யாத்திரைப் பத்து/உரை 21-24

விக்கிநூல்கள் இலிருந்து

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்

புயங்கன் தாளே புந்திவைத்திட்

டிகழ்மின் எல்லா அல்லலையும்

இனியோர் இடையூ றடையாமே

திகழுஞ் சீரார் சிவபுரத்துச்

சென்று சிவன்தாள் வணங்கிநாம்

நிகழும் அடியார் முன்சென்று

நெஞ்சம் உருகி நிற்போமே.


பதப்பொருள் :

(அடியார்களே!) நாம் - நாம், இனி -இனிமேல், ஒர் இடையூறு அடையாமே - ஒரு துன்பம் வந்து சேராவண்ணம், திகழும் - விளங்குகின்ற, சீர் ஆர் - சிறப்பு அமைந்த, சிவபுரத்துச் சென்று - சிவபுரத்துக்குப் போய், சிவன் தாள் வணங்கி - சிவபெருமானது திருவடியை வணங்கி, நிகழும் - அங்கே வாழும், அடியார் முன் சென்று - அடியார் முன்னே சென்று, நெஞ்சம் உருகி நிற்போம் - மனம் உருகி நிற்போம்; அதற்கு, புயங்கள் தாளே - பாம்பணிந்த பெருமானது திருவடியையே, புகழ்மின் - புகழுங்கள், தொழுமின் - வணங்குங்கள், பூப்புனைமின் - அவற்றுக்கு மலர்சூடுங்கள், புந்தி வைத்திட்டு - அதனையே நினைவில் வைத்துக்கொண்டு, எல்லா அல்லலையும் - பிற எல்லாத் துன்பங்களையும், இகழ்மின் - இகழுங்கள்.

விளக்கம் :

இறைவனது பழவடியாரோடு சேர்ந்து இன்புற்றிருப்பதற்கு அவனது திருவடியை இடைவிடாது வணங்கவேண்டும் என்றார், இனி, உலகத்துன்பங்களைக் களைவதற்கும் அவனது திருவடியை உள்ளத்து அமைத்துக்கொள்ள வேண்டும் என்பார்.

'புயங்கன் தாளே புந்திவைத்திட் டிகழ்மின் எல்லா அல்லலையும்'

என்றார்.

இதனால், இறைவன் திருவடிப் புகழ்ச்சியே எல்லாத் துன்பங்களையும் போக்கும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_21-24&oldid=2375" இலிருந்து மீள்விக்கப்பட்டது