யாத்திரைப் பத்து/உரை 25-28

விக்கிநூல்கள் இலிருந்து

நிற்பார் நிற்கநில் லாஉலகில்

நில்லோம் இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே

நிற்கும் பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்தால்

பெறுதற் கரியன் பெம்மானே.


பதப்பொருள் :

பொற்பால் - அழகினால், ஒப்பு ஆம் - தனக்குத் தானே நிகரான, திருமேனி - திருமேனியையுடைய, புயங்கன் ஆள்வான் - பாம்பணிந்த பெருமானது, பொன்னடிக்கே - பொன் போன்ற திருவடியை அடைவதற்கே, நிற்பீர் - நிற்கின்றவர்களே, நில்லா உலகில் - நிலையில்லாத உலகின்கண், நிற்பார் நிற்க - நிற்க விரும்புவார் நிற்கட்டும், நாம் இனி நில்லோம் - நாம் இங்கு இனி நிற்கமாட்டோம், செல்வோம் - சென்றுவிடுவோம்; செல்லாமல், நின்று - தங்கி நின்று, பிற்பால் பேழ்கணித்தால் - பின்பு மனம் வருந்தினால், பெம்மான் - எம் பெருமான், பெறுதற்கரியன் - பெறுதற்கு அரியவனாவான்; ஆதலால், எல்லாம் தாழாது -எல்லோரும் காலந்தாழ்த்தாது, நிற்கும் பரிசே - நீங்கள் நினைந்து நின்றபடியே, ஒருப்படுமின் - செல்ல மனம் இசையுங்கள்.

விளக்கம் :

இறைவன் திருவடிப்பேற்றில் விருப்பம் இல்லாதவர்கள் அதனையடைய விரையமாட்டார்களாதலின், 'அவர்களை நோக்காதீர்கள்' என்பார், 'நிற்பார் நிற்க' என்றும், நின்றவர்கள் நிலைபெறப் போவதில்லை என்பார், 'நில்லாவுலகில் நிற்க' என்றும், 'நீவிர் அவர்கள் போல இல்லாமல் முந்த வேண்டும்' என்பார். 'எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்' என்றும், திருவடிப் பேற்றுக்கு முந்தாது போய்விட்டோமோ என்று பின்னால் வருந்தினால் பயனில்லை என்பார், 'பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கரியன் பெம்மான்' என்றும் கூறினார். பேழ்கணித்தல் என்னுஞ்சொல், 'பின்பு பெரிதும் இரங்குதல்' என்னும் பொருளது.

இதனால், இறைவன் திருவடிப் பேற்றுக்கு முந்த வேண்டும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_25-28&oldid=2376" இலிருந்து மீள்விக்கப்பட்டது