பிடித்த பத்து/உரை 25-28
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் :
பாசவேர் அறுக்கும் - பற்றுகளின் வேரைக் களைகின்ற, பழம்பொருள் தன்னை - பழமையான பொருளை, பற்றும் ஆறு - பற்றிக்கொள்கின்ற வழியை, அடியனேற்கு அருளி - அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, பூசனை உகந்து - எனது வழிபாட்டினை விரும்பி, என் சிந்தையுள் புகுந்து - என் சித்தத்துள் புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே, தேசு உடை விளக்கே - ஒளியையுடைய விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தி - விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, ஈசனே - இறைவனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
விளக்கம் :
உலகப் பற்றை நீக்குவதற்கு இறைவனது பற்றைக் கொள்ள வேண்டுமாதலின், அதனை இறைவன் தமக்கு நல்கியருளினான் என்பார், 'பாசவேரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற்கருளி' என்றார். மெய்ப்பற்றினைப் பற்றிக்கொண்ட பின்னர்ச் சித்தத்திலே தௌ¤வு உண்டாயிற்று என்பதை, 'சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே' என்பதால் உணர்த்தினார். தௌ¤வு உண்டாகிய பின்பு விளங்கிய இறைவனது சொரூப நிலையை, 'தேசுடை விளக்கே' என்றும், தடத்த நிலையை, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றும் கூறினார்.
இதனால், இறைவன், பற்றினை நீக்கி ஞானத்தினை நல்குவான் என்பது கூறப்பட்டது.