2-வது திருமொழி - அரவணையாய்

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:43, 3 பெப்ரவரி 2006 (UTC)

முலையுண்ணல்[தொகு]

                    கலிவிருத்தம்
அரவணையாய் ! ஆயரேறே ! அம்மமுண்ணத் துயிலெழாயே*
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ*
வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய*
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே.               (1)
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்*
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்! நீபிறந்தபின்னை*
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே*
முத்தனைய முறுவல்செய்து மூக்குறிஞ்சி முலையுணாயே.               (2)
தந்தம்மக்கள் அழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்கில்லார்*
வந்துநின்மேல் பூசல்செய்ய வாழவல்ல வாசுதேவா!*
உந்தையார்உன் திறத்தரல்லர் உனனைநானொன் றுரப்பமாட்டேன்*
நந்தகோப னணிசிறுவா! நான்சுரந்த முலையுணாயே.                     (3)
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய*
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று*
அஞ்சினேன்காண் அமரர்கோவே! ஆயர்கூட்டத் தளவன்றாலோ*
கஞ்சனைஉன் வன்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே .          (4)
தீயபுந்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து*
மாயந்தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர்வாய்ச்சொல் கருமம்கண்டாய்  சாற்றிச்சொன்னேன் போகவேண்டா*
ஆயர்பாடிக்கணி விளக்கே! அமர்ந்துவந்துஎன் முலையுணாயே.        	(5)
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு*
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்!* உன்னைக்கண்டார்
என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிருடையாள்!*
என்னும்வார்த்தை யெய்துவித்த இருடிகேசா!முலையுணாயே.               (6)
பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாரைர் பெறுதுமென்னும் ஆசையாலே*
கண்டவர்கள் போக்கிழந்தார் கணணிணையால் கலக்கநோக்கி*
வண்டுலாம் பூங்குழலினார் உன்வாயமுதம் உண்ணவேண்டி*
கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தா! நீமுலையுணாயே.         (7)
இருமலைபோல் எதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்!* உன்
திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்து என்னல்குலேறி*
ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு*
இருமுலையும் முறைமுறையா ஏஙகிஏங்கி இருந்துணாயே.           (8)
அங்கபலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்*
செங்கமல முகம்வியர்ப்ப தீமைசெயது இம்முற்றத்தூடே*
அங்கமெல்லாம் புழுதியாக அலையவேண்டாம் அம்ம?* விம்ம
அங்கமார்க் கமுதளித்த அமரர்கோவே! முலையுணாயே.       	(9)
ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்குமோசைப் பாணியாலே*
பாடிப்பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்றிருந்தேன்*
ஆடிஆடி அசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி*
ஓடியோடிப் போய்விடாதே உத்தமா! நீமுலையுணாயே .       	(10)
வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவா! உண்ணென்ற மாற்றம்*
நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர்*
பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார்*
சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவர்தாமே.	 (11)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

"https://ta.wikibooks.org/w/index.php?title=2-வது_திருமொழி_-_அரவணையாய்&oldid=3148" இலிருந்து மீள்விக்கப்பட்டது