2-வது திருமொழி - அலம்பாவெருட்டா
Appearance
--வெ.ராமன் 08:22, 22 ஏப்ரில் 2006 (UTC)
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு கலிநிலைத்துறை அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை* குலம்பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன்மலை* சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும்சீர்* சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே. 1 வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும்* தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும்மலை* எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி* செல்லா நிற்கும்சீர்த் தென்திரு மாலிருஞ்சோலையே. 2 தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை* தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை* எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை* அக்கா னெறியை மாற்றும் தண்திரு மாலிருஞ் சோலையே. 3 ஆனாயர் கூடி அமைத்த விழவை* அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான்மலை* வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி* தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே. 4 ஒருவாரணம் பணிகொண்டவன் பொய்கையில்* கஞ்சன்தன் ஒருவாரணம் உயிருண்டவன் சென்றுறையும்மலை* கருவாரணம் தன்பிடி துறந்தோட* கடல்வண்ணன் திருவாணை கூறத் திரியும் தண்திரு மாலிருஞ் சோலையே. 5 ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை* சாவத் தகர்த்த சாந்தணிதோள் சதுரன்மலை* ஆவத் தனமென்று அமரர்களும் நன்முனிவரும்* சேவித் திருக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே. 6 மன்னர் மறுக மைத்துனன் மார்க்குஒரு தேரின்மேல்* முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன்மலை* கொன்னவில் கூர்வேற்கோன் நெடுமாறன் தென்கூடற்கோன்* தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே. 7 குறுகாத மன்னரைக் கூடுகலக்கி* வெங்கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை* அறுகால்வரி வண்டுகள் ஆயிரநாமம் சொல்லி* சிறுகாலைப் பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே. 8 சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு* பூதங்கள் அந்திப் பலிகொடுத்து ஆவத்தனம்செய் அப்பன்மலை* இந்திர கோபங்கள் எம்பெருமான்கனி வாயொப்பான்* சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே. 9 எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந்தேவிமார்* விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை* பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று* மாலைவாய்த் தெட்டித் திளைக்கும் தென்திரு மாலிருஞ்சோலையே. 10 மருதப் பொழிலணி மாலிருஞ்சோலை மலைதன்னை* கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம்மான் தன்னை* விரதம் கொண்டேத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே. 11 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்