நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/5ம் திருமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:12, 4 ஜூலை 2006 (UTC)

              வித்துவக்கோட்டம்மான்

                தரவு கொச்சகக் கலிப்பா

தருதுயரம் தடாயேல்உன் சரணல்லால் சரணில்லை*
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே!*
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும்* மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே. 	     1

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்*
கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்போல்*
விண்டோய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா!*நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே. 		   2

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மா!*என்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்*
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும்* தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே. 			3

வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்*
மாளாத காதல்நோ யாளன்போல்* மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மா!*நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே. 		      4

வெங்கண்திண் களிறடர்த்தாய்! விற்றுவக்கோட் டம்மானே!*
எங்குப்போய் உய்கேன்உன்  னிணையடியே அடையலல்லால்*
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்*
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே. 	      5

செந்தழலே வந்தழலைச் செய்திடினும்* செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்*
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!*உன்
அந்தமில்சீர்க் கல்லால் அகங்குழைய மாட்டேனே		 6

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்*
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்*
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!*என்
சித்தம்மிக வுன்போலே வைப்பன் அடியேனே. 		       7

தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி* தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்*
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா!*உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே!   	     8

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே* தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்*
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மா!*
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே. 		       9

விற்றுவக்கோட் டம்மா!நீ வேண்டாயே யாயிடினும்*
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த*
கொற்றவேல் தானைக் குலசே கரன்சொன்ன*
நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே.                   10

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்