வாழ்க்கை வரலாறுகள்/தரன்

விக்கிநூல்கள் இலிருந்து
"தரன்" திரு ஆர்.இராமமூர்த்தி

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கரை எனும் கிராமத்தைச் சேர்ந்த திரு ஆர்.இராமமூர்த்தி , சிறு வயது முதல் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.கையெழுத்து பத்திரிகை ஒன்றையும் கல்லூரி நாட்களில் நடத்தியுள்ளார். .திருச்சியில் உள்ள இ.ஆர்.மேனிலைப்பள்ளியில் பயின்றவர் இவர். "கல்கி" உள்ளிட்ட தமிழகத்தின் பிரபல பத்திரிகைகளில் இவருடைய கதைகள் வெளியாகி உள்ளன. இவர் "தரன்" என்னும் புனை பெயரில் தமிழ் கீர்த்தனைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். "தரனின் கீர்த்தனாஞ்சலி" என்ற வலைப்பூ ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். அதிலிருந்து எடுக்கப்பட்டது இது! == காளிங்கன் கர்வ பங்கம் ==

 (ராக மாலிகை)

இறை வணக்கம் --

விடையினிலமர்ந்த வண்ணம் வில்வத்தில் மகிழுமண்ணல்-புலி உடையினைச் சூடும் புனிதன், பிள்ளையாம் ஞான முதல்வன் கடையவன் 'தரனெ'ழுதும் காளிங்கன் கர்வ பங்கம் தடையெல்லாம் நீங்கி-புவி போற்றவே அருள் புரிவாயே


அந்தி சாயும் வரை ஆய்குலச் சிறாருடன் இரவி வந்து இறங்கினார் போல், புவி ஒளிர, மிளிர வந்தான் கந்த மணம் கமழும் யமுனை நதிக் கரையில், எந்தன் உள்ளம் கவர் கண்ணன் நின்று ஆடலுற்றான்.

ஆடலும், பாடலுமாய் சிறார், ஆட்டத்தை ஆட விட்டு, வேடம் தரித்த மாயன் பூப்பந்தை தவற விட்டான். ஓடிப் பிடித்து ஆடி- சற்றே, ஓய்ந்து நின்ற பாலர் தேடி எண்டிசைப் போந்தார்.. 'எங்குமே இல்லை' என்றார்.

இல்லை, இல்லை இல்லை என்று, எங்கும் பதில் வரவே, எல்லையில்லா அன்பில், உலகைக் காத்து நிற்கும் கடவுள், தொல்லை வருமென அறிந்தே, தொலைந்து போன பந்தை- நண்பர் சொல்லை மீறி சென்றான், என்றும் ஈகை குண மிக்கான்.

ஈகை குண மிக்கான் உடன் யமுனை நதி போந்தான், 'சாகக் கொடுத்திடவா, தாயார் இவனை ஈன்றெடுத்தாள்' என ஏகக் குரலில் சிறுவர் புலம்பியழுத பின்னர் தேகம் நடுங்க சொன்னார்-'கரு நாகம் போக்குமுயிரை..'

உயிரை மதியாமல் யமுனை ஆற்றில் இறங்கி விட்டான், அயிரை வழி காட்ட ஆபத்தைத் தேடிச் சென்றான்-நற் பயிரை அழிக்க வல்ல கொடும் விடத்தைக் கக்கும் நாகன் 'தயிரை கடையும் சிறுவா, நானுன்னை தகிப்பேன்' என ஊத...

ஊதிய விடச் சுவாலை அவனை ஒன்றும் செய்யாது - இது ஆதி சேடன் தாங்கும் அற்புத சீவன் என மோதி உணரா நாகன், சீறிப் பாய்ந்திடவே, பாம்பு சாதி சனங்களெல்லாம், பதற்றத்தில் எழும்பி நிற்க....

எழும்பி நின்ற நாகர் வியந்து நடுங்கிடவே, விடத் தழும்பு துளியுமின்றி கண்ணன் தனித்து அமர் புரிந்தான். கழுபேருவகைக் கொண்டு-கொடுங் காளிங்கன் வால் பற்றி எழுந்து தலை மேல் நிற்க, நாகனும் ஏற்றம் பெற்றான்.

ஏற்றம் பெற்ற நாகன் ஒன்று புரிந்து கொண்டான் - பிள்ளை தோற்றம் சிறிதெனினும் 'பெரும் ஆளெ' ன்று உணர்ந்து கொண்டான் ஆற்றல் பெற்ற இவன் நம்மைக் காக்கும் கடவுளென்று, மனம் தேற்றிக் கொண்ட நாகன், அழைத்தானவனை 'ஐயே' என்று...

ஐயே என்றினிய சொல் அவன் ஆட்டத்தை நிறுத்தி விட, பையக் காலசைக்க உடன் காளிங்கன் விடுபட்டான் 'தையல் நாயகா நானேது பிழை செய்தேன்' என அடங்கி கை குவித்து நாகன் உடல் ஒடுங்கலானான்.

ஒடுங்கி நின்றவனை கண்ணன் ஒன்று கேட்டுக் கொண்டான் 'இடராகப் போகும் நாகா, நீ இங்கு உறைந்திருந்தால்... விடத்தினைக் கக்குவது உந்தன் இயல்பாகுமதனால், இவ்- விடத்தினை விட்டகன்று, ஆழ்கடல் ஓடிடுவாய்'

'ஓடிடுவேன் கண்ணா ஓடிடுவேன் யமுனை விட்டகன்று ஓடிடுவேன் பாடிடுவேன் கண்ணா பாடிடுவேன் பாரினில் உன் புகழ் பாடிடுவேன்.. நாடிடும் பேருக்கு நற்கதியளித்திட, நாராயணா என ஓதிடுவேன்-பகை தேடிடும் கருடனை மாற்றிடுமுந்தன், பாதமெனக்கினி ஒளடதமே!'

'ஒளடதம் தந்தேன் நாகா, உந்தன் பத்தினிப் பெண்டிருடன் வெகு செளக்யமாயிரு' என ஆசிர்வதித்தான் கண்ணன் ஆனந்தம் மீக்கூற நாகன் சிரசினில் பாதம் வைத்து, அற்புதமாய் கண்ணன் காளிங்க நர்த்தனமாடுகின்றான்.

வேறு


ஆடுகின்றான் கண்ணன் ஆடுகின்றான் ஆனந்தத்திலவன் ஆடுகின்றான் நாரதனருகினில் பாடுகின்றான்.. நான்முகனுமங்கே ஆடுகின்றான்... துந்துபி மேளங்கள் முழங்கிடவே, தேவர்கள் பூமாரி பொழிந்திடவே, மரகத வீணை முழங்கிடவே... நந்தியுடன் ஐயனும் ஆடுகின்றான்....

--- மங்களம் -----

"https://ta.wikibooks.org/w/index.php?title=வாழ்க்கை_வரலாறுகள்/தரன்&oldid=14153" இலிருந்து மீள்விக்கப்பட்டது