முளையும் பயிருக்கு மூல நிரல்கள்
எல்லாம் மென்மயம் ஆகி வருகிறது எனத்துவங்கி, நம் பொருளொன்று நாம் இசையும் வண்ணம் ஆட வேண்டுமேயன்றி அதனை வடிவமைத்தோர் வருத்தும் படிக்கு அல்ல என்பது வரைப் பார்த்தோம். நமது மின்-மென் தேவைகளை நாளைப் பூர்த்திச் செய்யப் போகும் மழலைச் செல்வங்களுக்கு இந்நுட்பங்களை கற்பிப்பதற்கான அணுகுமுறை என்ன?
நகரத்தின் நல்ல பள்ளிகளில் அதுவும் ஒன்று. கல்வித்திட்டத்தில் கணினிப்பாடத்தைப் புதிதாகச் சேர்த்திருந்தனர். கூடவே அதற்குரியக் கூடுதல் கட்டணமும் தவறாது வசூலிக்கப் பட்டிருந்தது. கணினியென்றால் என்னவென்று கதைத்தே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
கணினிகள் உறையும் அறையின் கதவுகள் திறந்தன. மாணவர்களுக்கு ஏகக் குஷி! கணினியின் செயற்பாடுகள் அவர்களை வியக்கவைத்தன. கைக் கடுக்க எழுதிய கட்டுரைகள் விரல் நுனியில் விடுக்கப் பட்டு நிரந்தரமாகப் போகின்றன என்றால் விசித்திரம் தானே!
கணினி காட்டிய மாயங்களில் மற்றவர்கள் மெய் மறந்து இருந்த நேரம், இதைத் தட்டினால் அது நடக்கிறது என்பது கேட்கவும் பார்க்கவும் நல்லாத் தான் சார் இருக்கு! எனக்கு இதைத் தட்டினா முன்னாடி ஒன்னு காமிச்சீங்களே அது வரணும். எப்படிச் செய்ய எனக் கேட்டான் ஒருக் குறும்பன்.
அதெல்லாம் முடியாது! அதெல்லாம் மென்பொருளின் கையேட்டில் குடுக்கல. அதுலக் குடுக்காததை நம்மால செய்ய முடியாது எனக் கைவிரித்தார் ஆசிரியர். விரல் விசைக்கும் வண்ணம் மென்பொருளாட நிரல் மூலம் நமக்கு வேண்டுமென்பதை அன்று தான் அவரே உணர்ந்தார்.
எந்தத் துறையானாலும் கசடற கற்க வழி வகைச் செய்ய வேண்டும் என்பது தானே ஏகமனதான எதிர்பார்ப்பு. என்னச் செய்கிறது எனத் துவங்கி எப்படிச் செய்கிறது என்பது வரை எல்லாவற்றையும் கற்க வழி செய்வது தானே உண்மையானக் கல்வி.
கட்டடத்துறையைப் பொருத்திப் பார்ப்போம். கட்டடத் தொழிற் கல்விப் பயிலும் மாணவரொருவருக்கு கல் முதல் குவாரி வரை, மண் துவங்கி மலைகள் முடிய, குடிசையிலிருந்து கோட்டைக் கொத்தளம் வரை சகலத்தையும் அறிந்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதோடு, புகழ்பெற்றக் கட்டடங்கள் எப்படிக் கட்டப் பட்டுள்ளன, அதனை வடிவமைக்க வல்லுனர்கள் மேற்கொண்ட முறைகள் என்ன? முதலிய அனைத்தையும் அறிந்து கொள்ள வழி வகைச் செய்யப் படுகிறது.
ஆக கற்கும் ஏட்டுக் கல்வியோடு, கூடவே முன்னவர்களின் அனுபவ அறிவும் அவர்களுள்ளே பாடமாக்கப் படுகின்றன. இந்நுண்ணறிவு எதிர் காலத்தில் அவர்கள் செய்யும் தொழிலில் பளிச்சிடுகின்றன. துடிப்பான அவர்கள் அறிவிற்கு முந்தையோரின் அனுபவம் செறிவூட்டுகின்றது.
மென்துறையில் மாணவரொருவர் நுணுக்கமான அறிவினைப் பெற்று உயர இதற்கு முன்னர் உருவாக்கப் பட்டிருக்கும் நிரல்கள், அவை வடிவமைக்கப் பட்ட விதம், உருவாக்கிய அனுபவசாலிகள் கையாண்ட வழிமுறைகள் இவற்றையெல்லாம் கற்க வாய்ப்பிருக்க வேண்டாமா? மற்றவருக்கு எப்படியோ, மாணவர்களுக்கு மென்பொருள் என்னச் செய்கிறது என்பதையும் தாண்டி எப்படிச் செய்கிறது எனும் கல்வியில் தானே கசடற கற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
தனியுரிம மென்பொருளில் இத்தைகைய வாய்ப்புகள் கிஞ்சித்தும் கிடையாது. காசுகளைக் கொட்டிக் கொடுத்தும் மூல நிரல்களைக் காட்ட மறுப்பவற்றை கசடறக் கற்பது எப்படி? கல்விக்காக இவர்கள் இலவசமாக கொடுக்க முன்வந்தாலும் இதனைக் கற்க முனைவோர் எதிர்காலத்தில் இவர்களுக்கு கட்டுண்டு போவார்கள் என்பதைக் கருத்தில் நிறுத்துக.
மூல நிரல்கள் கிடைக்கின்றக் காரணத்தினால் மாணவர்களிடையே இயல்பாய் எழக்கூடிய ஏன்? என்ன? எப்படி? எங்கே? முதலிய அனைத்து விதமானக் கேள்விகளுக்கும் விடையாய் விளங்குகிறது கட்டற்ற மென்பொருள். மென்துறையெனும் விசால விருட்சம் வளர, அதன் வேருக்கு வலுச் சேர்க்கப் போகும் மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருளைக் காணிக்கையாக்குவோம்.