10-வது திருமொழி - நெறிந்தகருங்குழல்
Appearance
|
--வெ.ராமன் 09:02, 18 ஏப்ரில் 2006 (UTC)
இலங்கைக்கு தூது சென்ற திருவடி சீதாபிராட்டியைக் கண்டு சக்கரவர்த்தித் திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழி கொடுத்துக் களிப்பித்தல் கலிவிருத்தம் நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்* செறிந்த மணிமுடிச் சனகன் சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது அறிந்து* அரசுகளை கட்ட அருந்தவத்தோன் இடைவிலங்க* செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம். 1 அல்லியம் பூமலர்க் கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்* சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண்மடமானே!* எல்லியம் போதினிதிருத்தல் இருந்ததோரிட வகையில்* மல்லிகை மாமாலை கொண்டுஅங்கு ஆர்த்ததும் ஓரடையாளம். 2 கலக்கிய மாமனத் தனளாய்க் கைகேசி வரம்வேண்ட* மலக்கிய மாமனத் தனனாய் மன்னவனு மறாதொழிய* குலக்குமரா! காடுறையப்போ என்றுவிடை கொடுப்ப* இலக்குமணன் தன்னொடும் அங்குஏகியது ஓரடையாளம் 3 வாரணிந்த முலைமடவாய்! வைதேவீ! விண்ணப்பம்* தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்* கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்* சீரணிந்த தோழமை கொண்டதும் ஓரடையாளம். 4 மானமருமெல்நோக்கி! வைதேவீ ! விண்ணப்பம்* கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து* தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூடத்து இருப்ப* பால்மொழியாய்! பரதநம்பி பணிந்ததும் ஓரடையாளம். 5 சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட* அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி* வித்தகனே! இராமாவோ! நின்னபயம் என்றுஅழைப்ப* அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓரடையாளம். 6 மின்னொத்த நுண்ணிடையாய்! மெய்யடியேன் விண்ணப்பம்* பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட* நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான்ஏக* பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம். 7 மைத்தகு மாமலர்க் குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்* ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட* அத்தகுசீர் அயோத்தியர்கோன் அடையாளமிவை மொழிந்தான்* இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே. 8 திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்* மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு* ஒக்குமால் அடையாளம் அனுமான்! என்றுஉச்சிமேல் வைத்துக் கொண்டு* உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே. 9 வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு* சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்* பாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார்* ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே. 10 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்