உள்ளடக்கத்துக்குச் செல்

4-வது திருமொழி - நாவகாரியம்

விக்கிநூல்கள் இலிருந்து
--வெ.ராமன் 10:27, 24 ஏப்ரில் 2006 (UTC)

  முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக்
கொண்டாடியும்,அவ்வாறு அனுபவியாதவரை இழித்தும் கூறுதல்

       எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நாவ காரியம் சொல்லி லாதவர் நாள்தொறும் விருந்தோம்புவார்*
தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ்திருக்கோட்டியூர்*
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத* அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான்கொலோ!      1

குற்ற மின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய்*
செற்ற மொன்று மிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
துற்றி யேழுலகுண்ட தூமணி வண்ணன் தன்னைத் தொழாதவர்*
பெற்றதாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தார்களே.    2

வண்ணநல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள்*
எண்ணக் கண்டவிரல்களால் இறைப்பொழுதும் எண்ணகிலாதுபோய்*
உண்ணக் கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே.     3

உரகமெல்லணையான் கையில் உறைசங்கம்போல் மடவன்னங்கள்*
நிரைகணம் பரந்தேறும் செங்கமலவயல் திருக்கோட்டியூர்*
நரகநாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர்*
பருகுநீரும் உடுக்குங் கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ!      4

ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர்சாடிப்போய்*
தீமைசெய்து இளவாளைகள் விளையாடு நீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலா வலிநெஞ்சுடை*
பூமிபாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே.  5

பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்*
ஏதமொன்று மிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய*
பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.               6

குருந்த மொன்றொ சித்தானொடும் சென்று கூடியாடி விழாச்செய்து*
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்திவாழ் திருக்கோட்டியூர்*
கருந்தட முகில்வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்*
இருந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ!       7

நளிர்ந்தசீலன் நயாசலன் அபிமனதுங்கனை* நாள்தொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்*
விளைந்த தானியமும் இராக்கதர்மீது கொள்ளகிலார்களே.            8

கொம்பினார் பொழில்வாய் குயிலினம் கோவிந்தன் குணம்பாடுசீர்*
செம்பொனார் மதிள்சூழ் செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர்*
நம்பனை நரசிங்கனை நவின்றேத்துவார்களைக் கண்டக்கால்*
எம்பிரான்தன சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே.        9

காசின்வாய்க் கரம்விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு*
தேசவார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
கேசவா!புருடோத்தமா!கிளர்சோதியாய்! குறளா! என்று*
பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.         10

சீதநீர் புடைசூழ் செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர்*
ஆதியா னடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்*
கோதில் பட்டர்பிரான் குளிர்புதுவைமன் விட்டுசித்தன்சொல்*
ஏதமின்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே.                   11

     பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=4-வது_திருமொழி_-_நாவகாரியம்&oldid=3408" இலிருந்து மீள்விக்கப்பட்டது