யாத்திரைப் பத்து/உரை 13-16

விக்கிநூல்கள் இலிருந்து

அடியா ரானீர் எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசே ரடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசேர் உடலைச் செலநீக்கிச்

சிவலோ கத்தே நமைவைப்பான்

பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன்

பூவார் கழற்கே புகவிடுமே.


பதப்பொருள் :

அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து - வந்து பொருந்தி, திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் - பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி - போகும்படி நீக்கி, சிவலோகத்தே - சிவபுரத்தே, நமைவைப்பான் - நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் - புகும்படி செய்வான்.

விளக்கம் :

முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம்.

இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_13-16&oldid=3651" இலிருந்து மீள்விக்கப்பட்டது