2-வது திருமொழி - அஞ்சணவண்ணனை
Appearance
--வெ.ராமன் 09:30, 20 பெப்ரவரி 2006 (UTC)
கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் கரைந்திரங்கி யிசைத்தல்
[தொகு]கலிநிலைத்துறை அஞ்சன வண்ணனை ஆயர்குலக் கொழுந்தினை* மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே* கஞ்சனைக் காய்ந்த கழலடிநோவக் கன்றின்பின்* என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (1) பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில்* சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே* கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின்பின்* எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.(2) நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்* பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே* கன்மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின்பின்* என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே. (3) வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிடப்* பண்ணிப் பலசெய்து இப்பாடி யெங்கும் திரியாமே* கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின்பின்* எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே. (4) அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்* கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே* எவ்வம் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின்* தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே. (5) மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்* படிறு பலசெய்து இப்பாடி யெங்கும் திரியாமே* கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின்பின்* இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (6) வள்ளி நுடங்கிடை மாதர் வந்துஅலர் தூற்றிட* துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே* கள்ளி யுணங்குவெங் கானதரிடைக் கன்றின்பின்* புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே. (7) பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால்* என்இளங் கொங்கை அமுதமூட்டி யெடுத்துயான்* பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின்* என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே. (8) குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனைநான்* உடையும் கடியன ஊன்றுவெம் பரற்களுடை* கடியவெங் கானிடைக் காலடிநோவக் கன்றின்பின்* கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (9) என்றும் எனக்கு இனியானை என்மணி வண்ணனை* கன்றின்பின் போக்கினேனென்று அசோதை கழறிய* பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட்டன்சொல்* இன்தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே. (10) பெரியாழ்வார் திருவடிகளே சரணம்