யாத்திரைப் பத்து/உரை 5-8

விக்கிநூல்கள் இலிருந்து

புகவே வேண்டா புலன்களில்நீர்

புயங்கப் பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின் மிக்கவெல்லாம்

வேண்டா போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து

நாயே அனைய நமையாண்ட

தகவே உடையான் தனைச்சாரத்

தளரா திருப்பார் தாந்தாமே.


பதப்பொருள் :

நக - நாட்டார் நகை செய்ய, ஞாலத்துள் புகுந்து - உலகில் எழுந்தருளி, நாயே அனைய - நாயைப் போன்ற, நமை ஆண்ட - நம்மை ஆட்கொண்ட, தகவு உடையான்தனை - பெருமையையுடைய இறைவனை, சார - அடைந்தால், தாம் தாம் - அவரவர், தளராது இருப்பார் - தளர்ச்சி நீங்கி இருப்பார்கள், ஆதலின், அடியவர்களே, நீர் - நீங்கள், புலன்களில் - ஐம்புல விடயங்களில், புகவேண்டா - செல்ல வேண்டா, புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமானது, பூங்கழல்கள் - தாமரைப் பூவை ஒத்த திருவடிகளை, மிக நினைமின் - மிகுதியாக நினையுங்கள், மிக்க எல்லாம் - எஞ்சியவையெல்லாம், வேண்டா - நமக்கு வேண்டா, போக விடுமின்கள் - அவற்றை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டுவிடுங்கள்.

விளக்கம் :

இறைவனை அடைந்தவர் இளைப்பு நீங்கி அமைதியாக இருப்பராதலின், 'தகவே உடையான் தனைச்சாரத் தளராதிருப்பார் தாம் தாமே' என்றார். 'ஆதலினால், நீங்களும் உங்களது இளைப்பு ஒழிந்து அமைதியாக இருக்க விரும்பினால், புயங்கப்பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின்' என்றார்.

இதனால், இறைவன் திருவடியையடைய விரும்ப வேண்டும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_5-8&oldid=2371" இலிருந்து மீள்விக்கப்பட்டது