உள்ளடக்கத்துக்குச் செல்

7-வது திருமொழி - ஆநிரை

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:07, 10 பெப்ரவரி 2006 (UTC)

பூச்சூட்டல்

[தொகு]
     அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஆனிரை மேய்க்கநீ போதி அருமருந் தாவ தறியாய்*
கானக மெல்லாம் திரிந்து உன்கரிய திருமேனி வாட*
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப*
தேனி லினிய பிரானே! செண்பகப்பூச் சூட்ட வாராய்.               (1)
கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக்கண் டாலொக்கும் கண்கள்*
உருவுடையாய்!உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்!*
திருவுடையாள் மணவாளா! திருவரங்கத்தே கிடந்தாய்!*
மருவிமணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச் சூட்ட வாராய்.             (2)
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு*
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி*
நிச்சலும் தீமைகள் செய்வாய்!நீள்திருவேங் கடத்து எந்தாய்!*
பச்சைத் தமனகத் தோடு பாதிரிப்பூச் சூட்ட வாராய்.                (3)
தெருவின்கன் நின்று இளவாய்ச்சி மார்களைத் தீமை செய்யாதே*
மருவும் தமனகமும்சீர் மாலைமணம் கமழ்கின்ற*
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே*
உருவ மழகிய நம்பீ! உகந்திவை சூட்ட நீவாராய்.                 (4)
புள்ளினை வாய்பிளந் திட்டாய்!பொருகரியின் கொம்பொசித்தாய்!*
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலைகொண்டாய்!*
அள்ளிநீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்*
தெள்ளிய நீரிலெழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய்.                 (5)
எருதுகளோடு பொருதி ஏதும்உலோபாய்கான் நம்பி!* 
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு*
பொருது வருகின்ற பொன்னே!புன்னைப்பூச் சூட்ட வாராய்.         (6)
குடங்களெடுத் தேற விட்டுக் கூத்தாட வல்ல எம்கோவே!*
மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்ல என்மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம்கோவே! குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.      (7)
சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்!*
சாமாறு அவனை நீயெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்!* 
ஆமா றறியும் பிரானே!அணிய ரங்கத்தே கிடந்தாய்!*
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்! இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்    (8)
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்!*
தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய்!தூமலராள் மணவாளா!*
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில்கொண்டாய்!*
கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப்பூச் சூட்ட வாராய்.         (9)
செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி*
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்ட வாவென்று*
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை*
பண்பகர் வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே.        (10)
            பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=7-வது_திருமொழி_-_ஆநிரை&oldid=3234" இலிருந்து மீள்விக்கப்பட்டது