

செய்ய வேண்டியவை, ஆற்ற வேண்டியவை நிறைய இருக்கத்தக்க அவற்றையெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு ஏதேதோ உருப்படியற்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்த பின் இதற்கு நேரமில்லை, இதற்கு நேரமில்லை என முனங்கியவண்ணம், கூக்குரலிட்டவண்ணம் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகளைத் தள்ளிப்போடுதல், செய்யாது விடல், அரைமனதுடன் செய்தல், செய்நேர்த்தி இல்லாமல் செய்தல் அறிவுபூர்வமானதல்ல.

நேரம் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள ஓர் அமானிதம். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவரவர் கையிலுள்ளது. இதன் மூலமே நேர அமானிதம் பேணப்படுகின்றது. நேர முகாமைத்துவம் செய்யாதவர் மொத்தத்தில் தன்னைத் தானே ஒழுங்குபடுத்தாதவர்.