உள்ளடக்கத்துக்குச் செல்

1-ஆந் திருமொழி - வண்ணமாடங்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

கண்ணன் திருவவதாரச் சிறப்பு

கலிவிருத்தம்


வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்து அளறா யிற்றே.


ஓடுவார் விழுவார் உகந்தா லிப்பார்

நாடுவார் நம்பிரான் எங்குற்றா னென்பார்

பாடுவார்களும் பல்பறைகொட்ட நின்று

ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே.


பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்

காணத்தாம் புகுவார் புக்குப போதுவார்

ஆணொப்பார் இவன்நேரில்லை காண் திரு

வோணத்தான் உலகாளு மென்பார்களே.


உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத்திளைது எங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.


கொண்ட தாளுறிக் கோலக் கொடுமழு

தண்டினர் பறியோலைச்சயனத்தர்

விண்டமுல்லை அரும்பன்னபல்லினர்

அண்டர்மிண்டிப் புகுந்துநெய்யாடினார்.


கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே.


வாயுள் வையகங் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்

மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.


பத்து நாளும் கடந்த இரண்டாநாள்

எத்திசையும் செயமரம் கோடித்து

மத்த மாமலை தாங்கிய மைந்தனை

உத்தானஞ் செய்து உகந்தனர் ஆயரே.


கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உகரத்தே பாய்ந்திடும்

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.


செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை

மின்னு நூல்விட்டுடச் சித்தன் விரித்த இப்

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்