நிரலாக்குநர் அல்லாதவருக்கான பைத்தன் 2.7 பயிற்சி/நூன்முகம்
இப்பயிற்சிநூலிலுள்ள அனைத்துப் பைத்தன் (Python) மூலநிரல்களும் பொது உரிமைப் பரப்புக்கு விடப்படுகின்றன. எனவே, நீங்கள் அவற்றை மாற்றியமைத்து, விரும்பும் உரிமத்தின்கீழ் வழங்கமுடியும். குனூ (GNU) கட்டற்ற ஆவண உரிமத்தின்படி, நீங்கள் நிரலாக்கம் கற்க இருப்பதால், இந்நூலிலுள்ள மூலநிரல்களைப் பயன்படுத்திப் பெறப்படும் அனைத்துச் செய்நிரல்களும் அவ்வுரிமத்தின்கீழேயே வழங்கப்படவேண்டும். ஆயினும், பைத்தன் மூலநிரல்கள் பொது உரிமைப் பரப்புக்கு விடப்பட்டுள்ளதால், இக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.
இந்நூலானது, ஆங்கில விக்கிநூல்களில் பைத்தன் 2.6இற்காக எழுதப்பட்ட Non-Programmer's Tutorial for Python 2.6 நூலைப் பெருமளவு ஒட்டி, பைத்தன் 2.7இற்கேற்ற வகையில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டது. Non-Programmer's Tutorial for Python 2.6 பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
முதலில் இலாட்டெக்கில் (LaTeX) எழுதப்பட்ட இந்நூலானது www.honors.montana.edu/~jjc/easytut என்ற வலைமுகவரியில் கிடைக்கப்பெற்றது. இதற்கான வழங்கி நிறுத்தப்படவிருந்ததாலும் ஒரு நாளுக்குக் குறைந்தது பத்துத் தடவைகளாவது வாசிக்கப்பட்டதாலும் இந்நூல் ஆங்கில விக்கிநூல்களுக்கு நகர்த்தப்பட்டது. இவ்வாவணமானது இலாட்டெக்கு, மீப்பாடக் குறிமொழி (HTML), கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF), போசுற்றுக்கிறிட்டு (PostScript) ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றது. இவ்வடிவங்கள் அனைத்தையும் பெற, jjc.freeshell.org/easytut என்ற வலைமுகவரியையோ web.archive.org/web/*/http://www.honors.montana.edu/~jjc/easytut என்ற வலைமுகவரியையோ நாடுங்கள். தார்க் (tar) கோப்பில் கொரிய, எசுப்பானிய, இத்தாலிய, கிரேக்க மொழிப் பதிப்புகளும் உள்ளன.
நிரலாக்குநர் அல்லாதவருக்கான பைத்தன் 2.7 பயிற்சி என்பது பைத்தன் நிரலாக்கமொழிக்கான ஓர் அறிமுகமாகும். இவ்வழிகாட்டியானது எந்தவொரு நிரலாக்க வினையறிவும் இல்லாதவர்களைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்டுள்ளது.
உங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் உரையாடற்பக்கங்களில் பதிந்துகொள்ளலாம்.
ஏனைய வளங்கள்
[தொகு]- பைத்தன் முகப்புப்பக்கம்
- பைத்தன் ஆவணப்படுத்தல்
- பைத்தன் 2.7 பயிற்சி
- இலாட்டெக்கு, கையடக்க ஆவண வடிவமைப்பு, போசுற்றுக்கிறிட்டு, சிப்புப் (ZIP) பதிப்புகள்
இன்னுஞ்சில விவரங்களுக்கு நிறைவுரையை வாசியுங்கள்.