செய்ந்நன்றி அறிதல்

விக்கிநூல்கள் இலிருந்து

« முன் பக்கம்: இனியவை கூறல் | இல்லறவியல் | அடுத்த பக்கம்: நடுவுநிலைமை »


101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
  • தானாக முன் வந்து செய்யும் உதவிக்கு ஈடான செயல் இரு உலகங்களிலும் அரிது.
102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
  • தக்க நேரத்தில் செய்த உதவி சிறிதென்றாலும், உலகில் பெரியதாகவே கொள்ளப் படும்
103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
  • பயன் கருதாது ஒருவர் செய்த உதவி, கடலை விடப் பெரியது.
104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
  • சிறிய உதவியைக் கூட அதன் நன்மையை கருத்தில் கொண்டு பெரிதாக கருதுவர் பயன் அறிந்தவர்.
105. உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
  • உதவி என்பது உதவியின் தன்மையை பொறுத்து அல்ல, உதவி பெற்றவரின் தன்மையைப் பொறுத்தது
106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க'
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
  • நல்லவர் நட்பை மறக்கக் கூடாது. துன்பத்தில் தோள் கொடுத்தோர் நட்பை துறக்கக் கூடாது
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
  • தாங்கள் தாழ்வுற்று இருந்த போது தாங்கிய நண்பரை ஏழேழு பிறப்பிலும் மறக்கக் கூடாது.
108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
  • ஒருவர் செய்த உதவியை மறப்பது நற்பண்பல்ல. ஆனால் நல்லது அல்லாதவைகளை அன்றே மறத்தல் நல்லது.
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
  • கொலைக்கு ஒப்பான தீமை செய்தாலும், அவர் செய்த நன்மைதான் நினைவில் கொள்ளப் படும்.
110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
  • எத்தகைய நல்ல செயல்களை மறந்தாலும், தனக்கு உதவியவரை மறந்தவர்களுக்கு செழிப்பு சேராது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=செய்ந்நன்றி_அறிதல்&oldid=5427" இலிருந்து மீள்விக்கப்பட்டது