9-வது திருமொழி - என்னாதன்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

--வெ.ராமன் 08:33, 17 ஏப்ரில் 2006 (UTC)

  கிருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணங்களை
  இரண்டு கோபியர் எதிரெதிராகக் கூறி உந்திபறித்தல் 
 
       கலித்தாழிசை

என்னாதன் தேவிக்குஅன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்* நாதன் காணவே தண்பூ மரத்தினை*
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட*
என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.   1

என்வில் வலிகண்டு போவென்று எதிர்வந்தான்
தன்* வில்லி னோடும் தவத்தை எதிர்வாங்கி*
முன்வில் வலித்து முதுபெண்ணு யிருண்டான்
தன்* வில்லின் வன்மையைப் பாடிப்பற தாசரதி தன்மையைப் படிப்பற.  2

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு*
விருப்புற் றங்கேக விரைந்து எதிர்வந்து*
செருக்குற்றான் வீரம் சிதைய* தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.  3

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட* 
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்றுஅழ*
கூற்றுத்தாய் சொல்லக் கொடியவனம் போன*
சீற்ற மிலாதானைப் பாடிப்பற சீதைமணாளனைப் பாடிப்பற.       4

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நல்பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சனவண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.   5

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு* உன்
அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த*
படியில் குணத்துப் பரதநம்பிக்கு* அன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.  6

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு* அவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து*
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்*
தோள்வலி வீரமே பாடிப்பற தூமணி வண்ணனைப் பாடிப்பற.      7

தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து* தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டு போகி* நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு* அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற.     8

மாயச் சகட முதைத்து மருதிறுத்து*
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்து*அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற*
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.    9

காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு*
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்*
நேரா அவன்தம்பிக்கே நீளரசீந்த*
ஆரா வமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.    10

      தரவு கொச்சகக்கலிப்பா

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று*
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்*
செந்தமிழ்த் தென்புதுவை விட்டு சித்தன்சொல்*
ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே.          11

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்