1-ஆந் திருமொழி - வாக்குத்தூய்மை

விக்கிநூல்கள் இல் இருந்து
--வெ.ராமன் 09:01, 31 மே 2006 (UTC)
          வாக்குத்தூய்மை
		எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வாக்குத் தூய்மை யிலாமை யினாலே மாதவா!உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை யல்லால் அறியாது நானதஞ்சுவன் என்வசமன்று*
மூர்க்குப் பேசுகின் றானிவனென்று முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா! கருளக் கொடியானே.        1
 
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையனே!*
பிழைப்பராகிலும் தம்மடியார்சொல் பொறுப்பது பெரியோர் கடனன்றே*
விழிக்கும் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால் வேறொருவ ரோடுஎன் மனம்பற்றாது
உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந்தானே.      2

நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா! என்பன்*
வன்மையாவது உன்கோயிலில் வாழும் வைட்டணவ னென்னும் வன்மை கண்டாயே. 3

நெடுமையால் உலகேழு மளந்தாய்! நின்மலா! நெடியாய்! அடியேனைக்*
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறைசோறு இவைவேண்டுவ தில்லை*
அடிமை யென்னுமக் கோயின் மையாலே அங்கங்கே அவைபோதரும் கண்டாய்*
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை கோத்தவன் தளைகோள் விடுத்தானே!   4

தோட்டம் இல்லவள்ஆத் தொழுஓடை துடவையும் கிணறும் இவையெல்லாம்*
வாட்டமின்றி உன்பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*
நாட்டு மானிடத் தோடுஎனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன்றாகி*
கோட்டுமண் கொண்ட கொள்கையினானே! குஞ்சரம் வீழக்கொம் பொசித்தானே!    5

கண்ணா! நான்முகனைப்படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன்நான்*
உண்ணாநாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோநாரணா வென்று*
எண்ணா நாளும் இருக்கெச் சாம வேதநாண் மலர்கொண்டு உன்பாதம்
நண்ணாநாள்*அவை தத்துறு மாகில் அன்றுஎனக்கு அவைபட்டினி நாளே.       6

வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை மெத்தையாக விரித்து* அதன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசை யினாலே*
உள்ளம் சோரஉகந் தெதிர்விம்மி உரோம கூபங்களாய்* கண்ணநீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான்உன்னைத் தத்துறுமாறே.   7

வண்ணமால் வரையே குடையாக மாரி காத்தவனே! மதுசூதா!*
கண்ணனே! கரிகோள் விடுத்தானே! காரணா! களிறட்ட பிரானே!*
எண்ணுவாரிடரைக் களைவானே! ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!*
நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே!    8

நம்பனே!நவின்றேத்த வல்லார்கள் நாதனே! நரசிங்கமதானாய்!*
உம்பர் கோனுல கேழும் அளந்தாய் ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*
கம்பமாகரி கோள்விடுத்தானே! காரணா! கடலைக் கடைந்தானே!*
எம்பிரான்!என்னை யாளுடைத்தேனே! ஏழையேனிடரைக் களையாயே.        9

காமர்தாதை கருதலர் சிங்கம் காணவினிய கருங்குழல் குட்டன்*
வாமனன் என்மரகத வண்ணன் மாதவன் மதுசூதனன் தன்னை*
சேமநன்கமரும் புதுவையர்கோன் விட்டுசித்தன் வியன்தமிழ் பத்தும்*
நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே.        10

       பெரியாழ்வார் திருவடிகளே சரணம்