9-வது திருமொழி - மாவடியை

விக்கிநூல்கள் இலிருந்து
--வெ.ராமன் 10:16, 10 மே 2006 (UTC)

                திருவரங்கம் 

        அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழ*
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில்*
திருவடிதன் திருவுருவும்  திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்று*
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளியரங்கமே.           1
 
தன்னடியார் திறத்தகத்துத் தாமரை யாளாகிலும் சிதகுரைக்குமேல்*
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்*
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண்வைத்த*
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவரே?        2

கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும்*
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டுஓசை கேட்டான்*
இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி*
அருள்கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான மருமூர் அணியரங்கமே. 3

பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய* துவரை யென்னும்
அதில்நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்*
புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான்*
பொதுநாயகம் பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.       4

ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*
சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்*
பூமருவிப் புள்ளினங்கள்  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.        5

மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி*
உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட உயிராளன் உறையும் கோயில்*
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்*
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.  6

குறட்பிரமசாரியாய்  மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி*
இறைப்பொழிதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்*
எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின்வாய்*
சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே 7

உரம்பற்றி இரணியனை உகிர்நுதியால் ஒள்ளியமார் புறைக்க வூன்றி*
சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க வாயலரத் தெழித்தான் கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடிபோல் உயர்ந்து காட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே  8

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவின் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பாங் கோயில்*
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி*
பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.  9

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செய்யும் நாந்தக மென்னும்
ஒருவாளன்* மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன்*
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழுலகப் பெரும்புரவாளன்*
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.          10

கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில்*
தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்பதியின்மேல்*
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழுரைக்க வல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணைபிரியாது இருப்பர்தாமே. 11

     பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=9-வது_திருமொழி_-_மாவடியை&oldid=3429" இலிருந்து மீள்விக்கப்பட்டது