முகாமைத்துவம்/பண்டைய நிவாகக் கோட்பாடு

விக்கிநூல்கள் இலிருந்து

முகாமைத்துவ சிந்தனையானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தோற்றம் பெற்றுவிட்டது. முகாமைத்துவம் பற்றிய தத்துவங்கள் கி.மு 3000 – 4000 ஆண்டு காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளதனை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக கி.மு 2900 ஆண்டளவில் எகிப்தில் 481 அடி உயரமான பிரமிட் முகாமைத்துவ சிந்தனையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.

முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தினை முன்வைத்தவர் மேரி பாக்கர் பொலட். இவர் முகாமைத்துவம் என்பது ஊழியர்களைக் கொண்டு கருமங்களை மேற்கொள்வது தொடர்பான ஒரு கலையாகும் எனக் குறிப்பிட்டார். அதாவது நிறுவனத்தின் வளங்களை திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் என்பன மூலம் நிறுவனத்தின் இலக்கினை பயனுறுதி மிக்கதாகவும் திறமையாகவும் அடைய முற்படும் செயற்பாடாகும்.

மேலும் பல முகாமையாளர்கள் முகாமைத்துவம் தொடர்பாக பல வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். பிறீச் என்பவர் முகாமைத்துவம் தொடர்பாக குறிப்பிடுகையில் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டு செயற்படுகின்றன. அந் நோக்கத்தை அடைவதற்கு தமக்குக் கிடைக்கும் மனித வளம், பௌதீக வளம் என்பவற்றை பயன்படுத்தி முகாமையினர் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் எனும் செயற்பாடுகளை உள்ளடக்கிய சமூகச் செயற்பாடு முகாமைத்துவம் எனக் கூறுகின்றார்.

பீற்றர்சனும் பிளவ்மனும் குறிப்பிடுகையில் ஊழியரின் நோக்கத்தை அடைந்து கொள்வதன் ஊடாக நிறுவனத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ள ஒரு கருமமே முகாமைத்துவம் எனப்படும். இதன்படி ஊழியர்களுக்கான நலன்களை பெற்றுக்கொடுத்தல், நிறுவனத்தின் நோக்கமான இலாபத்தை அடைய வைத்தல் எனும் இரு முரண்பட்ட நோக்கங்களை இணங்க வைப்பதே முகாமையின் கடமை என கூறப்படுகின்றது.

டோவர் என்பவர் நிறுவனங்கள் தமது உபாயங்களை அடைந்து கொள்வதற்கு ஊழியர்களை முகாமை செய்யும் கருமமே முகாமைத்துவம் எனக் குறிப்பிடுகின்றார்.

கோக் மற்றும் ஜோன்சன் ஆகியோர் முகாமைத்துவம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உறுதியான குறிக்கோளை அடைவிப்பது தொடர்பாக வளங்களையும் சேவையையும் பயன்படுத்துவதும் அவற்றை ஒழுங்கமைப்பதுமான செயற்பாடு என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். திட்டவட்டமான நோக்கத்தை நோக்கி சகல முயற்சிகளையும் ஒரு முகப்படுத்துதல் முகாமைத்துவம் எனப்படும். E.L.F பிரச் என்பவர் அருமையான வளத்தினைப் பயன்படுத்தி நிறுவனத்தின் இலக்கினை அடைய முற்படும் கருமம் முகாமைத்துவம் என்கின்றார்.

ஒரு நோக்கத்தினை அடைவதற்கு ஆளணியினரது செயற்பாடுகளை வழிநடத்தும் ஒரு கலை முகாமைத்துவம் எனப்படும். சர்வதேச கல்விக் கலைக்கழஞ்சியம் (The International Encyclopedia of Education) குறிக்கோளை உருவாக்குதல், தெளிவான நிகழ்ச்சித் திட்டத்தினை அபிவிருத்தி செய்தல் அதனை வெற்றிகரமாக அடைவதற்கேற்ற வகையில் வசதிகளைத் திட்டமிடுதலும் பின்னூட்டலை வழங்குவதும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்காணித்து ஊக்குவிப்பை வழங்குவதும் முகாமைத்துவம் எனக் குறிப்பிடுகின்றது.

எனவே முகாமைத்துவம் என்பது தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்களை பயன்தரும் வகையில் அடைவதற்காக பிறரின் ஒத்துழைப்பு, பங்குபற்றுதல், தொடர்புறுதல் என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒரு சமூகச் செயன்முறையே முகாமைத்துவமாகும். அதாவது ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்காக அந் நிறுவனத்தில் உள்ள மனித, பௌதீக வளங்களைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், கண்காணித்தல், நெறிப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் முகாமைத்துவம் எனப்படும்.