6-வது திருமொழி - வேலிக்கோல்
தோற்றம்
--வெ.ராமன் 07:38, 9 பெப்ரவரி 2006 (UTC)
கோல்கொண்டுவர விளம்புதல்
[தொகு]கலித்தாழிசை
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி*
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு*
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு*
காலிப்பின் போவாற்குஓர் கோல்கொண்டுவா
கடல்நிற வண்ணற்குஓர் கோல்கொண்டுவா. (1)
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க* நல்
அங்கமுடையதோர் கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. (2)
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்*
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்*
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி*
சிறுக்கன்று மேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. (3)
ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன்*
துன்று முடியான் துரியோதனன் பக்கல்*
சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு*
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா
கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா. (4)
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்*
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்*
பாரொன்றிப் பாரதம் கைசெய்து* பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்குஓர் கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. (5)
ஆலத் திலையான் அரவினணை மேலான்*
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த*
கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா
குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா. (6)
பொன்திகழ் சித்திர கூடப் பொருப்பினில்*
உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்ட* அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து* உன்னை
மற்றைக் கண்கொள்ளாமே கோல்கொண்டுவா
மணிவண்ண நம்பிக்குஓர் கோல்கொண்டுவா. (7)
மின்னிடைச் சீதை பொருட்டா* இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ*
தன்னிக ரொன்றில்லாச் சிலைகால் வளைத்திட்ட*
மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா. (8)
தென்னிலங்கை மன்னன் சிரம்தோள் துணிசெய்து*
மின்னிலங்குபூண் விபீடண நம்பிக்கு*
என்னிலங்கு நாமத் தளவும் அரசென்ற*
மின்னலங்காரற்குஓர் கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர் கோல்கொண்டுவா. (9)
தரவு கொச்சகக்கலிப்பா
அக்காக்காய்!நம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று* மிக்கா ளுரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்* ஒக்க வுரைத்த தமிழ்ப் பத்தும் வல்லவர்* மக்களைப் பெற்று மகிழ்வர் இவ்வையத்தே. (10)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்