2-வது திருமொழி - நெய்க்குடத்தை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
--வெ.ராமன் 08:44, 2 ஜூன் 2006 (UTC)

தம்மிடத்து எம்பெருமான் விரும்பிப் புகுந்ததனால் நோய்களை
     அகலும்படி ஆழ்வார் கூறுதல்.

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து* எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!காலம்பெற உய்யப் போமின்*
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்*
பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.    1

சித்திரகுத்த னெழுத்தால் தென்புலக் கோன்பொறி யொற்றி*
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்*
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்*
பத்தர்க்க முதன்அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே.         2

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கி*
கயிற்றும் அக்காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி*
எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து* என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.    3

மங்கிய வல்வினை நோய்காள்!உமக்கும் ஓர்வல்வினை கண்டீர்*
இங்குப் புகேன்மின்பு கேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்*
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்*
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.      4

மாணிக் குறளுரு வாய மாயனை என்மனத் துள்ளே*
பேணிக்கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி*
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்க ளுள்ளீர்!*
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.        5

உற்ற வுறுபிணி நோய்காள்!உமக்குஒன்றுசொல்லுகேன் கேண்மின்*
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்*
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினைகாள்! உமக்கு இங்குஓர்
பற்றில்லை கண்டீர் நடமின்* பண்டன்று பட்டினம் காப்பே.       6

கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி*
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்துழல் வேனை*
வங்கக்கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி*
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே.      7

ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து* என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து*
போதில் கமலவன் னெஞ்சம் புகுந்தும் என்சென்னித் திடரில்*
பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே.       8

உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே!சங்கே!*
அறவெறி நாந்தக வாளே!அழகிய சார்ங்கமே! தண்டே!*
இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள்!*
பறவையரையா! உறகல் பள்ளி யறைக் குறிக்கோண்மின்.       9

அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்*
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து*
பரவைத் திரைபல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை*
பரவு கின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவற் பொருட்டே.       10

   	பெரியாழ்வார் திருவடிகளே சரணம்