3-வது திருமொழி - துக்கச்சுழலை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
--வெ.ராமன் 08:05, 4 ஜூன் 2006 (UTC)

 ஆழ்வார் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை
      போகவொட்டேனென்று தடுத்தல்

		கலிநிலைத்துறை

சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப்பறித்து*
புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப்போக விடுவதுண்டே?*
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்தன் வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்! திருமாலிருஞ் சோலை யெந்தாய்!        1

வளைத்து வைத்தேன் இனிப்போக லொட்டேன் உந்தனிந்திர ஞாலங்களால்*
ஒளித்திடில் நின்திரு வாணை கண்டாய்நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று*
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திருமாலிருஞ் சோலை யெந்தாய்!  	2

உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடையோன் இனிப்போய் ஒருவன் 
தனக்குப் பணிந்து*கடைத்தலை நிற்கை நின்சாயை யழிவு கண்டாய்*
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்க வென்று*
இனக்குறவர் புதிய துண்ணும்எழில் திருமாலிருஞ் சோலை யெந்தாய்! 		3

காதம் பலவும் திரிந்துழன் றேற்கு அங்கோர் நிழலில்லை நீரில்லை* உன்
பாத நிழலல்லால் மற்றோ ருயிர்ப்பிடம் நான்எங்கும் காண்கின்றிலேன்*
தூது சென்றாய்! குருபாண்டவர்க்காய் அங்கோர் பொய்சுற்றம் பேசிச்சென்று*
பேதஞ் செய்து எங்கும் பிணம்படைத்தாய்! திருமாலிருஞ் சோலை யெந்தாய்!    4

காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல்சோர்ந்து நடுங்கி*குரல்
மேலுமெழா மயிர்க் கூச்சுமறா எனதோள்களும் வீழ்வொழியா*
மாலுகளா நிற்கும் என்மனனே! உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்*
சேலுகளா நிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலை யெந்தாய்! 		 5

எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும்* மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை*
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மறுபிறவி தவிரத்
திருத்தி*உன் கோயிற் கடைப்புகப்பெய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்! 	     6

அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால்*
இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சலென்று கைகவியாய்*
சக்கரமும் தடக்கைகளும் கண்களும்பீதகவாடை யொடும்*
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்! திருமாலிருஞ் சோலை யெந்தாய்! 		  7

எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளை யென்றே*
இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் இனிஉன்னைப் போக லொட்டேன்*
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்!*
சித்தம்நின் பாலதறிதி யன்றே திருமாலிருஞ் சோலை யெந்தாய்! 		 8

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்*
இன்று வந்துஇங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப்போக விடுவதுண்டே?*
சென்றங்கு வாணனை ஆயிரந்தோளும் திருச்சக்கர மதனால்*
தென்றித் திசைதிசை வீழச்செற்றாய்! திருமாலிருஞ் சோலை யெந்தாய்! 		9

சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திருமாலிருஞ்சோலை தன்னுள்*
நின்றபிரான் அடிமேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்*
பொன்திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன்*
ஒன்றி னோடொன்பதும் பாடவல்லார் உலகமளந்தான் தமரே. 		  10

	பெரியாழ்வார் திருவடிகளே சரணம்