வாழ்க்கை வரலாறுகள்/மாயூரம் வேதநாயகம் பிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு
[தொகு]வேதநாயகம்பிள்ளை திருச்சிராப்பள்ளிக்கு அடுத்துள்ள குளத்தூரில் சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரியம்மாளுக்கும் புதல்வராக 1826-ஆம்
ஆண்டு பிறந்தார். இவர் பல மொழிகளைக் கற்றறிந்தார். இவர் தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை ( மாயூரம்) ஆகிய இடங்களில் நிகரற்ற
நீதிபதியாகப் பணியாற்றினார்.
இவர் தமிழில் அரிய பல நுல்களை இயற்றியுள்ளார்.அவற்றுள் சில: நீதி நூல், பெண்மதிமாலை, பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி
பக்தி நூற்களாகிய திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, பெரியநாயகி அம்மன் பதிகம், தேவதோத்திரமாலை, மற்றும்
அனைத்துச் சமயத்தினரும் பாடுவதற்குரிய அரும்பெரும் கருத்துக்கள் கொண்ட சர்வ சமய சமயக் கீர்த்தனைகள்;
அறநெறியையும் ஆன்மீகத்தையும் தம்கீர்த்தனைகள் மூலம் மக்களிடம் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் விற்பன்னர் வேதநாயகம்
பிள்ளை. இவர் இயற்றிய சர்வசமயக் கீர்த்தனைகளில் சில முதல்தரமான இசையரங்குகளில் முதல்தரமான இசை வல்லுநர்களால் பாடப்பெற்றுச்
சிறப்படைந்துள்ளன.
எடுத்துக்காட்டுகள் :
கருணாலய நிதியே - இராகம் : இந்தோளம்
கருணாசாகரா - இராகம் :அடாணா
தயைபுரிய இன்னும் தாமதமா? : இராகம் மலைய மாருதம்
தருணம், தருணம் : இராகம் கத்தசாவேரி
போனது போகட்டும் : இராகம் : சுருட்டி
மனமேநீ ஈசன் நாமத்தை : இராகம் : குந்தளஹாளி
பரப்பிரம்மமே : இராகம் : சாமா
இன்னமும் தாமதமேன் ? : இராகம் :தேவமனோஹரி
இந்தவரம் தருவாய் : இராகம் :கரகரப்பிரியா
ஜாலம் செய்வதேதோ : இராகம் : வகுளாபரணம் -இன்னும் பல.
தமிழிசைப் பேராய்வாளர் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் 1800 பக்கங்களுக்கு மேற்பட்ட ஒப்பற்ற தனது ஆய்வு நூல் கருணாமிர்தசாகரத்தில்,
வேதநாயகம் பிள்ளையைப்பற்றிக் கூறியுள்ளதாவது: “வேதநாயகம் பிள்ளை சங்கீத சாகித்திய வித்துவான். வீணை வாசிக்கத் தெரிந்தவர். இவர்
நிறையக் கீர்த்தனைகள் எழுதியுள்ளார்.”
இத்தகைய சிறப்புப்பெற்ற இசையறிஞர் 1889 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 21 ஆம் நாள் காலமானார்.
உதவி :- சென்னை தமிழிசைச் சங்க 73-ஆம் ஆண்டு மலர் ( 2015-16)