இனியவை கூறல்

விக்கிநூல்கள் இலிருந்து

« முன் பக்கம்: விருந்தோம்பல் | திருக்குறள் » இல்லறவியல் » இனியவை கூறல் | அடுத்த பக்கம்: செய்ந்நன்றி அறிதல் »


91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
  • ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
  • முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் ஒடுப்பதை விட மேலான பண்பாகும்.
93. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
  • முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.
94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாக்கும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
  • இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கணிவுடன் பழகுவோர்க்கு 'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
  • அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிற்ந்த அணிகலன் வேறு இறுக்க முடியாது.
96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
  • தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
97. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
  • நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
  • சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒறுவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தர்க்கூடியதாகும்.
99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
  • இனிய சொற்க்ள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக் எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
  • இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.


« முன் பக்கம்: விருந்தோம்பல் | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: செய்ந்நன்றி அறிதல் »

"https://ta.wikibooks.org/w/index.php?title=இனியவை_கூறல்&oldid=4208" இலிருந்து மீள்விக்கப்பட்டது