உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை நூல்/செம்மை நெல் சாகுபடி

விக்கிநூல்கள் இலிருந்து

செம்மை நெல் சாகுபடி என்பது நெல் பயிரிடுதலில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன முறையாகும்.வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உண்வுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ள சூழ்நிலையில் இச்சாகுபடி முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தற்போதுள்ள நடைமுறையைவிட செம்மை நெல் சாகுபடி முறையினை கையாளுவது அவசியம்.

பாய் நாற்றங்கால் தயாரிக்கும் முறை

[தொகு]

ஏக்கருக்கு 3 கிலோ விதை நெல் தேவைப்படும். ஒரு ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்று மேடை தேவை. அருகிலிருக்கும் மண்ணை எடுத்து நடவு வயலின் ஓரத்தில் ஒரு மீட்டர் அகலம் ஐந்து மீட்டர் நீளம் (1மீ து 5 மீ) அளவுள்ள 8 மேடைகளை உருவாக்க வேண்டும். மேடையை நன்கு சமப்படுத்தி 1 து 5 மீ அளவுள்ள பாலிதீன் சீட்டை விரித்து விட வேண்டும். தொழி மண்ணை 2 செ.மீ. உயரத்திற்கு சமமாக இடவேண்டும்.

பின் விதைநேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் மூன்று கிலோ விதைக்கு ஒரு பாக்கெட் (200 கி) என்ற அளவிலும் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்த பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். நிழலில் உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் (24 மணி நேரம்) முளைகட்ட வேண்டும். ஒவ்வொரு 5 ச.மீ. மேடையிலும் 375 கிராம் (முளை கட்டும் முன் எடை) விதையை முளைகட்டியபின் (இரண்டாம் கொம்பு) பரவலாக விதைக்க வேண்டும். விதைத்த பின் தென்னை ஓலைகள் கொண்டு மேடைகளை மூடிவிட்டு மூன்றாம் நாள் எடுத்துவிடலாம். விதைத்த ஒரு வாரத்திற்கு பின் நாற்று வளர்ச்சி குறைவாக இருந்தால் 0.5 சத யூரியா கரைசலை (0.5 சத கரைசல் தயாரிக்க 50 கிராம் யூரியாவை 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்) பூவாளி கொண்டு தெளிக்க வேண்டும்.

நடவு வயல்

[தொகு]

செம்மை நெல் சாகுபடியில் நடவு வயலைச் சமன்படுத்துவது சரியாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். பள்ளமாக இருக்கும் இடங்களில் நடப்படும் இளநாற்றுகள் அழுகிவிட வாய்ப்புள்ளது. மேடுபள்ளமில்லாமல் பரம்படித்து சமன்படுத்த வேண்டும். நீர் வடியுமாறு சிறு வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். தேவையான 33 கிலோ டிஏபி உரத்தையும், 7 கிலோ பொட்டாஷ் உரத்தையும் அடியுரமாக நடவு வயலில் இடவேண்டும்.

சதுர நடவு

[தொகு]

ஒரு குத்துக்கு 1 நாற்றுவீதம் 14-15 நாட்கள் வயதுடைய நாற்றினை நடவு செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நோக்காமலும் ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது. நாற்றுக்களை 25 து 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்யவும். சதுர நடவு செய்வதற்கு அடையாளமிடப்பட்ட கயிறு அல்லது நடவு அடையாளக் கருவியையும் (மார்க்கர்) பயன்படுத்தலாம். நன்கு சமப்படுத்திய நடவு வயலை இரண்டு நாட்கள் இஞ்சவிட்டு பின்பு தண்ணீரை சுத்தமாக வடிக்க வேண்டும். அதன்பின் மார்க்கர் அல்லது நடவு அடையாளக் கருவியைக் கொண்டு உருட்டியபின் சதுர நடவை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் 25 து 25 செ.மீக்கு சதுர நடவு பின்பற்றப் பட்டு பயிருக்கு தேவையான காற்றோட்டம், சூரிய வெளிச்சம் கிடைத்து பயிர் நன்கு வளர்ச்சி அடைந்து அதிக தூர்கள் பெற முடிகிறது. மேலும் சுழலும் களைக்கருவியை கொண்டு முறையே நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40ம் நாட்களில் நெற்பயிர்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக உருட்டவேண்டும்.