உள்ளடக்கத்துக்குச் செல்

யாத்திரைப் பத்து/உரை 16-20

விக்கிநூல்கள் இலிருந்து

விடுமின் வெகுளி வேட்கைநோய்

மிகவோர் காலம் இனியில்லை

உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ

டுடன்போ வதற்கே ஒருப்படுமின்

அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்

அணியார் கதவ தடையாமே

புடைபட் டுருகிப் போற்றுவோம்

புயங்கன் ஆள்வான் புகழ்களையே.


பதப்பொருள் :

(அடியார்களே!) மிக - மேன்மைப்படுவதற்கு, இனி ஓர் காலம் இல்லை - இனிமேல் ஒரு காலம் கிடையாது; ஆகையால், அணியார் கதவு அடையாமே - சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி, வெகுளி - கோபத்தையும், வேட்கை நோய் - காம நோயையும், விடுமின் - விட்டுவிடுங்கள், உடையான் அடிக்கீழ் - நம்மை உடைய பெருமானது திருவடிக்கீழ், பெருஞ்சாத்தோடு - பெரிய கூட்டத்தோடு, உடன் போவதற்கே ஒருப்படுமின் - உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள், புயங்கன் - பாம்பை அணிந்தவனும், ஆள்வான் - நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது, புகழ்களை - பெருமைகளை, புடைபட்டு - எங்கும் சூழ்ந்து, உருகிப் போற்றுவோம் - மனமுருகிப் போற்றுவோம்; போற்றினால், சிவபுரத்துள் - சிவலோகத்தில், நாம் போய் அடைவோம் - நாம் போய்ச் சேர்ந்துவிடுவோம்.

விளக்கம் :

சினமும் ஆசையும் சிவலோகத்தை அடையத் தடையாதலின், 'கதவதடையாமே விடுமின் வெகுளி வேட்கை நோய்' என்றார். வாய்ப்பு உள்ளபோதே பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாதலின், 'மிக ஓர் காலம் இனியில்லை' என்றார். கதவு அடையாதிருத்தலாவது, திருவருள் பெருகியிருத்தல். தாம் மட்டும் பயன் பெற விரும்பாதவர் ஆதலின், 'பெருஞ்சாத்தோ டுடன்போவதற்கே ஒருப்படுமின்' என்று எல்லோரையும் அழைக்கிறார்.

இதனால், இறைவன் திருவடி சேர்வதற்குக் காலம் தாழ்த்தலாகாது என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_16-20&oldid=2374" இலிருந்து மீள்விக்கப்பட்டது